ஜனாசா எரிப்பு சம்பந்தமாக ஆஸாத் சாலி மனித உரிமைகள் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தபின் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் சொல்கிறார் சம்பிரதாய பூர்வ முஸ்லிம்கள் ஜனாஸாக்கள் எரிப்பதை ஆதரிக்கின்றார்கள் என. அப்போது ஆசாத் சாலி சொல்கிறார், அப்படி இல்லை, நானும் சம்பிரதாயபூர்வ முஸ்லிம்தான் என்று. இங்குதான் நாம் பலவிடயங்களை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அதாவது,
2013களில் ஞானசார கொண்டு வந்த பிரச்சாரம்தான் சம்பிரதாய பூர்வ முஸ்லிம்கள் என்ற சொல். அதற்குமுன் இப்படியொரு வார்த்தையை முஸ்லிம்கள் கேள்விப்பட்டதில்லை.
இலங்கையில் உள்ள சம்பிரதாய முஸ்லிம்கள் ஹலால் சேர்டிபிகேட்டை விரும்பவில்லை, கறுப்பு அபாயாவை விரும்பவில்லை என்றெல்லாம் சொன்னபோது, இதுவெல்லாம் எனக்கு ஆசாத் சாலியும் அவரின் சகோதரரும் சொல்லித்தான் தெரியும் என்றார்.
அப்போதே நாம் பகிரங்கமாக கூறினோம். அதாவது இந்த நாட்டு முஸ்லிம்களை பிளவு படுத்தி பலவீனப்படுத்துவதற்காகவே இவ்வாறு சம்பிரதாய முஸ்லிம்கள் என்ற வார்த்தையை புகுத்துகிறார்கள். இதன் மூலம் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து அனைவரும் அழிய வேண்டி வரும் என்றும், இந்த நாட்டின் அனைத்து முஸ்லிம்களும், முஸ்லிம்கள்தான் என்பதை முஸ்லிம் சமூகம் உரத்து சொல்ல வேண்டும் என கூறினோம்.
இந்த சமூகம் இதை கேட்கவில்லை. சம்பிரதாய முஸ்லிம், வஹ்ஹாபி முஸ்லிம் உள்ளதாக முஸ்லிம் சமூகமே சொன்னது.
கடைசியில் வஹ்ஹாபிகளுக்கெதிரான போராட்டம் என்று சொல்லி முழு முஸ்லிம்களும் தாக்கப்பட்டனர். அளுத்கமையில் தாக்கப்பட்ட அனைவரும் சம்பிரதாயபூர்வ முஸ்லிம்கள்தான். எரிக்கப்பட்ட அனைத்து கடைகளும் சம்பிரதாயபூர்வ முஸ்லிம்களுடையதுதான்.
இதன் தொடராக சிங்கள இனவாதிகளுக்கு இந்தச்சொல் நல்ல வாய்ப்பை கொடுத்தது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று சொல்வது, பின்னர் நாங்கள் சம்பிரதாயபூர்வ முஸ்லிம்களை குற்றம் சாட்டவில்லை என்பர். இதைப்பார்த்து முஸ்லிம் சமூகம் சந்தோசப்பட்டது. ஆனால் இனவாதிகள் இலக்கு வைத்ததெல்லாம் அப்பாவி சம்பிரதாயபூர்வ முஸ்லிம்களைத்தான்.
திகன, அம்பரை, மினுவாங்கொடை, கண்டியில் தாக்கப்பட்டது வஹ்ஹாபி முஸ்லிம்களா? இல்லை. அனைவருமே சம்பிரதாய முஸ்லிம்கள்தான்.
இந்த நாட்டில் வஹ்ஹாபி என தம்மை அழைத்துக்கொள்ளும் ஒரு முஸ்லிமும் இல்லை என நான் தொடர்ந்து கூறினேன். இதனை அனைத்து முஸ்லிம் தலைவர்களும் வலியுறுத்தி நாங்கள் முஸ்லிம்கள் மட்டுமே என கூறச்சொன்னேன். பலரும் கேட்கவில்லை.
இப்போது கொரோனா ஜனாஸா எரிப்பை சம்பிரதாய முஸ்லிம்கள் ஆதரிப்பதாகவும் எரிப்புக்கெதிராக பேசும் நீதி அமைச்சரை கூட தீவிரவாத முஸ்லிம் என சொல்கிறார்கள் சில சமயத்தலைவர்களும் ஊடகங்களும்.
அலி சப்ரியே தீவிரவாதி என்றால் இந்த நாட்டில் வேறு யார் சம்பிரதாய முஸ்லிம்கள்?
இன்று ஆஸாத் சாலியும் தான் சம்பிரதாய முஸ்லிம் என சொல்லி நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால்த்தான் சொல்கிறோம். இனியாவது முஸ்லிம் சமூகம் விழிக்க வேண்டும். எங்கள் மத்தியில் சம்பிரதாய முஸ்லிம், நவீன முஸ்லிம், வஹ்ஹாபி முஸ்லிம் என்றெல்லாம் இல்லை, நாங்கள் அனைவரும் அள்ளாஹ்வின் வேதத்தையும், கண்மனி முஹம்மது நபி (சல்) அவர்களையும் பின்பற்றும் ஒரிஜினல் முஸ்லிம்கள் என பறை சாற்ற வேண்டும்.
“நாங்கள் முஸ்லிம்கள்” என்ற ஒற்றுமையை நோக்கி நாம் முன்னேறுவதன் மூலமே நமக்கெதிரான இனவாதத்தை கட்டுப்படுத்த முடியும்.
முபாறக் மௌலவி – உலமா கட்சி.