கட்டுரையின் முதல் பாகத்தின் தொடர்ச்சி…
புலஸ்தினி ராஜாத்தினத்தின் குண்டு வெடிப்புடனான தொடர்புகளும், அவர் இந்திய உளவுப் படையான “றோ” வின் முகவர் என்பதும். குண்டுவெடிப்பின் பின் எவ்வித சேதாரமுமின்றி “றோ” வின் உதவியுடனேயே மன்னாரினூடாக இந்தியாவுக்கு தப்பிச் சென்று, “றோ” வின் பாதுகாப்பில் தற்போது பூரண அரச மரியாதையுடன் இந்தியாவில் அவர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியம், சர்வதேச அரங்கில், இக்குண்டுவெடிப்பின் பின்னணியையும், ஆசிய வல்லரசான இந்தி
யாவின் தொடர்புகளையும் ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.
இது தொடர்பான விரிவான கட்டு ரையை பிரபல சிங்கள எழுத்தாளர் நந்தன வீரரத்ன என்பவர் “அருண” என்ற சிங்கள வார இதழில் 09.08.2020ல் வெளியிட்டுள்ளார். அக்கட்டுரையின் தமிழாக்கம் கடந்த 14.08.2020ல் விடிவெள்ளி பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நந்தன வீரரத்னவின் கருத்துப்படி, “இந்திய உளவாளிகள் 2015 ஆம் ஆண்டிலேயே சஹ்ரான் குழுவில் புலஸ்தினியை இணைக்கச் செய்து, அவர்களை முழுமையாக நம்ப வைக்கும் அளவுக்கு முஹம்மது ஹஸ்தூன் என்பவரையும் திருமணம் செய்வதற்கு ஒத்துழைத்து, இரண்டு வருடங்கள் திருமண வாழ்வில் இணைந்திருந்த போதும், திருமண வாழ்வோ, இல்லற வாழ்வோ இடம்பெற்றதற்கான எந்த சான்றுகளும், பிள்ளைப்பேறும், இடம்பெற்றிருக்கவில்லை. இந்திய உளவுப் பிரிவின் திட்டமிடலுக்கேற்ப ஏப்ரல் 21 குண்டு தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியதன்பின், தனது உளவாளியான புலஸ்தினியை, எவ்வித அசம்பாவிதங்களுமின்றி, இந்தியாவுக்கு கூட்டி வந்து, தனது திட்டத்தை கச்சிதமாகச் செய்து முடித்துள்ளதாக “நந்தன வீரரத்ன” உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இந்திய உளவுப்படை இவ்வாறான நாசகார செயல்களில் ஈடுபட்டமை இது முதற்தடவை அல்ல என்றும், விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் சமகாலத்திலேயே ஒருவரை ஒருவர் அறியாது, வேறு வேறு இடங்களில் பயிற்சியளித்த வரலாற்றையும் நந்தன வீரரத்ன தனது கட்டுரையில் ஆதாரத்துடன் முன் வைத்துள்ளார். இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் இவ்வாறே விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் சமகாலத்தில் ஒருவரை ஒருவர் அறியாது பயிற்சியளித்தமை பிற்காலத்தில் புத்தகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இலங்கையில் நடக்கப் போகின்ற ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் பற்றி, பல எச்சரிக்கை உளவுச் செய்திகளையும், இலங்கை அரசாங்கத்துக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ஒரு சில வாரங்களுக்கு முன்பே அனுப்பியிருந்ததும் இந்திய உளவுப்படையே என்பதும் நாமறிந்த விடயமாகும்.
