“ஸதக்கத்துல் ஜாரியா” என்பது அல்லாஹ் மிகவும் விரும்பக் கூடிய நிலையான தர்மம். மனிதன் வாழும் போது மட்டுமன்றி இறந்த பின் மண்ணறை வாழ்விலும் அது அவனுக்கு நன்மைகள் சேர்க்கும் ஒரு அழகான தர்மம்.
மறுமையின் நிரந்தர வாழ்வு மீது பற்றுள்ள இறையடியார்கள் பூரண இறை திருப்தியை பெற்றுக் கொள்ளும் தூய எண்ணத்துடன் பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள் அல்லது பொது மக்கள் பயன் பெறக்கூடிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தமது நிலையான சொத்துக்களை தர்மம் செய்வார்கள். இவ்வாறு இறை பாதையில் செய்யப் படும் நிலையான தர்மம் “வக்பு” என்றழைக்கப் படுகிறது. “நிலைத்திருந்து பயனளிக்கும்” என்பது இதன் பொருள்.
நம் முன்னோர்கள் சக்தி மிக்க ஒரு முஸ்லிம் சமூகத்தைக் கட்டியெழுப்ப உறுதியாக அத்திவாரமிட்டு அதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியன. சிறுபான்மையாக இருந்தாலும் நாம் கௌரவாமாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற தூர நோக்குடன் அவர்கள் செய்த அத்தனை சேவைகளும் மகத்தானவை. அப்போது நாம் பெற்ற உரிமைகள் , உடைமைகளைப் பற்றி உதாசீனமாக இருந்ததால் அவை இன்று கேள்விக்குறியாகி இருப்பதை நாமறிவோம் .
அது மட்டுமின்றி பிற்காலத்தில் வந்த சிலரது சுயநலப் போக்கினால் பேதமையும் இனவாதமும் வெளிப்படையாகவே தலைதூக்கி அடிப்படை உரிமைகள் கூட மீறப்படும் நிலை உருவாகி இருக்கிறது . விமர்சிக்கப் படும் ஒரு சமூகமாக நம் சமூகம் மாறி வருகிறது. இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு நம் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது .
அந்த வகையில் நமது உடைமைகளை எடுத்துக் கொண்டால் இன்று மிகவும் மோசமான நிலையில் பாதிப்புக்குள்ளாகி இருப்பது “வக்பு” சொத்துக்கள். பராமரிப்பின்றியும், பாதுகாப்பின்றியும் நாசமாக்கப் படுகின்றன. வெளிப் படையாகவும், மறை முகமாகவும் துஷ்பிரயோகம் செய்யப் படுகின்றன.
இது சம்பந்தமான நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் இலங்கை “வக்பு” சபையில் பதிவாகி இருப்பதாக பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சும் “வக்பு” சபையும் அடிக்கடி இது சம்பந்தமான செய்திகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் கூட “வக்பு” சொத்துக்களுக்கு நடக்கும் மோசடிகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. “வக்பு” சொத்து மோசடிகளை தடுக்கும் நோக்குடன் போலீஸ் முறைப்பாடுகளும், நீதி மன்றங்களில் வழக்குப் பதிவுகளும் ஏராளமாகக் காணப்படுவதை அறிய முடிகிறது .
இன்று நம் சமூகத்தில் நடக்கும் “வக்பு” சொத்துக்களின் துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் சிலதையும் பார்ப்போம்.
(1) முதலாவதாக “வக்பு” சொத்துக்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சில் அல்லது “வக்பு” சபையில் அவசியம் பதிவு செய்வது கட்டாயம் என வலியுறுத்தப் பட்டிருப்பினும், ஏராளமான “வக்பு” சொத்துக்களை பதிவு செய்யாது, நம்பிக்கைப் பொறுப்புதாரர்கள் அவர்களது சொந்த விருப்பப்படி கையாள்கின்றனர் .
(2) இன்னும் பல “வக்பு” சொத்துக்கள் பராமரிக்கப் படுவதுமில்லை. அவற்றை அபிவிருத்தி செய்வதுமில்லை. அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப் படுவதுமில்லை.
(3) இவ்வாறான பல “வக்பு” சொத்துக்கள் சட்டவிரோத ஆவணங்கள் செய்து பிறரால் அபகரிக்கப் பட்டிருக்கின்றன.
(4) பல “வக்பு” சொத்துக்களது ஒப்பந்தங்கள் வருடக் கணக்கில் புதுப்பிக்கப் படாமல் , ஆரம்ப காலத்தில் நியமிக்கப்பட்ட அதே வாடகையே இன்னும் செலுத்தப் படுகிறது .
(5) மேலும் பல சொத்துக்களுக்கு ஆரம்ப வாடகையாக நியமிக்கப்பட்ட சிறு தொகையை, உரிய பள்ளிக்கு அல்லது ஸ்தாபனத்துக்கு செலுத்திவிட்டு , இன்றைய புதிய மதிப்புக்கு வேறு ஒருவருக்கு மீண்டும் வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை பழைய வாடகைதாரரே அனுபவிக்கும் சம்பவங்கள் ஏராளம் உண்டு.
(6) சில நம்பிக்கை பொறுப்பாளர்கள், தமது பொறுப்புக்குக் கீழுள்ள “வக்பு” சொத்தை வேறு ஒருவரது பெயரில் வாடகைக்கு எடுத்து அவர்களே பயன்படுத்துகின்றனர்.
(7) இன்னும் சில நம்பிக்கைப் பொறுப்பு தாரர்கள், வேறு ஒரு நபரின் பெயரில் சந்தை விலையிலும் பார்க்கக் குறைந்த விலைக்கு “வக்பு” சொத்தை வாடகைக்கு எடுத்து இன்னுமொருவருக்கு கூடிய விலைக்கு வாடகைக்குக் கொடுக்கின்றனர்.
இவ்வாறான செயல்கள் சட்ட விரோதமானது என வக்பு சட்டம்; பிரிவு- 22 (1) B இல் பதிவாகி உள்ளது.
(8) அடுத்து , மிகவும் முக்கியமானதொரு மோசடியாக இன்று நடப்பது, இறையச்சமற்ற சில நிர்வாகிகளால் “வக்பு” சொத்துக்கள் விற்பனை செய்யப் படுகின்றன.
இது சம்பந்தமாக நாட்டின் பொதுவான சட்டம் கடுமையாக இருந்தாலும் “வக்பு” சட்டமும், இஸ்லாமிய ஷரிஆ சட்டமும் மத ஸ்தாபனங்களுக்கு அன்பளிப்புச் செய்யப் பட்ட (“வக்பு”) சொத்துக்களை எக் காரணத்திற்காகவும் விற்பனை செய்ய முடியாதென்பதையே வலியுறுத்துகின்றது. அப்படி இருந்தும் ஏராளமான “வக்பு” சொத்துக்கள் போலிக் காரணங்களை உருவாக்கி வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் விற்பனை செய்யப் படுகின்றன.
“வக்பு” என்பது இஸ்லாத்தில் முதலாவது நடந்தது “கைபர்” இல் தனக்குக் கிடைத்த மிகவும் பெறுமதியான ஒரு காணியை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைறஹி வஸல்லம் அவர்களது அனுமதியுடன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அக் காணியை விற்கவோ, நன்கொடையாக வழங்கவோ, அனந்தரமாக்கவோ முடியாத “ஸதக்கா”வாக “வக்பு” செய்ததாகும்.
அன்று முதல் “வக்பு” சொத்துக்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதற்காக கடுமையான சட்டங்கள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இருப்பினும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியவர்களே “வக்பு” சொத்து மோசடிகளுக்கும் உடந்தையாக இருந்து விடுகின்றனர். மார்க்க சட்டங்களை நன்கு தெரிந்த சில சன்மார்க்க அறிஞர்களும் கூட இவ்வாறான பாவச் செயல்களைத் தடுக்காமல் துணை போவது மிகவும் வேதனைப் படக் கூடிய விடயம்.
