அக்குறணையிலும் கோவிட்-19 (கொரோனா) தொற்றுடைய ஒரு நோயாளி கண்டுபிடிக்கப் பட்டுள்ளார். அக்குறணையைச் சேர்ந்தவர்களும், ஏனைய அனைவரும் சற்று வாசித்து, பகிர்ந்து கொள்ளுங்கள். (தயவு செஞ்சி வாசிச்சிட்டு, செயற்படுத்துங்க!)
‘இப்ப என்ன செய்யனும்? யா ரப்பே! முடிஞ்சி’ என்று பதற்றப்படும் பலர். ‘சொன்ன தானே எல்லாருக்கும்! கேக்கல்ல இவனுகள்’ என்று ஆவேசப்படும் சிலர். பல விதமான கருத்துக்களை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். சில வார்த்தைகளை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.
~
ஆம். அக்குறணையில் கோவிட-19 தொற்றுடயை ஒரு நோயாளி இனங்காணப்பட்டுள்ளது உண்மை. யார், எங்கு என முழு அக்குறணையும் அறிந்து வைத்துள்ள இந்த நேரத்தில் நாம் சில முக்கியமான விடயங்களை நோக்க வேண்டும்.
முதலாவதாக, do not panic! பயப்படுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. கோவிட்-19 தொற்று உலகம் முழுவதும் பரவிக் கொண்டு தான் இருக்கிறது. ஐரோப்பாவில் 70% முதல் 80% வரையான மக்களுக்கு பரவக்கூடும் என எதிர்பார்க்கப் பட்டுள்ள இந்தத் தொற்றை நாம் முடிந்தளவு குறைக்க முயல வேண்டுமே தவிர, பயந்து சிதறி விடக் கூடாது. அவ்வாறே, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாவதை ஒரு பெரிய குற்றமாகவும், நோயாளியைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவது முறையல்ல. நோயைத் தவிர்க்கும்/தடுக்கும் வழிகளைத் தேடுங்கள்.
மக்கள் இத்தொற்றுக்குள்ளாகும் வேகம் குறைந்தால், வைத்தியசாலைகள் நோயாளிகளை சரியாக கவனிக்க முடியுமாக இருக்கும். பெரியளவில் ஆபத்துக்கள் ஏற்பட மாட்டா. எனவே, அதற்கான வழிமுறைகளில் நாம் ஈடுபட வேண்டும்.
ஏற்கனவே கண்காணிப்பில் உள்ளவர்களைத் தவிர, குறித்த நபருடன் கடந்த மூன்று கிழமைகளுக்குள் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் இருப்பின், தயவு செய்து நீங்கள் சுகாதார வைத்திய அதிகாரியைத் (MOH) தொடர்பு கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம். ‘புடிச்சிக் கொண்டு போவ’தற்காக விபரங்கள் கேட்கப்படவில்லை. சாதாரணமாக, கோவிட்-19 தொற்று உறுதியான நபரொருவருடன் தொடர்பில் இருந்த யாராக இருந்தாலும் அவர்கள் கண்காணிக்கப் படுவார்கள். தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். பயப்பட வேண்டிய தேவையில்லை. எனவே, அவசியம் MOH ஐத் தொடர்பு கொள்ளுங்கள். அது வரை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுங்கள்.
அக்குறணை MOH தொடர்பு இலக்கங்கள்
0714418021
0770843621
அதே போல, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அறிவித்தலில் கூறப்பட்டிருந்தது போல, தயவு கூர்ந்து தொடர்பு கொண்டு உங்களது இருப்பை உறுதிப்படுத்துங்கள். அண்மையில் கூட ஒருவர் தொலைபேசியில், ‘பொலிஸால புடிச்சின்டு போவாங்களைக்கிம், என்னா?’ என்று என்னிடம் கேட்டது நினைவிருக்கிறது. இல்லை! உங்களதும், குடும்பத்தினதும், சமூகத்தினதும் பாதுகாப்புக்காக நடைபெறும் procedure தான் இது. எனவே, தயவு கூர்ந்து அறிவித்துக் கொள்ளுங்கள். (அவ்வாறே, மார்ச் 14ம் திகதியின் பின் சென்னையிலிருந்து வந்தவர்கள் MOH ஐத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.)
தொடர்புகள்:
Kandy Police – 0812222222
Katugastota Police – 0812499222
Alawathugoda Police – 0662244322
அக்குறணையில் குறிப்பிட்ட நபரின் அருகில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த குடும்பத்தை ஒதுக்க வேண்டாம். அவரது குடும்பத்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப் படுவார்கள். நீங்கள் அவர்களை சந்திக்கச் செல்லாவிட்டாலும், அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் தவறில்லை. உணவு மற்றும் இதர தேவைகளை, தொடர்பு ஏற்படாத வகையில் அமைத்துக் கொடுக்க உதவுங்கள். அத்தோடு, நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட முறையில் இருப்பதுவும் மிக முக்கியமானது.
அக்குறணையில் சாதாரண பொதுமக்களே, இளைஞர்களே! இன்று வரை இருந்ததை விட இனி நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். Let’s get back to the basics. அடிப்படைகளை மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன்.
- Don’t gather or go out in public, in neighbourhoods: don’t do it at all! கூடியிருக்கவோ, ஊர் சுற்றவோ வேண்டாம். உங்கள் வீடுகளில் அடைந்து இருப்பதுவே நீங்கள் உலகுக்கும், நாட்டுக்கும், ஊருக்கும் செய்யும் மிகப்பெரிய சேவை.
