ஏப்ரல் 21 தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியமை குறித்த விசாரணைகளுக்காக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவழியினர் எனக் கூறப்படும் அஹமட் தாலிப் லுக்மன் தாலிப் அவரது மகனான லுக்மான் தாலிப் அஹமட் எனும் அபூ அப்துல்லாஹ் ஆகியோரைக் கைது செய்ய ரிஐடி எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சிவப்பு அறிவித்தல் கோரியுள்ளனர். நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் எச்.ஐ.கே. காஹிங்கலவிடம் இதற்கான கோரிக்கையை முன்வைத்தனர்.
குறித்த இருவர் உள்ளிட்ட 5 பேர் குறித்து சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்து ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புகளை வெளிப்படுத்துமாறு கடந்த 10 ஆம் திகதி சட்ட மா அதிபர் தப்புள டி லிவேரா, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
அபு ஹிந், அஹமட் தாலிப் லுக்மன் தாலிப் அவரது மகனான லுக்மான் தாலிப் அஹமட் எனும் அபூ அப்துல்லாஹ், ரிம்சான், புலஸ்தினி மகேந்ரன் எனும் சாரா ஜஸ்மின் ஆகியோர் தொடர்பிலேயே இந்த சிறப்பு விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நேற்று லுக்மான் தாலிப், அபூ அப்துல்லாஹ் ஆகியோரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் கோரியுள்ளனர்.
முன்னதாக, ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கையில், 17 ஆம் அத்தியாயத்தில் வெளிநாட்டு தலையீடுகள் எனும் தலைப்பின் கீழ் சிறப்பு விடயங்களை முன்வைத்துள்ளன. ஆணைக்குழு அறிக்கையின் 244 ஆம் பக்கம் முதல் ஆரம்பமாகும் குறித்த விடயங்களில், 251 ஆம், 252 ஆம் பக்கங்களில் லுக்மான் தாலிப், அபூ அப்துல்லாஹ் தொடர்பில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அஹமட் தாலிப் லுக்மன் தாலிப் அவரது மகனான லுக்மான் தாலிப் அஹமட் எனும் அபூ அப்துல்லாஹ் ஆகியோர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களாவர். இவர்கள் மீது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார பிரதான சூத்திரதாரியான சாதிக்கின் உள்ளிட்டோருடன் இலங்கையில் மேலும் 4 மாலைதீவு பிரஜைகளுடன் இணைந்து அடிப்படைவாத கலந்துரையாடல்களில் ஈடுபட்டமை தொடர்பிலும் ஆணைக் குழு அறிக்கையில் விடயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி மாணவர் அமைப்பு, சாதிக், மொஹம்மட் நிஸ்தார் அஹமட் முன்சிப், சுபியான் உள்ளிட்ட பலருக்கு குறித்த இருவரும் சிறியா, துருக்கியில் ஆயுதப் பயிற்சிகளை முன்னெடுக்க தேவையான வசதிகளை செய்து கொடுத்ததாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது.
இதனைவிட 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி, சாய்ந்தமருது வீட்டில் தற்கொலைதாரிகள் தற்கொலை செய்துகொண்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின்போது அங்கிருந்து ஒரு தொகை அவுஸ்திரேலிய சிம் அட்டைகள் மீட்கப்பட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள சாட்சியத்தையும் ஆணைக் குழு விஷேடமாக கவனித்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் லுக்மான் தாலிப், அபூ அப்துல்லாஹ் குறித்து சிவப்பு அறிவித்தலை கோரியுள்ளது. (எம்.எப்.எம்.பஸீர்) Metro News