இலங்கையில் அமுலில் இருக்கும் முஸ்லிம்களுக்கான தனியான சட்டங்களில் ஒரு முக்கியமான பகுதி “வக்பு” சட்டமாகும். முஸ்லிம் பள்ளிவாயல்களின் நம்பிக்கைப் பொறுப்புச் சட்டம் எனவும் இதனைக் கூறலாம். 1956 ஆம் ஆண்டு “வக்பு” சட்டத்தின் இலக்கம் 51 இல் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் புனிதஸ்தளங்களைப் பதிவு செய்வது முதல், அதன் நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் நியமனங்கள், அதிகாரங்கள் என்பனவற்றுடன் “வக்பு”சொத்துக்கள் , அறக்கட்டளைகள் சம்பந்தமாகவும் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. ஏறத்தாழ அறுபது வருடங்கள் பழமை வாய்ந்த இந்த “வக்பு” சட்டங்களில் 1982 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சில திருத்தங்கள் தவிர பாரிய மாற்றங்கள் எதுவும் இதில் செய்யப் படவில்லை.
இவ்வாரான சட்டங்கள் பற்றி பொது மக்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது கடமையாகும். ஆனால் பெரும்பாலான முஸ்லிம் ஊர்களிலும் பொது மக்கள் மட்டுமன்றி பள்ளி வாயல் அல்லது மத்ரஸாக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் கூட ( BOARD OF TRUSTEES) 90 சத விகிதமானவர்கள் இது பற்றிய எந்தவொரு அடிப்படை அறிவும் அற்றவர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம். அத்தோடு அனேகமான சன்மார்க்க அறிஞர்களும் கூட இது பற்றிய சரியான தெளிவற்றவர்களாக இருப்பது இன்னும் வேதனைக்குரிய விடயமாகும்.
“வக்பு” சட்டங்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் அதற்கான ஆதார கிரந்தங்களான “பத்ஹுல் முஈன்” பாகம் ; 3, பக்கம் ; 157-158-179, மேலும் “அல் மஹல்லிஅலா மின் ஹாஜித் தாலிபீன்” பாகம் 3, பக்கம் ; 105-108, மேலும் ஏனைய புனித இஸ்லாமிய சட்டக் கிரந்தங்களிலும் தெளிவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தியாவின் பிரபல மார்க்க அறிஞர் அல்லாமா செய்யிது முஹம்மது லெப்பை (மாப்பிள்ளை லெப்பை ஆலிம்) அவர்கள் எழுதிய “மஙானி” என்ற நூலிலும் பாமர மக்கள் படித்துத் தெரிந்து கொள்ளக் கூடியவாறு மிகத் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது .
எந்த ஒரு காரணத்திற்காகவும் “வக்பு” சொத்தொன்றினை விற்பனை செய்வதும் அல்லது நன்கொடையாக வழங்குவதும், அனந்தரமாக்குவதும், உரிமை மாற்றம் செய்வதும் முடியாதென அழுத்தம் திருத்தமாக கூறுகிறது “வக்பு” சட்டத்தின் அடிப்படை விதி.
சிலர் தமது சொத்துக்களை “வக்பு” செய்யும் போது தூர நோக்குடன் சிந்தித்து தாம் நன்கொடையாக வழங்கிய சொத்துக்களுக்கு பிற் காலத்தில் மோசடிகள் இடம் பெறாதிருக்க வேண்டும் என்பதற்காகவே சில நிபந்தனைகளையும் சொத்துரிமைப் பத்திரத்தில் குறிப்பிட்டு “வக்பு” செய்கிறார்கள். அவ்வாறான நிபந்தனைகள் குறிப்பிடப் பட்டிருந்தால் அவை “குர்ஆன் ஹதீஸ்களின் வார்த்தைகளை மாற்ற முடியாதது போன்று, எவ்வித மாற்றமும் இன்றி பின்பற்றப் பட வேண்டும்” என்பதும் “வக்பு”சட்டத்தின் பொதுவான நியதியாகும்.
இவை அனைத்தையும் மீறி “வக்பு” செய்யப் பட்ட சொத்துக்களை விற்பவர்கள் , அதற்குத் துணை போகிறவர்கள் அல்லது அதனை துஷ்பிரயோகம் செய்பவர்கள் நிச்சயம் “அல்லாஹுத் தஆலா” வின் சட்டத்தை மீறி ஹராத்தை செய்த குற்றத்திற்கு ஆளாவார்கள் என்பது தெளிவாகிறது.