(Specially பொடியன்மார் – தயவு செஞ்சி வீட்டுல இரிங்க டா. ஒங்கள கட்டிப் போட்டு வெக்கிறதுக்காக சொல்லல்ல. ஒங்கட safety க்காக தான் சொல்ற. வீட்டுல இருக்க சோம்பல், அது, இதுன்டு வெளிய வராம வீட்டுல இரிங்க!!)
- கைகளை அடிக்கடி சவர்க்காரம்/சானிடைஸர் போட்டு கழுவிக் கொள்ளுங்கள். (எங்க, எப்புடி தொற்று வரலாம் என்டு சொல்ல முடியாது.)
நகங்களை வெட்டி, சுத்தமாக இருந்து கொள்ளுங்கள். Watch, rings, bracelet (இன்னும் என்னென்னவோ போடுவாங்களே, எல்லாத்தையும்) இக்கால கட்டத்தில் தவிர்த்துக் கொள்வது பொருத்தம்.
- Curfew தளர்த்தப்பட மாட்டாதென்று நினைக்கிறேன். அப்படியே தளர்த்தப்பட்டாலோ, நீங்கள் கடைகளுக்கு அல்லது வேறு அவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல நேர்ந்தாலோ, ஒருவருக்கொருவர் 1 – 2 மீட்டர் இடைவெளியில் நின்று கொள்ளுங்கள். அதிகமாக, அளவளாவும் நேரங்களிலும், ‘லைன் பாஞ்சி முன்னுக்கு போற கேஸ்’களின் பயத்திலும் தான் இவ்வாறு நடக்க முடியாமல் போவது நிதர்சனம். எனவே, கவனமாக, புத்தியுள்ள சமூகமாக நடந்து கொள்வோம்.
மருத்துவ தேவைகளுக்காக வெளியில் செல்வதை, மிக மிக அத்தியாவசிய நேரங்களில் மட்டும் கைக் கொள்ளுங்கள். ‘கொஞ்சம் இருமல், லைட்டா தடுமல்’ என்று அனைத்திற்கும் வைத்தியர்களை நாட வேண்டாம். குறித்த நபர் மார்ச் 17ம் திகதி மாலை 4.30 முதல் 6.00 மணி நேரப்பகுதியில் டாக்டர் பண்டாரவை நாடியுள்ளதாக அறிகிறேன். அந்த வைத்தியரிடம் மருந்துக்கு சென்ற ஏனையோரும் இனி சுய கண்காணிப்பில் இருக்க வேண்டி வரலாம். சாதாரண மருத்துவ தேவைகளுக்காக அக்குறணை வைத்தியர்கள் பலர் தம் தொலைபேசி இலக்கங்களை வழங்கியிருந்தனர். தடங்கலின்றி நீங்கள் அவர்களை வீட்டிலிருந்து தொடர்பு கொள்ளுங்கள்.
(தொலைபேசி இலக்கங்களின் விபரங்கள் தேவையானவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். தருகிறேன்.)
- உங்கள் வீடுகளில் யாரும் காய்ச்சல், தடிமன், இருமல் என நோய் வாய்ப்பட்டால், முதலில் வைத்தியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். கோவிட்-19 ஆக இரைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு தான்! எனவே, பயப்பட வேண்டாம். அது தவிர, பாதுகாப்புக்காக, அவர்களை தனிமைப்படுத்துங்கள். உண்ணும், குளிக்கும், உறங்கும் ஏற்பாடுகளை அவர்களுக்கு தனியாக ஏற்படுத்துங்கள். ஒட்டகத்தைக் கட்டி விட்டுத் தான் இறைவனிடம் இறைஞ்சச் சொல்கிறது இஸ்லாம். எனவே, தேவையான முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடியுங்கள்.
‘இவ்வளோ செய்யனுமா?! அய்யோ! வேற என்ன?’
பலர் பதற்றப்படுவது புரிகிறது. பதற்றப்படவோ, பயப்படவோ வேண்டாம். முதலில் முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடியுங்கள். பின் இறைவனிடம் கையேந்துங்கள்!
சுகாதார வைத்திய அதிகாரி (MOH), பொது சுகாதார உத்தியோகத்தர்கள், அக்குறணை பிரதேச சபை, வைத்தியசாலை, அக்குறணை ஜம்இய்யதுல் உலமா (AkJU) மற்றும் அக்குறணை சுகாதார குழு (AHC) ஆகியோர் விடயங்களை முழு மூச்சாக கையிலெடுத்து ஏற்பாடுகளை செய்கிறார்கள். எனவே, தரப்படும் விபரங்களைக் கையேற்று, அமைதியாக செயற்படுத்துங்கள். எவ்வளவோ கடந்து வந்த ஊர் இது, இதையும் வெற்றிகரமாக கடந்து செல்வோம் இன்ஷா அல்லாஹ்.
பி.கு.: தயவு செஞ்சி தேவையான audio க்கள மட்டும் forward பண்ணுங்க. அதோட, வீட்டுல இருந்துட்டே சூப்பர் ஹீரோவாக மாறி, ஊரையும் நாட்டையும் பாதுகாக்குற வேலை ஒங்களுக்கு தரப்பட்டிருக்குது. வெளியே வந்து அதக் கெடுத்துட வாணம். ப்ளீஸ்.
Hashir Naufer 28.03.2020