6 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று (27) தீர்ப்பளித்தது.
2016 ஆம் ஆண்டு டிசெம்பர் 26 ஆம் திகதிக்கும் 28 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் 6 வயதுச் சிறுமியை அவரது தாயாரிடமிருந்து கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரியான உவைஸ் மொஹமட் ரவீத் என்பவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றம்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடக்கும் போது எதிரிக்கு 19 வயதாகும்.
இந்தக் குற்றப்பத்திரிகை மீதான விளக்கம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் சட்டத்தரணி ஜெயந்தன் முன்னிலையானார்.
வழக்கில் முதலாவது சாட்சியான பாதிக்கப்பட்ட 9 வயது நிரம்பிய சிறுமி தனது சாட்சியத்தில், “அம்மா வைத்தியசாலையில் இருந்தார். அப்போது நான் ஓட்டப்போட்டிக்காக பாடசாலைக்குச் சென்றேன். என்னை அயல்வீட்டு மாமா சைக்கிளில் ஏற்றிச் சென்று விடுவதாகத் தெரிவித்தார். அதனால் அவருடன் சென்றேன்.
ஆனால் என்னை பாடசாலையில் இறக்காமல் இறைச்சிக் கடைக்கு பக்கதால் சென்று பற்றைக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தினார்” என்று தனக்கு நடந்தவற்றை விவரித்தார்.
அத்தோடு தனக்கு நடந்தவற்றை அம்மா வீட்டில் இல்லாதபடியால், அயல் வீட்டில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியையிடம் முதன்முதலில் கூறியதாகவும் சிறுமி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
சிறுமியின் சாட்சியத்தை நிரூபிக்கும் வகையில் அவரது தாயார், அயல் வீட்டு ஆசிரியையின் சாட்சியமும் அமைந்தது. நிபுணத்துவ சாட்சியத்தில் சட்ட மருத்துவ அதிகாரி, சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதை உறுதிப்படுத்தினார்.
எதிரி சார்பில் அவரது தந்தை சாட்சியமளித்திருந்தார். அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்தின் குறுக்கு விசாரணையில் எதிரி தடுமாறினார்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் நேற்று (28) செவ்வாய்கிழமை வழங்கினார்.
எதிரி மீதான இரண்டு குற்றச்சாட்டுக்களும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்தோடு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதான இரண்டாவது குற்றத்துக்கு குற்றவாளிக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்தோடு 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
இந்த இரண்டு சிறைத் தண்டனைகளையும் குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். வழங்கத் தவறின் 2 வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.