அவ்வாறான சொத்துக்களை சிறந்த முறையில் பாதுகாத்துப் பராமரிப்பது முஸ்லிம்கள் அனைவரதும் கடமையும் உரிமையும் கூட. அத்துடன் அவற்றுக்கு நடக்கும் அநீதிகளை வேடிக்கை பார்ப்பது இறைவனிடம் பதில் கூற வேண்டிய நிலைக்கு தம்மைக் கொண்டு போய் சேர்க்கும் என்பதையும் இறை விசுவாசம் கொண்டோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எமது முன்னோர்கள் மார்க்க விடயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர்களாகவும், சமூகப் பற்றுள்ளவர்களாகவும், எப்போதுமே சமூக நலன்களில் மிகவும் அக்கரை கொண்டவர்களாகவும் வாழ்ந்தவர்கள். அவர்கள் தூர நோக்குடன் ஆற்றிச் சென்ற தொண்டுகளையும் நற் செயல்களையும் தான் இன்றும் நம் சமூகம் அறுவடை செய்து கொண்டிருக்கிறது .
அன்று அவர்கள் “தானும் தன் குடும்பமும் ” என்று வாழ்ந்திருந்தால் இன்று எங்கள் நிலை என்னவாகி இருக்கும் ? இன்று பள்ளி வாயில்கள், மத்ரஸாக்கள், ஏனைய பொது நிறுவனங்கள் என்பனவற்றில் எது நடந்தாலும் “அது தனது பிரச்சினையில்லை” என்ற சுயநல உணர்வுடன் எதையுமே கண்டு கொள்ளாமல் மக்கள் வாழ்கின்றனர்.
தவறுகளை தடுக்கவும் தட்டிக் கேட்கவும் தனி மனிதனுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைக் கூட அறியாதவர்களாக இருப்பதால் தான் பொதுச் சொத்துக்கள் மீது தவறுகளும், மோசடிகளும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. எதையுமே கண்டு கொள்ளாத சுயநலப் போக்கிற்கு நாம் பழக்கப் பட்டிருப்பதால் இன்று நம் சமூகம் பல இன்னல்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது .
“வக்பு” சொத்துக்களின் நிரந்தர உரிமையாளன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அவனைத் தவிர வேறெவருக்கும் இதில் உரிமை கொண்டாட முடியாது என்பதையே சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன. சொத்து வழங்கப்பட்ட பள்ளி வாயல் , மத்ரஸா அல்லது குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு அச் சொத்துக்களை பாதுகாத்துப் பராமரிக்கும் கடமையும் பொறுப்பும் மட்டுமே உண்டு. ஆனால் அதற்கான உத்தியோக பூர்வ உரிமை “வக்பு” சபைக்கு மட்டுமே உண்டு .
தனது ஒரு அடி நிலத்தைக் கூட பிறருக்கு விட்டுக் கொடுக்க விரும்பது சுயநலமாகவே சிந்தித்துப் பழகிவிட்ட மக்கள் தமக்கு சொந்தமான உடைமைகளைக் காத்துக் கொள்ள இரத்த பந்த உறவுகளைக் கூடத் துண்டித்து விட்டு வழக்கும் வம்புமாக அலைந்து கொண்டிருப்பதை அன்றாடம் காண்கிறோம். இவ்வாரிருக்க, நல் உள்ளம் படைத்த ஒரு சில வள்ளல்கள் தமது பெறுமதி மிக்க காணி பூமிகளை அல்லாஹ் ஒருவனின் திருப் பொறுத்தத்தை மட்டுமே நாடி “வக்பு” செய்கின்றனர். அதன் பின்னர் அது அல்லாஹ்வின் சொத்தாக மாறி விடுகிறது , அவற்றைப் பாதுகாத்துப் பராமரிக்க தெளிவான சட்டங்களிருந்தும் அச் சொத்துக்களின் பெரும்பாலானவை துஷ்பிரயோகம் செய்யப் படுகின்றன.
“வக்பு”சொத்துக்கள் “வக்பு” சபையில் பதிவு செய்யப்படுவதுடன் அச் சொத்துக்களை சபையின் அனுமதியின்றி எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்பதை “வக்பு” சட்டங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. அத்தோடு அந்தந்த ஊரின் ஜமாஅத்தினருக்கும் “வக்பு” சொத்துக்களைப் பாதுகாக்கும் கடமையும் பொறுப்புமிருக்கிறது . இறை விசுவாசம் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் இதை உணர்ந்து “வக்பு” சொத்துக்களைப் பாதுகாத்து அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வோம் .