நாட்டில் இயங்கிவரும் மத்ரஸாக்களில் 1000 மத்ரஸாக்களை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும், மத்ரஸாக்களில் அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர கருத்து வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பில் ஆராயுமாறு மூன்று அமைச்சுகளை அரசாங்கம் கோரியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு, கல்வியமைச்சு, புத்தசாசன மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சின் செயலாளர்கள் இதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நட்புறவினை கட்டியெழுப்புவதற்கும், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தைக் களைந்து தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக அறிக்கையொன்றினைத் தயாரிக்குமாறு பாராளுமன்ற தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை 2020 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளித்துள்ளது
இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தெளபீக் , மொஹமட் மன்சூர் உட்பட 17 பேர் அங்கம் வகித்தனர். அக்குழுவின் அறிக்கையையடுத்தே குறிப்பிட்ட மூன்று அமைச்சுகளும் மத்ரஸா தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது
‘மத்ரஸா நிறுவனங்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவினால் ஆராயப்பட்டபோது முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அல்லது வேறு எந்தவொரு அரச நிறுவனத்திடமும் இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் எண்ணிக்கை பற்றி எவ்வித ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கையும் இல்லை” என தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ‘மத்ரஸாக்களில் இருக்கின்ற சிறுவர்களின் எண்ணிக்கை, அவற்றினால் வழங்கப்படும் கல்வியின் உள்ளடக்கம் மற்றும் தரம், ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் தகைமைகள், சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற அடிப்படை வசதிகள் போதிப்பது உள்நாட்டு ஆசிரியர்களா?அல்லது வெளிநாட்டு ஆசிரியர்களா? என்பதில் பல பிரச்சினைகள் இருப்பதாக புலனாகிறது.
குழுவின் முன் முஸ்லிம் கல்விமான்கள் முன்வைத்த, சுட்டிக்காட்டிய விடயங்களின்படி நிர்க்கதி நிலையிலுள்ள பிள்ளைகளை பராமரிப்பதற்கு அனுப்பப்படுகின்ற இடமாக மத்ரஸாக்கள் மாறியுள்ளன என்பதாகும்.
மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் பிரிவெனா கல்வி பிரிவுபோன்றதொரு பிரிவாக மாற்றியமைத்து முகாமைத்துவம் செய்யப்படுதல் வேண்டும் என்ற பிரேரணையொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- (ஏ.ஆர்.ஏ.பரீல்) Vidivelli