ரோஜாக்களினால் செய்யப்பட்ட தாயினும் அதுவும் முட்கிரீடமே – கில்பர்ட்கீத்
யுத்தகாலத்தில் பாதுகாப்பு செயலாளராக முன்னின்றவரே தற்போதைய ஜனாதிபதி. யுத்தத்தை அச்சமின்றி முன்னெடுத்தவரே இப்போதைய பிரதமர். இந்த இருவருமே வலிமையான பதவிகளில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்புக்கு அவ்வளவு நிதி எதற்கு? அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை ஒதுக்கியிருக்கலாமே?
நல்லாட்சியின்போது இடம்பெற்ற சம்பவங்களாலும் குழப்பங்களாலும் வெறுப்படைந்திருந்த மக்கள், மிகுந்த நம்பிக்கையுடன் ஜனாதிபதியாக கோட்டாபயவை கடந்த வருடம் தெரிவு செய்தனர். ஜனாதிபதியானவுடன் மிகவும் எளிமையாகவும் மக்களை கவரும் வண்ணமும் தனது வித்தியாசமான பாணியில் வலம் வந்தார் ஜனாதிபதி.
ஆடம்பரங்களை தவிர்த்து அதேவேளை ஆன்மிகத்தை நேசிக்கும் ஒருவராகவும் பெளத்தபீடங்களின் நம்பிக்கையை பெற்றவராகவும் தன்னை உருவாக்கிக்கொண்டார். அரச திணைக்களங்களுக்கும் காரியாலயங்களுக்கும் திடீர் விஜயங்களை மேற்கொண்டு அரச உத்தியோகத்தர்களை திகைப்பில் ஆழ்த்தினார்.
இவை அனைத்துமே பாராளுமன்றத்தேர்தல் இடம்பெறும்வரை மட்டுமே. அதற்குப் பின்னர் மஹிந்தராஜபக்ஷ பிரதமரானவுடன் ,அவரின் விசுவாசிகள் தமது பழைய பாணியை கையிலேடுத்தனர். கிட்டத்தட்ட அரசாங்க நிறுவனங்களிலும் மஹிந்த அணி , கோட்டாபய அணி என இரண்டு பிரிவினர் இப்போதும் இருக்கின்றனர்.
நேர்மையான சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும் என அரச உத்தியோகத்தர்களின் விடயத்தில் ஆரம்பத்தில் கடும் கண்டிப்போடு இருந்த ஜனாதிபதிக்கு, கடந்தவாரம் அரச திணைக்களமொன்றில் நடந்த சம்பவம் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரியான பொறியியலாளர் தனது சக பெண்பணியாளரை மூர்க்கமாக தாக்கிய சம்பவம் பாராளுமன்றம் வரை எதிரொலித்து விட்டது.
இப்படியான சம்பவங்கள் மக்கள் மனதில் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இனி இறந்தகாலம் நோக்கி இலங்கை செல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனாதிபதியின் மீதிருந்த அச்சம் மெல்ல மெல்ல விலகிப்போகின்றதா என்றும் நினைக்கத்தோன்றுகிறது.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவு நல்கும் பிரிவினராக இராணுவத்தினரும் அவரின் வியத்மக அமைப்பினருமே இருக்கின்றனர். பழுத்த அரசியல்வாதியான மஹிந்தவின் பின்னால் பழம்தின்றுகொட்டை போட்ட அரசியல்வாதிகள் இருக்கின்றனர். ஜனாதிபதியின் கறாரானபேச்சு, அதீதகண்டிப்பு, ஊழலை எதிர்க்கும் குணம், ஆடம்பரத்தை வெறுத்தல் போன்ற விடயங்கள் பாராம்பரிய அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமானதாக இல்லை என்பது இவர்களின் வாதம்.
அதை பிரதமர் மஹிந்தவும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதை அவரது செயற்பாடுகளே எடுத்து காட்டுகின்றன. பாராளுமன்றத்துக்கோ அல்லது ஏனைய நிகழ்வுகளுக்கோ இரண்டு அல்லது மூன்று வாகனங்களில்தான் ஜனாதிபதி செல்கிறார். ஆனால் பிரதமர் மஹிந்தவோ தனது படைகளுடன் தான் செல்கிறார். இராணுவ பின்னணியில் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுத்த ஜனாதிபதி கோட்டாபய அதன் வழியில் அரசியல் நிர்வாகத்தை நடத்த பார்க்கின்றார்.
அது இலங்கை போன்ற நாட்டுக்கு பொருத்தமாகாது என்பதை இப்போது அவர் உணர்ந்திருப்பார். ஏனெனில் கொரோனாவின் இரண்டாவது அலைகால கட்டத்திலும் அவர் வழமை போன்று அனைத்து கட்டமைப்புகளையும் இராணுவத்தினரிடமே ஒப்படைத்திருக்கின்றார். இது சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளுக்கு எரிச்சலையே கொடுத்துள்ளது. ஏனெனில் இராணுவ நிர்வாகம் சாதாரண மக்களின் அருகாமைக்கு சென்று சேவைகளை முன்னெடுப்பதில்லை. இதை சரிவர கையாள முடியாத காரணத்தினாலேயே தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பின் சில மாடிவீட்டு குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் மக்கள் பொறுமையிழந்து கடந்தவாரம் வீதிகளில் இறங்கி தமக்கு நிவாரணம் கேட்டனர்.
மறுபக்கம் ஒவ்வொரு நாளும் ஊடகசந்திப்புகளை நடத்திவரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கொரோனா இரண்டாவது அலை பற்றி கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். தமது கருத்துக்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டு. ஒரு கட்டத்தில் அவர்கள் கூறிய விடயம் தற்போது நடக்கின்றது. அதாவது வீடுகளில் மரணங்கள் அதிகரிக்கும் என அவர்கள் ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தனர். தற்போது கொரோனா மரணங்கள் 100 எட்டிவிட்டன. மற்றுமன்றி கடந்த 21 நாட்களில் 63 மரணங்கள் சம்பவித்துள்ளன.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் ஜனாதிபதி, தான்தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றியிருந்த உரை பலரை புருவம் உயர்த்த செய்திருந்தது. எந்த சவால்களுக்கும் முகங்கொடுக்கதயார் என்று தெரிவித்திருந்த அவர் பெரும்பான்மை மக்களை மனங்குளிரச்செய்யும் வகையில் தன்னை தெரிவு செய்த 69 இலட்சம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள மக்களே என்பது ஒன்றும் இரகசியமானதல்ல என்றும் கூறியிருந்தார். கடந்தவருட ஆரம்பத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன்தான் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதி என்று அவர் கூறியிருந்தார்.
இது ஒருவகையில் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால் தமக்கு ஒன்றும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஊழலற்ற ஆட்சியை அவர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து வரவேற்றிருந்தனர். ஆனாலும் தற்போது மீண்டும் மஹிந்த ராஜபக்ச யுகத்துக்கே சென்றுவிட்டோமா என நாட்டு மக்கள் ஒருகணம் தம்மை கிள்ளிப்பார்த்து யோசிக்கின்றனரோ தெரியவில்லை. குற்றச்சாட்டுக்காக சிறைவாசம் அனுபவித்து வந்தவர்கள் பிணையில் வருகின்றனர்.
