அராஜகத்துக்கு அடிபணிய தலைமைத்துவம் தயாரில்லை. அடிமைத்தனத்தோடு எவரும் விடயங்களை கையாளக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாடளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்குள்ள இளைஞர் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது, இன்றைய ஆட்சியாளர்கள் நடந்து முடிந்த பல சம்பவங்களை வைத்து எமது சமூகத்தை மிகப் பெரிய பிரச்சினைகளுக்குள்ளும் துன்புறுத்தல்களுக்குள்ளும் தள்ளியிருப்பதை நாங்கள் கண்டு வருகின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் வரையில் இத் தாக்குதலை முன்னெடுத்த குழு யாரென்பது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஆன்மீக தீவிர இயக்கமாக ஒரு குழு செயற்படுகிறது என்று ஆங்காங்கே பேசப்பட்டு வந்த போதிலும், வெளியில் எதுவுமே பெரியளவில் தெரியவில்லை. அதனை விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்து அதனது அறிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்விவாதத்தில் இரு அரசியற் கட்சி தலைவர்கள் பேசினார்கள். ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும், ஜாதிக ஹெல உருமய கட்சியின் சார்பில் சம்பிக்க ரணவக்கவும் பேசியிருந்தார்கள். நான் சொல்ல நினைத்திருந்த சில விடயங்கள் இவர்கள் வாயிலாக வெளிப்படையாக சொல்லப்பட்டிருந்தன.
இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இடம்பெற்ற மர்மத்தில் இந்நாட்டின் உளவுத்துறை எவ்வாறு சம்பந்தப்பட்டிருந்தது என்ற கேள்வி தங்களுக்கு இருக்கின்றது என சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார்.
அந்தச் சம்பவம் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அரங்கேறியது
மட்டுமல்லாமல், இதன் மூலம் உள்ளுர் அரசியல்வாதிகள் நன்மை அடைந்திருக்கின்றார்கள். அத்தோடு, வெளிநாடுகளின் ஒத்துழைப்புக்கள் கிடைத்தமைக்கான தடயங்கள் இருந்தும் அது தொடர்பில் அவ்வறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை என அநுரகுமார திஸாநாயக்க மிக வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
உண்மை நிச்சயம் ஒரு நாள் வெளிக் கொண்டுவரப்படும் . எமது சமூகத்தை வேண்டுமென்றே பழிவாங்குவதற்காக கட்டவிழ்க்கப்பட்ட நிகழ்வே இதுவாகும். எமது சமூகத்தையும் கத்தோலிக்க சமூகத்தையும் மோதவைக்கின்ற வேலையை எதற்காக செய்ய வேண்டும் ? இதற்கு முன்னர் இந்நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதங்களும் அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டவையேயாகும். முஸ்லிம் சமூகத்தினுள் நுழைந்து அனைத்து விடயங்களிலும் கைவிட்டு பார்க்க ஏதுவாக இவ்விடயத்தை கையாண்டுள்ளார்கள்.
கட்சித் தலைவருடைய நம்பகத்தன்மையை இலக்குவைத்து இன்று கட்சிக்குள் இருந்தே நிறையப் பேர் தங்கள் பக்க நியாயங்களை முன்வைப்பது போல நேரடியாகதத் தலைமையை மலினப்படுத்துவது மாதிரி பல விடயங்களைப் பேசி வருகின்றார்கள். ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக கதைப்பதற்கும் ஓர் அளவு இருக்கினறது.
எங்களுடைய ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றபோது இந்த ஆட்சியாளர்களின் அநியாயத்தை பற்றி இந்த சமூகமே அங்கலாய்த்துக் கொண்டிருந்தபோது , அதற்கான தீர்வு இவ்விடயம் சர்வதேச மையப்படுத்தப்பட்டு, இஸ்லாமிய நாடுகள் தலையிட்டமையினாலும், ஜெனிவாவில் இந்த அரசா ங்கத்திற்கு நெருக்கடி வந்தததானால் அதற்கு தீர்வு தரவேண்டிய நெருக்குவாரங்களுக்கு மத்தியில் தான் வேண்டா வெறுப்பாக அதற்கு அரசாங்கம் இடமளித்தது.
இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடிவெடுத்தபோது, அங்கு வாழ்கின்ற கத்தோலிக்க மக்கள் அதற்கு இடமளிக்காமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார்கள். இதனால் இப்போது ஓட்டமாவடியில் அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இப்பாரிய பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்ட பின்னர் , இப்போது சிலர் நாடெங்கிலும் இருந்துவருகின்ற ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக போட்டி போடுகின்றார்கள்.
சிலர் தலைவரையும் அங்குமிங்குமாக வம்புக்கு இழுக்கின்றனர். ஆனால், இதன் பின்னணி எனக்கு நன்கு தெரியும். ஏனெனில், ஆட்சியாளர்களின் போக்குகளை நான் நன்கறிந்தவன் . கட்சியை கொண்டு சென்று நீதிமன்றத்தில் நிறுத்தினவர்களும் இருக்கின்றார்கள். ஆட்சியாளர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் தேவையில்லாமல் முரண்பட்டது இல்லை. ஆனால், அவர்களது எடுப்பார் கைப்பிள்ளையாக முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இருக்கமாட்டாது. நான் மிகவும் பொறுமையோடு இருக்கின்றேன்.
இளைஞர்களாகிய நீங்கள் கட்சி தலைமையின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற வரையில் தான் நானும் இந்தக் கட்சியில் இருப்பேன். இந்த இயக்கத்தை காட்டிக் கொடுப்பதற்காக நான் இந்த பதவிக்கு வரவில்லை. தலைவர் அஷ்ரப் கூறியிருந்தார் ” இந்தக் கட்சி பலரை அலங்கரித்து இருக்கின்றது. ஆனால், சிலர் கட்சியை அலங்கரித்திருக்கின்றார்கள். அதில் ஒருவர் தான் ரவூப் ஹக்கீம்” என்றார். எனக்கு நெருக்கடி வருகின்ற போதெல்லாம் தலைவரது இந்தக் கூற்றை நினைவுப்படுத்திக் கொள்வேன்.
அதே மாதிரி தான் கட்சி இன்று பலரை அலங்கரித்திருக்கின்றது. பெரும் பதவிகளை கொடுத்திருக்கின்றோம். அவர்கள் அவர்களை அலங்கரித்துக் கொண்டார்களா? அல்லது அவர்கள் கட்சிக்கு அலங்காரமாக இருக்கின்றார்களா? என்பதை இன்று போராளிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள். எனவே தான் அவர்கள் இந்தக் கட்சியின் தொண்டர்களுக்கு பயந்துகொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தின் அனுசரணை எவ்வளவும் இருக்கலாம். ஆனால், பதவியில் நீடிக்க வேண்டுமாயிருந்தால் தொண்டர்களின் அங்கீகாரம் இருக்க வேண்டும்.
தொண்டர்களின் அங்கீகாரம் தலைவரின் ஆசீர்வாதம் இல்லாமல் கிட்டுமா என்பது பற்றியும் அவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களாகவே தொண்டர்களிடமிருந்து விரட்டப்பட்டுவிடுவார்கள்.
கட்சிக்கு மாற்றமாக குந்தகம் விளைவித்துவிட்டு எந்தவிதமான அடைவுகளையும் அவர்கள் அடைவது என்பது சாத்தியமற்ற விடயமாகும். அதற்கான கவசமாக பலரது மௌனம் காணப்படுகிறது. இந்த இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென கருதி நான் நிறைய விடயங்களை வெளியில் பேசுவது கிடையாது.
