மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு ஆகிய விவகாரங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் சம்பவம், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு ஆகிய சம்பவங்களுடன் மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசால் சாலி நேரடியாகவும், மறைமகமாகவும் தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டமைக்கான காரணிகள் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுச்சட்டம் குறித்து கடந்த வாரம் இவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினர் குற்றப்புலனாய்வு பிரிவிலும், பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இவ்விடயம் குறித்தும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
மதத்தை முன்னிலைப்படுத்தி குறிப்பிடப்படும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.
கடந்த காலங்களில் இவ்வாறான தன்மை காணப்பட்டது.ஆகவே சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது என்றார்.