இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் கொண்ட எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்வதை விடுத்து, அதனை அழிக்க வேண்டும் என்று அகில இலங்கை தேங்காய் எண்ணெய் உற்பத்தியாள்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்வதானது ஏதேனுமொரு நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக அமையும் என்று சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக டி சில்வா சுட்டிக்காட்டினார்.
புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்வது ஏனைய நாடுகளுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.
எனவே, இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற எண்ணெய் முழுவதும் பகிரங்கமாக அழிக்கப்பட வேண்டும்.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாத்திரமே மக்களுக்கு அச்சமின்றி சிங்கள – தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியும்.
இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று புத்திக டி சில்வா மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யும் 4 பிரதான நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் தரமற்றது என்று இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (எஸ்.எல்.எஸ்.ஐ.) பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் மாதிரிகள் இரண்டாவது முறையாகவும் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அது தரமற்றது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று நிறுவனங்களினாலும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றின் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப் பெறும் என்று இலங்கை கட்டளைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முடிவுகள் கிடைத்தவுடன் அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரமற்றதென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எண்ணெய்யை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சுங்க திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏனைய மூன்று நிறுவனங்களாலும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் சந்தைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்தோடு இவ்வாறு சிக்கலுக்குரிய எண்ணெய் ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் இனங்காண்பதற்காக மாவட்ட ரீதியில் விற்பனை நிலையங்களிலுள்ள எண்ணெய் மாதிரிகளைப் பெற்று பரிசோதனைக்குட்படுத்தவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள எண்ணெய்யில் உள்ளடங்கியுள்ளதாகக் கூறப்படும் அஃலாடொக்சின் (aflatoxin) மூலக்கூறு சிறிது சிறிதாக உடலில் சேறும்பட்சத்தில் அல்லது ஒரே சந்தர்ப்பத்தில் அதிகளவில் சேரும் பட்சத்தில் புற்றுநோய் ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஜானகி வித்தியாபத்திரண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -வீரகேசரி பத்திரிகை-