உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன்படி ‘பொதுபல சேனா’ அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
‘உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் சிலர் குறை கூறுகின்றனர். ஆனைக்குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம்.
அதில் ஒன்றை குறிப்பிட்டுக் கூறுவதென்றால், பெளத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பை தடை செய்யக் கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் அவ்வாறு கூறப்பட்டிருப்பினும் பொது பல சேனா அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய போதனைகளை நடத்தும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம்” என்றார்.
மத்ரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“மத்ரஸா பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள், பாட விதானங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுப்போம். மத்ரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.