அடக்க விவகாரம்: PHI சங்கத்துக்கு இப்போதைக்கு சிக்கலாம்!

கொவிட் -19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியாகும்வரை அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் காணப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இதுவரையில் கொவிட் -19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் 800 – 1200 செல்சியஸ் வெப்ப நிலையில் தகனம் செய்யப்பட்டது. தற்போது சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. எனவே, தற்போது தகனம் மற்றும் அடக்கம் ஆகிய இரண்டுக்கும் சட்டபூர்வமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப உரிய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் நிலங்களிலேயே சடலங்களை அடக்கம் செய்ய முடியும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இதற்கான ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்படும்வரை, சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து கூறுவதிலும் இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல் காணப்படுகின்றன.

சடலங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியை திறக்க முடியுமா? , எந்தளவு ஆழத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும்? உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அத்தோடு இதுவரையில் உபயோகிக்கப்படுகின்ற நிலங்களிலேயே கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா அல்லது அவற்றுக்காக வேறு இடம் ஒதுக்கப்பட வேண்டுமா என்பவை தொடர்பிலும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter