“வீட்டிலிருந்து மல்வானைக்கு செல்லும்போது எனது மகள் ஒரு துஆவை சொல்லித்தந்தார். என்ன துஆ என்று கூட சொல்லத் தெரியாத பாவி நான்” என்று படுகொலை செய்யப்பட்ட ரிப்கா, கடைசியாக தன்னுடன் நேரடியாக பேசி விடைபெற்றுச் சென்றதை கூறி கண் கலங்குகிறார் தந்தை முஹம்மத் ரிப்கான்.
முஹம்மத் ரிப்கான் பாத்திமா ரிப்கா, 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பிறந்தவர். காலி உஸ்வதுல் ஹஸனா வித்தியாலயத்தில் தரம் 3 வரை கல்வி பயின்றவர். அவரை இவ்வருடம் 4 ஆம் தரத்திற்கு மல்வானையிலுள்ள பாடசாலையொன்றில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தனர். எனினும், பாடசாலைக்கு செல்லக் காத்திருந்தபோதே இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
“இயல்பாகவே பாத்திமா ரிப்கா மிகவும் திறமைசாலி” என்கிறார் அவரது தந்தை ரிப்கான். “சிறுவயதிலேயே அத்தனை முதிர்ச்சி அவள். அடம்பிடிக்க மாட்டாள், எந்த பொருள் வேண்டுமென்றாலும் அவள் கேட்டுவிட்டு ‘வாப்பா உங்களிடம் இப்போது காசு இல்லையென்றால் பிறகு வாங்கிக்கொள்ளலாம்‘ என்று பெரிய மனுஷி மாதிரி சொல்வாள். அவள் எனக்கு கிடைத்த பொக்கிஷம். நான் துரதிஸ்ட சாலி, அவளை இழந்துவிட்டேன்” என்று கூறி முடிக்க முன் அவரது கண்கள் அணைகட்டுகின்றன.
காலி கட்டுகொடையைச் சேர்ந்த முஹம்மத் ரிப்கானுக்கும் பாத்திமா ரிபாஸாவுக்கும் 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. முஹம்மது ரிப்கான் ஒரு கடற்றொழிலாளி, 38 வயதுடைய பாத்திமா ரிபாஸா இல்லத்தரசி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். ஆண், பெண் என மூத்தவர்கள் இரட்டையர். அவர்களுக்கு இப்போது 15 வயதாகின்றது. மகன் மத்ரஸாவில் கற்கிறார். மூத்த மகள் தந்தையுடன் இருக்கிறார். இளையவள்தான் பாத்திமா ரிப்கா. அவர் தாயுடன்தான் இருந்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் ரிப்கானுக்கும் ரிபாஸாவுக்குமிடையில் முரண்பாடுகள் வந்ததால் பிரிந்து (சட்டரீதியாக அன்றி) வாழ்ந்தனர். தந்தையையும் தாயையும் இழந்த ரிபாஸா காலி கட்டுகொடயிலுள்ள தனது வீட்டை விற்றுவிட்டு மல்வானை பகுதியில் வாடகை வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக ரிப்கானின் நண்பர் கூறினார்.
மல்வானைக்கு வந்த ரிபாஸா மீகஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொட, கந்துபொட பகுதியில் குடியேறியிருந்தார். இவர் வாடகைக்கு இருந்த வீட்டுக்கு அருகில் நிதா பவுண்டேஷனினால் கட்டிக்கொடுக்கப்பட்ட சகாத் வீட்டுத்திட்டம் இருக்கின்றது. அதில் குடியிருந்தவர்கள்தான் பாத்திமா லைலாவும் (வயது 40) அவரது கணவர் அப்துல் லத்தீபும். சுமார் 10 வருடங்களாக அங்கு குடியிருக்கும் இவர்கள் அண்மைக்காலமாக பேய் ஓட்டுதல், மாந்திரிகம் போன்ற விடயங்கைளை செய்து வருவதாக பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுனர் முஹம்மத் நிஸ்தார் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில், “தனது மகள் ஒரு கெட்ட ஆவியினால் பிடிக்கப்பட்டதாக தாய் நம்பினார், இதனால் பேயோட்டுபவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஆவியை விரட்ட ஒரு சடங்கு செய்யப்பட்டுள்ளது. முதலில் பேயோட்டியவர் சிறுமியின் மீது எண்ணெய் தேய்த்துள்ளார், பின்னர் மீண்டும் மீண்டும் பிரம்பால் அடிக்கத் தொடங்கினார். சிறுமி சுயநினைவை இழந்தபோது, அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் பல மணி நேரங்களுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டமை தெரிய வந்தது” என்றார்.
அன்று பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மதியம் 1 மணியளவில்தான் ரிப்கா பேயோட்டும் பெண் லைலாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். மாலையாகும்போது லைலாவின் வீட்டிலிருந்து ஒன்பது வயது சிறுமி பாத்திமா ரிப்கா “ஆண்டி என்னை அடிக்க வேண்டாம், எனக்கு வலிக்கிறது” என்று அலறும் சத்தம் கேட்டதாக பக்கத்து வீடுகளில் வசிப்போர் தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த வீட்டில் ரிப்காவின் தாய் ரிபாஸாவும் இருப்பதை அறிந்துகொண்டதாகவும் தாயும் சம்பந்தப்பட்டிருப்பதால் விடயம் தொடர்பில் யாரும் கேள்வி கேட்க முன்வரவில்லை என்றும் தெரியவருகிறது.
