கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை கொண்டு அரசியல்வாதிகள் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவரை புதைப்பதா ? தகனம் செய்வதா என்ற விடயத்தில் நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிடும் கருத்துக்கள் ஒருதலைபட்சமானது.
இவர் நீதியமைச்சர் மாத்திரமே தவிர நாட்டு தலைவர் அல்ல, நெருக்கடியான சூழ்நிலையில் சிங்கள பௌத்த மக்கள் மத உரிமைகள் பலவற்றை விட்டுக் கொடுத்துள்ளார்கள். முஸ்லிம் சமூகத்தினர் நெருக்கடியான நிலையில் தங்களின் மத உரிமைகளை கோருவது முரண்பாடானது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்துக் கொள்கிறார்கள். சுகாதார தரப்பினர் விரைவாக முரண்பாடற்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.