அவ்விடயங்கள் இவ்வாறு இருப்பது உண்மையானால், இலங்கை விடயத்தில் இந்தியாவினதும், உளவுப்படையினதும் நோக்கம் யாது? இவ்வாறு பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விட்ட செயலை ஏன் இந்தியா செய்தது? இந்தியாவின் பயங்கர திட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தை ஏன்? எவ்வாறு? பயன்படுத்திக் கொண்டது? என்பன போன்ற விடை பெற முடியாத பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
பொதுவாக இலங்கையில் சர்வதேச வல்லரசுகளின் தலையீடுகளும், நமது நலன்களுக்காக இலங்கையை முழுமையாகப் பயன்படுத்தும் இராஜதந்திர நகர்வுகளும் பல தசாப்தங்களாக நடைபெற்று வருவதை நாமறிவோம். குறிப்பாக இலங்கையில் முழுமையாக காலூன்ற சீனாவும், இந்தியாவுக்குமிடையில் பலத்த போட்டியும், பல நாசகார செயற்பாடுகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இலங்கை, ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2019 ஆம் ஆண்டு காலப்பிரிவில், தனது எதிர்பார்ப்புக்களுக்கு இடமளிக்கக் கூடிய அரசாங்கம் ஒன்றை இலங்கையில் நிறுவிக் கொள்வது இந்தியாவின் முக்கிய தேவையாக இருந்தது. அதற்கேற்றவாறு அப்போது ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதும், எதிர்த்தரப்பினரை ஆட்சிக்கு கொண்டு வருவதும் இந்தியாவுக்கு முக்கியமானதாக அமைந்திருக்கலாம்.
ஒரு நாட்டின் உளவுப்படை தனது திட்டங்களுக்கு கால, தேச, வர்த்தமானங்களுக்கு அப்பால் மிகக் கச்சிதமாக திட்டமிடும். இப்பாரிய திட்டத்திற்கு இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் சில வழிகெட்ட கூட்டத்தினரை பயன்படுத்திக் கொண்டதன் மூலம் இந்தியா இரட்டை வெற்றியைப் பெற்றுள்ளதை எதிர்கால ஆய்வுகள் நிச்சயம் நிரூபிக்கும். ஏனெனில் இந்தியாவை ஆட்சிசெய்யும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஸ்திரமே, முஸ்லிம் சமூகத்தை பூரணமாக நசுக்குவதிலேயே தங்கியிருக்கின்றது. இவ்வாறு இந்திய அரசாங்கம் அண்மைக் காலத்தில் இந்திய முஸ்லிம்களை ஐந்து நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் அடக்கி ஒடுக்கி இருந்ததை நாம் அறியலாம். அவை பின்வருமாறு
- இந்தியாவில் பாரிய அளவில் ஏற்பட்ட கொரோனா நோய்ப் பரவலின் முக்கிய சூத்திரதாரியாக முஸ்லிம் சமூகத்தை குறித்துக் காட்டியமை.
- பெப்ரவரி மாதம் நடந்த டெல்லி மதவன்முறைகளில் முஸ்லிம் சமூகத்தினர் இராணுவத்தினராலும், பெரும்பான்மையான மக்களாலும் கொ௫ரமாக தாக்கப்பட்டமை.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டமை.
- இஸ்லாமிய சிறுபான்மையினர் பற்நிய அரசாங்கத்தின் எதிர்மறையான கருத்துக்கள்.
- ஒரே நாளில் பாபர் மசூதிப் பிரச்சினைக்கு உயர் நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டு, ராமர் கோயில் கட்டப்படுகின்றமை. இவ்வாறான பல்வேறு சம்பவங்கள்
இந்திய முஸ்லிம்களுடன் மட்டுமன்றி, சர்வதேச முஸ்லிம்களுடனும் இந்தியாவுக்குள்ள வெறுப்பையும், வன்முறைகளையும் கோடிட்டுக் காட்டுகின்றன. இவ்வாறான பின்னணியிலேயே இந்திய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களையும் இலக்கு வைத்து, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை மிகக் கச்சிதமாக திட்டமிட்டதா? என்பதை வெளிக்கொணர்வது சர்வதேசத்தின் கடமையாகும். இந்தியாவின் மாய வலைக்குள் சிக்குண்டுள்ள இலங்கை அரசாங்கத்தால் இக்கேள்விக்கான விடையை இலகுவில் காணவும் முடியாது. கண்டுபிடித்தாலும் சர்வதேசத்துக்கு சொல்லவும் முடியாது. எப்படியோ இலங்கை முஸ்லிம் சமூகம் மிகக் கச்சிதமாக முழுமையாக பழிவாங்கப்பட்டுள்ளமை மட்டும் உண்மையே.
பேராசிரியர்: மௌலவி M.S.M. ஜலால்தீன் (கபூரி)