பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் திருப்திகரமானவையாக உள்ளன. எனவே பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசீ பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணையவழியூடாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகக் காணப்படுகிறது. மே மாதத்துக்கு முன்னரே கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன ஒன்றிணைந்து பல சுகாதார விதிமுறைகளை வெளியிட்டுள்ளோம்.
இலங்கையில் 1918 ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து செயற்படுகிறது. அப்போதிலிருந்து கல்விக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறைக்கு கல்வி இன்றி இயங்க முடியாது. அதே போன்று கல்விக்கும் சுகாதாரம் இன்றியமையாததாகும்.
எனவே பாடசாலைக்குள் கொத்தணி உருவாவதனை பார்ப்பதற்கான தேவை எமக்குக் கிடையாது. அவ்வாறு உருவாகக் கூடிய வாய்ப்புக்களும் மிகக் குறைவாகும். காரணம் பாடசாலைகளில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள தயார்ப்படுத்தல்கள் திருப்தியடையக் கூடியதாக உள்ளன. சுகாதார மேம்பாட்டு குழுவினால் கண்காணிப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.