உணர்வுபூர்வமான விடயங்களை மதிக்கும் தன்மை முற்றாக இல்லாமல் போயுள்ளது! – நீதி அமைச்சர் அலி சப்ரி

நாட்டில் அனைத்துவிடயங்களும் இனவாத கோணத்தில் பார்க்கப்படுவது துரதிஷ்டவசமாகும்

கொரோனா தொற்றில் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருபோதும் இணங்கமாட்டேன். நாட்டில் அனைத்து விடயங்களையும் இன, மதவாத கோணத்தில் பார்க்கப்படுவது துரதிர்ஷ்டவசமாகும் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை தலைதூக்கி இருப்பது தொடர்பாக அவருடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி – இதுதொடர்பாக கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டதா?

பதில்,  –ஆம்,

கேள்வி – இதுதொடர்பாக அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளனவா?

பதில் – இல்லை,எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அதுதான் புதுமையான விடயம். இந்த விடயத்தில் அமைச்சரவைக்கு தீர்மானம் எடுக்க முடியாது என்பதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சும் சுகாதார அமைச்சருமே தீர்மானிக்கவேண்டும். என்றாலும் நாட்டின் முழு நடவடிக்கைகளையும் செயற்படுத்துவது அமைச்சரவையாகும். அதனால் மக்களின் கவலைக்குரிய விடயம் ஒன்று தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடுவது தவறாக கருதமுடியாது. அது தவறு இல்லை. இதனை ஏன் மிகப்பெரிய தவறாக சிலர் நினைக்கின்றார்கள் என எனக்கு தெரியாது.

கேள்வி – ஒருசிலர் தெரிவிக்கும் விடயம்தான், எமது நாடு அதிகம் மழை வீழ்ச்சி பெறும் நாடு. அதனால் இந்த சடலங்களை அடக்குவதன் மூலம் கொவிட் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக?

பதில்- இந்த வைரஸ் தொடர்பாக தொலைக்காட்சிகளில் விளக்கமளிப்பவர்கள் தெரிவிக்கும் விடயம்தான், இந்த வைரஸுக்கு நகர முடியாது. நீங்கள் வைரஸிடம் செல்லாமல் வைரஸ் உங்களிடம் வராது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். அதனால்தான், ஒரு மீட்டர் இடைவெளியை பேணி இருக்குமாறும் முகக்கவசம் அணிந்துகொண்டால், கைகளை கழுவிக்கொண்டால் பிரச்சினை இல்லை என சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

அப்படியென்றால், இந்த இறந்த சடலத்தை இரண்டு பொலித்தீன் உறைகளில் சுற்றி, பெட்டி ஒன்றில் அடைத்து, 5அடி குழியில் போட்டு, அதன்மேல் மண்போட்டு மூடினால், எப்படி மற்றவர்களுக்கு அதில் இருக்கும் வைரஸ் பரவும் என்பது உலகில் எல்லோம் கேட்கும் கேள்வியாகும். அத்துடன் அது பூமியில் நீருடன் கலந்து பரவும் என்ற அச்சம் இருக்கும் என்றால், நீர் ஊற்று இல்லாத இடங்களை தெரிவுசெய்யலாம். மன்னார் மாவட்டத்தில் 70அடிக்கு கீழும் நீர் இல்லாத இடங்கள் இருக்கின்றன. அதனால் இந்த பிரச்சினை தீர்த்துக்கொள்ள முடியாமல் இல்லை.

எமது துரதிஷ்டவசமாக நாட்டில் அனைத்து விடயங்களையும் இனவாத மதவாத கண்கொண்டே பார்க்கின்றனர். உணர்வுபூர்வமான விடயங்களை மதிக்கும் தன்மை முற்றாக இல்லாமல் போயுள்ளது. சடலங்களை அடக்குவதால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் நான் ஒருபோதும் இந்த கோரிக்கைகளை அனுமதித்திருக்கமாட்டேன் என்றார்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter