அக்குறணையில் மக்கள் மயமான பிரதேச சபையை நோக்கி “ஊருக்கொரு பிரதேச சபை” எனும் தொனிப்பொருளில் அக்குறணை பிரதேச சபையினால் செயல்படுத்த ஆரம்பித்துள்ள திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ இஸ்திஹார் இமாதுதீன் அவர்களது தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் கடந்த (20.02.2021) சனிக்கிழமை அக்குறணை தாய்ப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அக்குறணை பிரதேச சபையின் சேவைகளில் பிரதானமாக பொதுமக்கள் சட்டரீதியான தெளிவு பெறல், பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வு காணல், ஆலோசனைகளையும் தேவைகளையும் முன்வைப்பதனூடாக தத்தமது பகுதிகளில் செய்யவேண்டிய அபிவிருத்தி வேலைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடல்,
ஆகியவற்றின் மூலம் பொதுமக்களை சென்றடைய வேண்டிய சேவைகளை இவ்வாறான வழிமுறைகளின் மூலம் மக்களுக்கு நெருக்கமான, திருப்திகரமான ஓர் உள்ளூராட்சியினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்வின் போது பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களான அமரஜீவ மற்றும் அல்விஸ் ஆகியோர் பிரதேச சபையின் செயற்பாடுகள் பற்றி உரை நிகழ்த்தியதுடன் இத்தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பிரதேச சபையுடன் சமீபமான முறையில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வகுக்கின்றது. இதற்கென ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை அங்கு ஆற்றிய உரையின் போது தவிசாளர் அவர்கள் தெரிவித்தார்.
பல்வேறு நடமாடும் சேவைகள் உட்பட ஆயுர்வேதப் பட்டறையொன்றும் அங்கு நிகழ்த்தப்பட்டது. இதன் போது கொனகலகல ரஜமகா விகாரையின் விகாராதிபதி உதித தேரர், அக்குறணை தாய்ப்பள்ளி இமாம் அன்ஸீன் மௌலவி, அக்குறணை ஜம்இய்யதுல் உலமாவின் உப செயலாளர் மௌலவி ஷியாம், அலவதுகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க, ஆயுர்வேத வைத்தியர் ஜயரத்ன, வைத்தியர் பவாஸா, மற்றும் அரச அதிகாரிகள், அனுசரனையாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.