இந்த சமூகம் பாரிய நெருக்கடிக்கள் தள்ளப்பட்டுள்ளது. ஏராளமான இஸ்லாமிய இயக்கத்தினர் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். வகை தொகையில்லாமல் கைது செய்யப்படும் அச்சத்தோடு இருந்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எந்தப் பிழையும் செய்யவில்லை. இந்தப் பின்னணியில் பாரிய விளைவுகளை இச் சமூகத்தின் மீது கொண்டுவருவதற்காக திட்டமிட்டு செய்யப்படுகின்றது. ஒரு சிலரது நிகழ்ச்சி நிரலுக்காக நவீன உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் பலரை இந்த அறிக்கையில் குறை கண்டு இருக்கின்றார்கள்.சன்மார்க்க அறிஞர்களான ஸையத் குதுப்,மௌலானா அபுல் அஃலா மௌதூதி,யூஸுப் அல் கர்ளாவி போன்றோரையே குற்றம் சாட்டுகின்றார்கள்.
ஆட்சியும், அதிகாரமும் இறைவனுக்குரியது. அதனையே இந்த அறிக்கையில் பிழை என்று கூறுகின்றனர். நாங்கள் எதனை விசுவாசிக்கின்றோமோ அதனையே பிழை என்று சொல்லுகின்ற அளவுக்கு அதுவே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூலாதாரம்என்று முன்வைக்கின்றார்கள். அதுவே இந்த நாட்டில் இஸ்லாமிய அரசை ஸ்தாபிப்பதற்கு வழிகோலுவதாக அமைகின்றது என்கின்றார்கள். எமது மார்க்கம் தான் சகிப்புத் தன்மையை கூடுதலாக போதித்த மார்க்கமாக விளங்குகின்றது.
எங்கோ ஓர் இடத்தில் எவனோ ஒருவன் கூறிச் சென்ற விடயதுக்காக இன்று சகல விடயங்களிலும் குறையை தேடுகின்ற விதத்தில் எம் சமூகம் நடத்தப்படுகின்றது.
இந்த அராஜகத்துக்கு பின்னால் இருக்கின்ற குழுவுக்கு இந்த இயக்கம் அடிபணிந்துபோக தலைமை தயாரில்லை. ஆனால், நாங்கள் பொறுப்புணர்ச்சியுடன் சில விடயங்களை பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். கையாளாகாத அடிமைத் தனத்தோடு இவ்விடயங்களை கையாள முடியாது. இத்தகைய அவமான சின்னங்களாக இந்த சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த விடயங்களை மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் கையாள்கின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸின் முடிவுகள் கடுமையாக சில இடங்களில் விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
பிரேமதாஸவை ஆட்சிக்கு கொண்டு வந்தது எமது தலைவரே. அவரது ஆட்சியை கடுமையாக விமர்சித்ததும் எமது தலைவர் தான். அன்று முடிவுகளை எடுப்பதில் தயங்கவில்லை. தமிழர்களுடைய தேசிய அரசியலில் முஸ்லிம்களும் ஒரு ஒற்றுமையோடு பார்க்கின்ற நிலவரம்மாறி வருகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் முதலமைச்சராக சிலரால் வந்திருக்க முடியாது. ஆனால், இப்போது அதனையெல்லாம் மறந்து போய்விட்டார்கள்.
நாங்கள் ஒரு நடுநிலையானதொரு சமூகம். எமது நடுநிலைத் தன்மையை ஒருபோதும் இழந்துவிட முடியாது. இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் சிலர் எடுத்ததற்கு எல்லாம் அடுத்த சமூகத்துடன் முரண்பட்டுக் கொள்கின்றார்கள். வேறொருவரை திருப்திப்படுத்துவதற்காக இன்னொரு சமூகத்துடன் முரண்படுவது முறையல்ல.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறுகின்ற இந்த அராஜகத்திற்கு ஒருபுறம் சர்வதேசத்தையும், மறுபுறத்தில் சிறுபான்மை சமூகங்களையும் வைத்துக் கொண்டு இவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துக் கொண்டிருக்கின்றோம். எனவே தான் அரசியலில் புதிய வியூகங்களை வகுப்பதற்கான சிந்தனையில் இருக்கின்றோம். எங்களுக்குள் மிக சில்லறைத் தனமான அற்பத்தனமான கதைகளை விட்டுவிட்டு உள்ளச்சத்துடன் யதார்த்தை புரிந்து செயற்படுவோம் என்றார்.