பிறரின் வங்கி கணக்குகளுக்கு ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கறுப்புப்பண சுத்திகரிப்பு சட்டவிதிகளுக்கு கீழ் இளைஞர் ஒருவர் வவுனியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிற நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரான இளைஞரை கைது செய்துள்ளனர்.
வவுனியா – வேப்பகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் தனியார் வங்கி கணக்கு இலக்கம் ஒன்றுக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு கோடியே இரண்டு இலட்சத்து 58 ஆயிரத்து 399 ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாலய்வு பிரிவினர், சந்தேக நபரான இளைஞர் ஏனைய நபர்களின் வங்கி கணக்குகளுக்கு அத்துமீறி பிரவேசித்தே இந்த பணத்தொகையை பெற்றுக் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் இத போன்ற மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டதாக 36 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர் – (செ.தேன்மொழி Metro News)