- வை எல் எஸ் ஹமீட் –
தேர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திரமே! யார் வெற்றிபெறுவார்? என்பது அவன் கையிலேயே இருக்கிறது. அதை அவனே அறிவான்.
நாம் மனிதன் என்ற முறையில் களநிலவரம், சூழ்நிலை என்பவற்றை கவனத்திற்கொண்டு சில அநுமானங்களைச் செய்யலாம். அந்தவகையில் இத்தேர்தல் வெற்றி சாத்தியம் யாரை நோக்கி இருக்கின்றது? என்பதை வெறும் பகுத்தறிவு ரீதியில் ஆராய்வோம்.
சிலர் கடந்த ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகள் மாறாமல் அப்படியே இருப்பது போலவும் மேலதிகமாக பெறப்போகும் வாக்குகள் திட்டவட்டமாக இத்தனை; எனவே, இவர்தான் வெற்றி என்கிறார்கள். அந்த வாக்குகள் மாறாது என்றால் தேர்தல் எதற்கு? அவற்றை வைத்தே கணித்துவிடலாமே!
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் சரியாக இத்தனை வாக்குகள் இந்த வேட்பாளருக்கு கிடைக்கும்; என்றும் எதிர்வுகூறுகிறார்கள். இது மனித அனிவுக்கு சாத்தியமா?
எனவே, யதார்த்தமான சாத்தியப்பாடுகளைப் பார்ப்போம்.
2012ம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின்படி
சிங்கள பௌத்தர்கள்- 70.2% அண்ணளவாக 70%
பௌத்தரல்லாதவர்29.8% அண்ணளவாக 30%
இவர்களுள் தமிழர்கள் 11.2%- அண்ணளவாக 11%
முஸ்லிம்கள் 9.7% – அண்ணளவாக 10%
இந்தியத் தமிழர் 4.2%- அண்ணளவாக 4%
சிங்கள கிறிஸ்தவர்கள்4.7%- அண்ணளவாக 5%
தேர்தல் முடிவுகள்
2015 ஜனாதிபதித் தேர்தல்
வாக்களிப்பு வீதம் 81.52%
மைத்திரி- 51.28% ( 6,217,162 வாக்குகள்)
மஹிந்த 47.58% ( 5,768,090 வாக்குகள்)
இருவரதும் மொத்த வாக்குவீதம் 98.86 ஆகும்.
அவ்வாறாயின் செல்லுபடியான 100% வாக்குகளில் 1.14% இற்கு என்ன நடந்தது?
அவைகள் ஏனைய உதிரி வேட்பாளர்களுக்கு, (பெரும்பாலும் தவறுதலாக) அளிக்கப்பட்டிருக்கின்றன. (இவைகள் வீணாக்கப்பட்டு செல்லுபடியற்றதாக்கபட்ட வாக்குகள் அல்ல; என்பதைக் கவனத்திற்கொள்க)
இம்முறை கடந்த தேர்தலைவிட அதிகமாக- அதாவது 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் உண்மையான போட்டியிடும் வேட்பாளர்கள் 4 பேர். ஒருவர் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வேட்பாளர். இரண்டாவது வாக்கை மக்கள் யாருக்கும் அளிக்கலாம். அவரது முதலாவது வாக்கின்மூலமே அவர் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றவர். இலங்கை முஸ்லிம்களில் அவருக்குமட்டுமே மூளை இருக்கின்றது.
எஞ்சிய 30 வேட்பாளர்கள் என்பது கடந்தமுறையைவிட மிக அதிகமாகும். வாக்குச்சீட்டு மிகநீளமாகும். எனவே, இம்முறை செல்லுபடியான வாக்குகளில் தெரியாத்தனமாக இவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் பெரும்பாலும் 2-3% ஆக இருக்கலாம்.
புள்ளிவிபரம் வெளியிடுபவர்கள் இதனைக் கணக்கில் கொள்வதில்லை.
சில புள்ளிவிபரங்களில் ஜே வி பி உட்பட எஞ்சிய வேட்பாளருக்கு மிஞ்சுவது 3 அல்லது 4 வீதம். மீதமெல்லாம் இரு வேட்பாளருக்கும். இது யதார்த்தமா?
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்
SLPP 40.47% ( 5,006,837 வாக்குகள்)
UNP 29.42% ( 3,640,620 வாக்குகள்)
UPFA 12.10% (1,497,234 வாக்குகள்)
JVP 5.75%. ( 710,932 வாக்குகள்)
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்பு பெற்ற 47.58% இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் 40.47% வீதமாக குறைந்திருந்திருக்கிறது.
மஹிந்தவுக்கெதிராக மைத்திரி வடிவத்தில் ஒன்றுசேர்ந்த தரப்புகள் பெற்ற வாக்குகள் 59.53%
எனவே, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே மஹிந்த அணியின் வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருந்தது; என்பது இங்கு கவனிக்கப்படவேண்டும்.
ஏனைய கட்சிகள் பெற்ற வாக்குகள் இங்கு முக்கியமல்ல; ஏனெனில் அவை அனைத்திற்கும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்த ஒரேயொரு வடிவம் ‘ மைத்திரி’ என்பதாகும். உள்ளூராட்சித் தேர்தலில் அவற்றிற்கு எதிரணி என்ற வடிவத்தைக் கொடுத்தால் ‘ எதிரணி’ உள்ளூராட்சித் தேர்தலில் இன்னும் பலம்பெற மஹிந்த அணி பலயீனமடைந்திருக்கிறது. ( ஆனாலும் தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களில் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்)
இந்தத் தேர்தலுக்கு வருவோம்
முதலில் சிங்கள பௌத்த வாக்குகளைப்பார்ப்போம்.
மொத்த வாக்குகள்: 70%
அவற்றில் சுமார் 2% உதிரி வேட்பாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்டு வீணாகலாம். மீதி 68%
ஜே வி பி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 5.75% இம்முறை குறைந்த பட்சம் 8% வாக்குகளைப் பெறலாம். சிலர் அதைவிடவும் கூடுதலாக பெறலாம்; என்ற அபிப்பிராயத்தில் உள்ளனர். ஜே வி பி கூட்டங்களுக்கும் நியாயமான சனத்திரள் வருவது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் ராணுவத்தளபதி. அவரும் ஒரு சிறிய அளவில் கூட்டங்கள் நடாத்துவதோடு சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்கிறார். அவரும் ஆகக்குறைந்தது 1% தொடக்கம் 2% வாக்குகளைப் பெறலாம்.
அநுர, மகேஷ் இருவரும் சுமார் 10% வாக்குகளைப் பெற வாய்ப்பிருக்கிறது.
இப்பொழுது எஞ்சியிருக்கும் பௌத்த வாக்குகள் 58%
இவற்றில் ஐ தே கட்சியின் அடிப்படை பௌத்த வாக்குகள் ஒரு 20% வீதமாவது இருக்கமுடியாது? என்று கூறமுடியாது.
எனவே, எஞ்சியிருப்பது 38% வாக்குகள். இவை SLFP யின் வாக்குகளையும் உள்ளடக்குகிறது.
ஆரம்பக்கட்டமாக இவை அனைத்தும் மொட்டுக்குரிய வாக்குகளாக கருதுவோம். இப்பொழுது மொட்டு வேட்பாளர் 38% பௌத்த வாக்குகளுடன் தனது தேர்தலை ஆரம்பிக்கிறார். ஐ தே க சுமார் 20% வாக்குகளுடன் வேட்பாளர் யார் என்று தள்ளாடுகின்றது.
சஜித் வேட்பாளர்
———————-
சஜித் வேட்பாளராகிறார். கோட்டா சஜித்தைப்போன்று சுமார் இரு மடங்கு பௌத்த வாக்குகளுடன் பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றார். எல்லா இடமும் கோட்டா வெற்றிபெறுவார் என்பதே பேச்சு. உதிரியாக கிடைக்கின்ற சிறுபான்மை வாக்குகள், இனவாத பிரச்சாரத்தின் மூலம் மூலம் உடைக்கப்படுகின்ற பௌத்த வாக்குகளென மேலதிகமாக ஒரு 8% வாக்குகளைப் பெற்றாலே வெற்றி நிச்சயம். சில சிறுபான்மை வாக்குகளைச் சேதப்படுத்தினால் இன்னும் சாதகமாக அமையும். சுயேச்சை வேட்பாளர்களும் இறக்கப்படுகின்றனர். ( சுயேச்சை தொடர்பாக எனக்குக்கிடைத்த உள்ளகத் தகவலொன்றை சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே பதிவிட்டிருந்தேன்)
களமாற்றம்
————-
இப்பொழுது சஜித்தின் பிரச்சாரத்தினால் ஏற்படும் களமாற்றம். சஜித்தின் கூட்டங்களுக்கு வருகின்ற சனத்திரள் மட்டுமே சாட்சியாகாது; என்றபோதும் அதுவும் ஒரு முக்கிய சாட்சி என்பதை மறுப்பதற்கில்லை.மறுபுறம் சந்திரிக்காவுடன் சு கட்சியின் பெரும்பகுதி சஜித்தை ஆதரித்தல். இவை காரணமாக கோட்டாத்தரப்பிற்கு எடுகோளாக இக்கணிப்பில் நாம் வழங்கிய 38% பௌத்த வாக்குகளில் ஒரு 6% சஜித்தின் பக்கம் வருகிறது; எனக்கொண்டால் அது தவறாகுமா?
இன்றைய உண்மையான களநிலவரம் பௌத்த வாக்குகள் கோட்டாவைவிட சற்று அதிகமாக அல்லது சமமாக சஜித்திற்கு இருக்கிறது; என்பதாகும். ஆயினும் இக்கணிப்பீட்டிற்காக இன்னும் கோட்டாவே அதிகமான பௌத்த வாக்குகளைப் பெறுகிறார்; எனக் கொள்கிறோம்.
