கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்குவதற்கு உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள் இருக்கும் நாடுகளில் அனுமதிக்கும்போது சுகாதார அமைச்சின் தொழிநுட்பக்குழு இது தொடர்பாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவது கவலையளிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல் அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கத்தில் இருக்கும் எமது தலைவர்கள் அமைச்சரவையில் பல தடவைகள் பேசி அதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்தும் சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு இது சம்பந்தமாக எதிர்ப்பை தெரிவித்து அந்த முடிவை தள்ளிப்போட்டுள்ளது..
உண்மையில் உலகில் உள்ள விஞ்ஞானிகளில் தலைசிறந்து விளங்கும் விஞ்ஞானிகள் இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா உட்பட 200க்கும் அதிகமான நாடுகளில் இவ்வாறான உடல்களை அடக்குவதற்கு அங்குள்ள நிபுணர்கள் அனுமதியளித்துள்ளனர்.
மேலும் மரணிப்பவரை அடக்குவதால் அவரில் இருக்கும் வைரஸ் நீரில் கலந்துவிடும் என்ற அச்சம் இருக்குமாக இருந்தால், அதனை ஒரு பெட்டியில் அடைத்து நீர்மட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் அடக்கலாம்.
குறிப்பாக முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மேல் நில பிரதேசங்களில் இந்த ஜனாஸாக்களை அடக்குவதற்காக வசதிகளை செய்துகொடுக்க அந்த பிரதேச ஊர் தலைவர்கள் முன்வந்திருக்கின்றனர்.
இது சம்பந்தமாக அரசின் அமைச்சரவையில் உள்ள உயர் தலைவர்கள் இது தொடர்பாக சாதகமான முடிவுகளை எடுத்தாலும், கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்காத நிலைபோன்று இந்த நடவடிக்கை இருந்து கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கம் அவசரமாக இந்த விடயத்தில் தலையிட்டு ஒரு நியாயமான தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.