உரிமையை விட்டுக் கொடுத்து அபிவிருத்தியைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. அடிபணிந்து அபிவிருத்தி என்பது எம்மிடம் செல்லாது. உரிமையுடனான அபிவிருத்தி எனின் அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்று (22) திருகோணமலையில் இடம்பெற்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியினருடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது இருக்கும் அரசியல் சாசனம் தொடர்பில் எமக்கு அதிருப்தி இருக்கின்றது. 1994ம் ஆண்டின் பின்னர் சிங்கள மக்களும் இதனை நிராகரிக்கும் வண்ணமே செயற்பட்டுள்ளனர். இன்று இந்த நாட்டில் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அரசியல் சாசனம் இல்லை. மக்களின் இணக்கப்பாட்டுடன், மக்களின் சம்மதத்துடன், மக்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட ஒரு அரசியல் சாசனம் இங்கு இல்லை. எமது கோரிக்கை நியாயமான நியாயப்படுத்தக் கூடிய ஒன்றே.
நாம் பலவிதமான இழப்புகளை அடைந்துள்ளோம். அபிவிருத்தி என்பதும் எமக்கு முக்கியம். ஆனால் உரிமையை விட்டுக் கொடுத்து அபிவிருத்தியைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. அடிபணிந்து அபிவிருத்தி என்பது எம்மிடம் செல்லாது. உரிமையுடனான அபிவிருத்தி எனின் அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம்.
நாங்களும் கடந்த அரசு காலத்தில் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால் அது எமது உரிமையை விட்டுக் கொடுத்து பெற்ற அபிவிருத்தி அல்ல. எமது உரிமை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டே இவ் அபிவிருத்திகளை மேற்கொண்டோம்.
போராளிகளின் அர்ப்பணிப்பு வீணாகிவிடக் கூடாது. அப்போராட்டத்தின் வெற்றி தோல்வி என்பது வேறு விடயம். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்பு வீணாகும் வகையில் ஒரு அறைகுறைத் தீர்விற்கு நாம் ஒருபோதும் சம்மதிக்கமாட்டோம்.
எனவே நாங்கள் போராளிகளுடன் ஒருமித்துச் செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம். இது தேர்தலுக்காக மாத்திரம் அல்ல. தேர்தலுக்குப் பிறகும் இந்த ஒற்றுமை தொடரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்தவதற்காக எமது முன்னாள் போராளிகள் செயற்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
தமிழ் மக்கள் தங்கள் உரிமையுடன் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். அது அவர்களின் பிறப்புரிமை. அதற்காகப் பணியாற்ற வேண்டியது எனது கடமை. அபிவிருத்தி என்ற பெயரில் பின்கதவால் சென்று உதவி பெற்று எமது சமூகம் வாழ முடியாது என்று தெரிவித்தார்.