எனவே, இப்பொழுது பௌத்த வாக்குகள் கோட்டா 32%, சஜித் 26%, அநுர, மகேஷ், உதிரி கூட்டாக 12% மொத்தம் 70%
இப்பொழுது சிறுபான்மை வாக்குகளுக்கு வருவோம்.
முஸ்லிம்களின் 10% இல் 7% சஜித்திற்கு, 3% எதிரணிக்கு;
தமிழர்களின் 11%இல் 9% சஜித்திற்கு, 2% எதிரணிக்கு;
மலையகத் தமிழர்களின் 4% இல் 3% சஜித்திற்கு, 1% எதிரணிக்கு
சிங்கள கிறிஸ்தவர்களின் 5% இல் 3% சஜித்திற்கு, 2% எதிரணிக்கு;
இப்பொழுது 22% சிறுபான்மை வாக்குகள் சஜித்திற்கு, 8% சிறுபான்மை வாக்குகள் எதிரணிக்கு.
இன்னும் திருப்தி இல்லையா?
மேலும் 2% ஐ எதிரணிக்கு கொடுப்போம்.
இப்பொழுது 20% சஜித்திற்கு; 10% எதிரணிக்கு. அதில் 1% வீதம் அநுரவுக்கு, 9% வீதம் கோட்டாவுக்கு. கோட்டாவுக்கு இவ்வளவு கிடைக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் கோட்டாவுக்கு யதார்த்தத்திற்குமப்பால் சற்றுக்கூடுதலாகவே கொடுத்து இறுதி முடிவு எவ்வாறு இருக்கலாம்; என்பதுவே இக்கணிப்பீடு.
இப்பொழுது
சஜித்:
பௌத்த வாக்குகள் 26%, சிறுபான்மை 20%; மொத்தம் 46%
கோட்டா
பௌத்த வாக்குகள் 32%, சிறுபான்மை 9%, (9% சிறுபான்மை வாக்கு கற்பனைகூட பண்ணமுடியுமா? இருந்தாலும் கொடுப்போம்)
மொத்தம் 41%
அநுர 8+1 = 9%
குறிப்பு: முஸ்லிம், தமிழ் சுயேச்சைகள் வீணாக்கும் வாக்குகளும் கோட்டாவுக்கே செல்கின்றன; என்றே இங்கு கொள்ளப்படுகிறது. மாறாக அவற்றைக் கழித்தால் அவரது வாக்குகள் இன்னும் குறையும்.
இப்பொழுது யார் வெற்றியாளர், இன்ஷாஅல்லாஹ்? சஜித்தே வெற்றியாளர்.
இன்றைய களநிலவரம் இதற்கு முழுக்க மாற்றமானது. பௌத்த வாக்குகள் 32%- 26% அல்ல.
மிகவும் நெருங்கி சமமாக அல்லது 30%, 28% என்ற வகையில்தான் இருக்கிறது. இருந்தாலும் 32% ஐக் கொடுத்திருக்கிறோம்.
சஜித் 46%, கோட்டா41% எனப் பார்த்தோம்.
பௌத்த வாக்குகளில் கோட்டாவுக்கு இன்னும் 2% ஐக் கூடுதலாக கொடுப்போம்.
இப்பொழுது கோட்டா 34% பௌத்த வாக்குகள், சிறுபான்மை 9%- மொத்தம் 43%
சஜித் 24% பௌத்த வாக்குகள், 20% சிறுபான்மை வாக்குகள்- மொத்தம் 44%
இப்பொழுது யார் வெற்றி ? இப்பொழுதும் சஜித்தே வெற்றி
இரண்டாம் வாக்குகள்
——————————
ஜே வி பி யிற்கு அளிக்கும் முஸ்லிம் வாக்குகள் பெரும்பாலும் 2ம் வாக்கு வடிவத்தில் சஜித்திற்கு வந்துவிடும்.
அதேநேரம், ஜே வி பி, இரண்டாம் வாக்கை கோட்டா தவிர்ந்த எவருக்காவது அளிக்கலாம்; என அறிவித்ததன் மூலம் சஜித்திற்கு வழங்கும்படி மறைமுகமாக கூறிவிட்டார்கள்.
எனவே, ஜே வி பி யின் வாக்குகளில் ஒரு 5% இரண்டாம் வாக்காக சஜித்திற்கு வருகிறதெனக் கொள்ளுங்கள்.
இப்பொழுது
சஜித்
முதல் வாக்கு 46%
இரண்டாம் வாக்கு 5%
மொத்தம் 51%
இரண்டாவது வாக்கு இல்லாமலே வெற்றி. கிடைத்தால் அதீத வெற்றி இன்ஷாஅல்லாஹ்.
எனவே, சாத்தியப்பாட்டின் எல்லா நிலைகளிலும் சஜித்தே வெற்றி இன்ஷாஅல்லாஹ்.