‘வன் உம்மா’ வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!

கத்தாரிலிருந்து ‘ வன் உம்மா ‘ ( ஒரே சமூகம்) எனும் பெயரில் வட்ஸ் அப் சமூக வலைத்தள குழு ஒன்றை அமைத்து அதன் ஊடாக அடிப்படைவாத கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வெல்லம்பிட்டி மற்றும் திஹாரி பகுதிகளைச் சேர்ந்த 31,32 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தாரிலிருந்து ‘வன் உம்மா’ எனும் வாட்ஸப் குழு ஊடாக ஸஹ்ரானின் ஹாஷிமின் கடும்போக்குவாத கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

‘ சந்தேக நபர்கள் இருவரும் கத்தாரில் தொழில் புரிந்து வந்துள்ளனர். பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய அவர்கள் கடந்த 2020 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த வட்ஸ்அப் குழு ஊடாக பல்வேறு வகைகளில் அடிப்படைவாதத்தை பரப்பியுள்ளனர்.’ என பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், ஸஹ்ரான் தலைமையில் இடம்பெற்ற ‘ பையத் ‘ சம்பவம் ( உறுதி மொழி எடுக்கும் சம்பவம் )தொடர்பான காணொளியும், நிழற்படமொன்றும் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களில் ஒருவரே இவற்றை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். அவர்கள் இருவரும் பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பயங்கரவாதி ஸஹ்ரானின் ஹாஷிமின் அடிப்படைவாத, பயங்கரவாத பயிற்சி மற்றும் பிரசங்கங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இருலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

37 மற்றும் 38 வயதான இரண்டு சந்தேக நபர்கள் மூதூரில் கைது செய்யப்பட்டதுடன், மூதூரில் கடும்போக்குவாத பிரசங்கங்களை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்.எப்.எம்.பஸீர் metro news-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter