‘தம்புள்ளை மாநகரசபை அமர்வில் தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத, தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலில் சஹ்ரான் உரையாற்றியுள்ளதாக கூறியுள்ளமை அப்பட்டமான பொய்யாகும். இயலுமென்றால் இதனை அவர் நிரூபித்துக் காட்டவேண்டும். பொய் தகவல்களை வழங்கி மீண்டும் இனமோதலை உருவாக்க முயற்சிக்கக் கூடாது’ என தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம். சலீம்தீன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தம்புள்ளை நகரில் வாழ்ந்த தமிழர்களின் வழிபாட்டுக்கென இருந்த சிலையொன்றினை 2002 ஏப்ரலில் உடைத்து சிதைத்து இங்கு தமிழ் முஸ்லிம் கலவரத்தை உருவாக்க முயசித்தார்கள். முஸ்லிம்களே இந்து சிலையை உடைத்ததாக பெரும்பான்மையினர் குற்றம் சுமத்தினார்கள். இன்று தம்புள்ளையில் தமிழர்கள் இல்லை.
இதே போன்று சஹ்ரானை பள்ளிவாசலுடன் தொடர்புபடுத்தி அதனை அப்புறப்படுத்த சூழ்ச்சி செய்கிறார்கள். தம்புள்ளை முஸ்லிம்கள் தம்புள்ளைக்கு வெளியே பள்ளிவாசல்களுக்கு செல்வதற்கு பஸ் சேவை தருவதாக தம்புள்ளை மேயர் சபை அமர்வில் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் நாடகமாகும். எனவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகள், உலமாக்கள், புத்திஜீவிகள் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாரளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பள்ளிவாசலுக்கு சுமுகமான தீர்வொன்றினைப் பெற்றுத் தரவேண்டும்’ என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli