முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஏன் தனிமைப்படுத்தல் – வேறு நோக்கங்கள் உண்டா? சமூக வலைத்தளங்களில் கேள்வி
புத்தாண்டு கால விற்பனைகளை தவிர்க்கும் நோக்கில் கொரோனாவின் போர்வையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடி விடுவதற்கு ஏற்ற வகையில் கொரோனா தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதா? என்ற சந்தேகம் சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்தது முதல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களும், நகரங்களும் மூடப்பட்டதை அடுத்து சமூக ஊடகங்களில் இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கிலும், தெற்கிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல இடங்களில் உள்ள பல கடைகள் கடந்த பல வாரங்களாக மூடப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் கணிசமாக இருக்கின்ற கொம்பனித் தெரு கடந்த 60 நாட்களுக்கு மேலாக கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று கல்முனையில் முஸ்லிம்களுக்கு உரிய சில பகுதிகள் கடந்த சில தினங்களாக மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் இதன் பின்னணியில் வேறு ஏதும் காரணங்கள் இருக்கலாமா? என மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
சமூக ஊடகம் ஒன்றில் சிங்களத்தில் இப்படி வெளியிடப்பட்டுள்ள ஒரு குறிப்பை நாங்கள் கீழே தருகிறோம்.
சுகாதாரத்துறை சரணம். முஸ்லிம் கிராமங்களுக்கு மட்டும் பி.சி.ஆர்., தனிமைப்படுத்தல், காலி மாவட்டம், மெந்தர, ஹிந்துருவ, ஹபுருகல, மீரிஸ்வத்த, உனரகஹ, அல்பிடியவில் கொரோனா இல்லை. ஆனால் துந்துவைக்கு மட்டும் கொரோனா. மாத்தறை மாவட்டம் கம்முறுபிடிய, தெலிஞ்சவில, தெனியாம, அக்குரஸ்ஸு, தெவுந்தர போன்ற பிரதேசங்கள் கொரோனா இல்லாத பகுதி, ஆனால் திக்வல்லை முஸ்லிம் கிராமத்துக்கு கொரோனா.
களுத்துறை வடக்கு, தெற்கு, நாகொட, அட்டுகுருந்த, போம்புவல, தொடங்கொட கொரோனா இல்லாத பகுதி. வெட்டுமஹட பிரதேசத்துக்கு மட்டும் கொரோனா,
மொரட்டுவ, பண்டாரகம, பாத்துவ, மோதர, மொல்லிகொட, பின்வத்த கொரோனா இல்லாத பகுதி. தொடவத்த, சரிக்கமுல்ல பகுதிகளில் கொரோனா இருக்கின்றது. அகலவத்த, பிம்பு, கொலசிங்கள, குடலிகம, மதுகம கொரோனா இல்லாத பகுதி, வியங்கல்ல முஸ்லிம் கிராமத்துக்கு மட்டும் கொரோனா. என அந்த சமூக உளடக செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர்கள் விளக்கம் அளிப்பார்களா?