“இரவு பத்தரை மணியளவில் எனது வீட்டுக்கு லைலாவின் கணவர் ஓடி வந்தார். ரிப்காவுக்கு சுகமில்லை. முச்சக்கர வண்டியில் அவசரமாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்” என அப்துல் லத்தீப் அழைத்ததாக கூறினார் முச்சக்கர வண்டி ஓட்டுனர் முஹம்மது நிஸ்தார்.
“இதனையடுத்து லைலாவின் வீட்டுக்குச் சென்றேன். அப்போது, லைலாவும் தாய் ரிபாஸாவும் சிறுமி ரிப்காவை தூக்கிக்கொண்டு முச்சக்கர வண்டியில் ஏறினர். சிறுமி அழவோ, பேசவோ இல்லை. நிசப்தம் நிலவியது. உடுத்திருந்த ஆடையுடன் இருப்பதையே நான் கண்டேன். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். இதன்போது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்து சில மணி நேரம் கடந்துள்ளதாக வைத்தியர்கள் கூறினர்” என்றார் ஸ்தலத்தில் இருந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் நிஸ்தார்.
“அந்த சிறுமியின் நெற்றியில் எண்ணெய் தேய்க்கப்பட்டு, அவர் பிரம்பால் தாக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு தினங்கள் குறித்த பேயோட்டும் பெண் லைலாவிடம் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். இந்நிலையில், மூன்றாம் நாளன்றுதான் இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது” என பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
ரிப்கா சில தினங்களாக படுக்கையில் சிறுநீர் கழிப்பதாவும், தூக்கத்தில் பேசுவதாகவும் கூறியே மந்திரம் செய்யும் லைலாவிடம் தாய் ரிபாஸா அழைத்துச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
“ரிப்கா கடந்த பெப்ரவரி நடுப்பகுதியில் காலியில்தான் இருந்தார். மகனை மத்ரஸாவில் விடுவதற்காக அவர் பிள்ளைகளை அழைத்துவந்தார். இதன்போது ரிப்காவுக்கு எந்த நோயும் இருக்கவில்லை. அவரிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை” என்று கூறினார் தந்தை முஹம்மத் ரிப்கான். ரிப்காவிடம் குறிப்பிடும்படியான எந்தவித மாற்றங்களோ அல்லது நோய்களோ இருக்கவில்லை என அயலவர்களும் ரிப்காவுக்கு கற்பித்த ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.
“எனது மனைவி, காலியில் இருக்கும்போதும் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது, இவ்வாறான மூட நம்பிக்கைகளின் பின்னால் சென்றிருக்கின்றார். அவரின் குடும்பத்தில் பலருக்கும் இதே நம்பிக்கை இருக்கின்றது. இன்று நான் என் மகளை இழந்திருக்கிறேன். என்னிடம் இருந்த பிழைகளினால் மனக் கசப்புகள் ஏற்பட்டது உண்மைதான். நான் துரதிஷ்டசாலி, அறிவும் ஆற்றலும்மிக்க என் பிள்ளையை மனைவியின் மூட நம்பிக்கையால் இழந்துவிட்டேன்”என்கிறார் ரிப்கான்.
ரிப்காவின் ஜனாஸா மறுநாள் இரவு நூற்றுக் கணக்கானோரின் பங்கேற்புடன் காலி, கட்டுகொடை முஹியித்தீன் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முழு நாட்டிலும் புகழ்ந்து பேசப்பட்ட இலட்சாதிபதி வெற்றியாளர் சுக்ரா முனவ்வரும் இதே மஹல்லாவைச் சேர்ந்தவர்தான். சுக்ராவின் வெற்றியினால் மகிழ்ச்சியில் திளைத்த அக்கிராம மக்கள் ரிப்காவுக்கு நடந்த கொடூர சம்பவத்தினால் இன்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சிறுமியின் தாய் ரிபாயா, மற்றும் பேயோட்டும் பெண் லைலா ஆகியோர் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இரு சந்தேக நபர்களையும் மார்ச் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுமி மீது சடங்கு செய்த பெண் சில மாதங்களாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இப் பெண்ணினால் வேறு யாராவது பாதிக்கப்பட்டார்களா என பொலிஸார் விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
தொழில்நுட்ப உலகில் இன்னும் மூடநம்பிக்கைகளின் பின்னால் மக்கள் செல்கின்றனரா என்ற கேள்வி பலரிடமும் இருக்கலாம். கிராமப் புறங்களில் மாத்திரமல்ல, கொழும்பின் நகர்ப் புறத்திலும் இன்னும் இவ்வாறான சடங்குகளும் அநாச்சாரங்களும் தொடரத்தான் செய்கின்றன. குறித்த பேயோட்டும் பெண் லைலா கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்தான். இன்றும் தாயத்து கட்டுதல், மாந்திரிகம் என்றெல்லாம் இவரைப் போன்ற பலர் பிழைப்பு நடாத்தி வருகிறார்கள்தான்.
இவ்வாறான லைலாக்களுக்கு எதிராக சமூகம் கிளர்ந்தெழ வேண்டும். மூட நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு அப்பாவி உயிர்களுக்கு உலை வைக்கும் இவ்வாறானவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகமும் முன்வர வேண்டும். அப்போதுதான் ரிப்கா போன்ற அப்பாவிச் சிறுமிகளை எதிர்காலத்தில் பாதுகாக்க முடியுமாகவிருக்கும்.-