பாடசாலை மாணவர்களுக்கென போக்குவரத்து சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டிகளுக்கு அமைவாக செயல்படுமாறு பொலிசார் வாகன சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பில் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வேன்களாக இருக்கலாம், ஏனைய தனியார் வாகனங்களாக இருக்கலாம். இந்த வாகன சாரதிகள் வழிகாட்டி தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று தெரிவித்தார்.
தண்டப்பணம் விதிப்பதற்காக, கைது செய்வதற்காக, சிறைத்தண்டனைக்காக நாம் இவற்றை மேற்கொள்ளவில்லை பாடசாலை மாணவர்களின் நலனை கவனத்தில் கொண்டே இதனை வலியுறுத்துகின்றோம்.
பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது உரிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகள் பல உண்டு. கல்வி அமைச்சும் இது தொடர்பாக வழிகாட்டி ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
இதற்கு உட்பட்ட வகையில் வாகன சாரதிகள் செயல்பட வேண்டும். நாம் சுகாதார பிரிவுடன் இணைந்து இதற்கான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)