அதுவும் மஹிந்தவின் ஆட்சியில் நிர்வாக பதவிகளில் இருந்து ஊழல்மோசடிகளில் ஈடுபட்டவர்கள் என குற்றஞ்சாட்டபட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இன்னும் என்னென்ன இடம்பெறுமோ என மக்கள் ஆவலாய் இருக்கின்றனர். ஆனால் மறுபக்கம் கொரோனா நெருக்கடியால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டையும் மக்களையும் இந்த அரசாங்கம் மறந்துவிட்டதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நெருக்கடியான நிலைமையில் கொண்டுவரப்பட்ட வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் பக்கமிருக்கும் எம்.பிக்களும் சில இராஜாங்க அமைச்சர்களுமே புகழ்பாடாது அமைதி காத்து வருகின்றனர். யுத்தம் இல்லாத நிலைமையில் பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிகப்படியான 355 பில்லியன் ரூபா நிதியாருக்காக ?தமிழர்கள் மீது யுத்தம் நடத்தவா அல்லது இலங்கை வேறுநாடுகளுடன் யுத்தம் புரியப்போகின்றதா என சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி.பாராளுமன்றில் கிண்டலாக கேள்வி எழுப்பியிருந்தார்.
யுத்த காலத்தில் நாட்டை பாதுகாப்பதில் பாதுகாப்பு செயலாளராக முன்னின்றார் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய. யுத்தத்தை முன்னெடுத்தார் அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த. யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகள் கடந்தும் இப்போது இந்த இருவருமே வலிமையான பதவிகளில் இருக்கும் போது நாட்டின் பாதுகாப்புக்கு என்ன அச்சுறுத்தல் இருக்கப்போகின்றது? ஆகவே பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு முகங்கொடுத்து வரும் நாட்டின் மத்திய தரவர்க்கம் மற்றும் கீழ்மட்ட மக்களுக்கும் நிவாரணங்களை ஒதுக்கியிருக்கலாமே என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியானவுடன் எல்லாவற்றையும் சரிசெய்து விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார் கோட்டாபய. சிலவேளைகளில் அது சாத்தியப்பட்டிருக்கலாம். எனினும் சவாலாக கொரோன உருவெடுத்துவிட்டது. ஆரம்பகட்டத்தில் அதை கட்டுப்படுத்துவதில் திறமையாக செயற்பட்ட அவர் பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரல் மற்றும் அதிகாரத்தை தக்க வைத்தல் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தார்.
மஹிந்த தரப்பு ஆதரவாளர்களில் அனைவரும் ஜனாதிபதியின் கொள்கைகளை விரும்புகின்றவர்கள் என்று கூறமுடியாது. தாம் ஆதரவளிக்கும் மஹிந்தவின் சகோதரர் என்ற மரியாதை இருக்கலாம். மற்றும்படி அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ள ஜனாதிபதி அதை கண்காணிப்பதற்கு தனது ஆதரவாளர்களையே வைத்திருக்கின்றார். ஏனெனில் அவர் தனது அண்ணன் மஹிந்தவை நம்பும் அளவுக்கு அவரின் அருகில் இருப்பவர்களை என்றும் நம்பத்தயாராக இல்லை. மஹிந்தவின் ஆட்சி காலத்தில் அவரது வீழ்ச்சி போக்குக்கு காரணமானவர்களை அப்போதே நன்கறிந்திருந்தவர் ஜனாதிபதி கோட்டாபய.
அப்போது அவர்களை வெறுத்த மக்கள் வேறுவழியின்றி அவர்களையே தெரிவு செய்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபயவின் மீது நம்பிக்கை வைத்தே தெரிவு செய்தனர். இப்போது போகும் போக்கை பார்த்தால் ஜனாதிபதியின் மீதும் நாட்டுமக்களில் ஒரு பிரிவினருக்கு நம்பிக்கை குறைந்து வருவது போன்று தெரிகின்றது.
நேர்மையான ஆட்சியை தருகிறேன் என்று களமிறங்கிய ஜனாதிபதியும் சராசரி அரசியல்வாதியாகி விட்டாரோ என மக்கள் முணுமுணுப்பது நன்றாகவே விளங்குகின்றது. ஆட்சி நிர்வாகம் என்பது ஒருபக்கம் அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொடுத்தாலும் மறுபக்கம் அதுதலையில் சூட்டப்படும் முட்கிரீடம் தான் என்பது அனுபவித்தவர்களுக்குத்தானே தெரியும்?