கொரோனா காலத்தில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள் (தொடர்ச்சி)

பாகம் ஒன்றின் தொடர்….

… தற்போது முஸ்லிம்கள் செறிந்து வாழும் கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்தியில் உள்ள பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள் பொதுவாகவே ஏழைகள். இப் பகுதிகளில் யாரேனும் இறந்தால் அவர்களது உடல்களை தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் கிடைக்கும் வரை பிரேத அறையில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டுள்ளதாக பி.சி.ஆர் பரிசோதனை முடிவு கிடைக்கப் பெற்றால், குறித்த குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றன அல்லது இராணுவ தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. உடலைத் தகனம் செய்வதற்கு குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கையொப்பம் இட வேண்டும்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஜனாஸாக்கள் ஒரு சவப்பெட்டியில் வைத்து சீல் வைக்கப்படுகின்றன. இதற்காக குடும்ப உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபா செலுத்த வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன் ஒரு நபர் மட்டுமே ஜனாஸாத் தொழுகையினை தொழுவதற்கு அனுமதிக்கப்படுகிறார். சில நேரங்களில் அவர்கள் இறந்தவரின் முகத்தைப் பார்க்கக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த ஒக்டோபர் மாதம் கொவிட்-19 இன் இரண்டாவது அலை ஏற்பட்டதோடு, பல தகனங்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை உத்தரவிட்டது, அவற்றுள் சில மரணங்கள் சுகாதார அமைச்சினால் திடீர் மரணங்கள் என வகைப்படுத்தப்பட்டிருந்தவையாகும்.

கடந்த மே மாதம் 4 ஆந் திகதி, கொழும்பில் தேசிய வைத்தியசாலையில் நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 வயதான பாத்திமா ரினோசா, தொற்று நோய் வைத்தியசாலைக்கு (ஐ.டி.எச்) மாற்றப்பட்டார். மறுநாள் காலையில் அவர் உயிரிழந்ததாகவும் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. பி.சி.ஆர் சோதனை முடிவு அவரது ஜனாஸா தகனம் செய்யப்பட்டதன் பின்னரே வெளியானதோடு மரணச் சான்றிதழில் ‘சந்தேகத்திற்கிடமான சி-19’ காரணமாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 06 ஆம் திகதி தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய அரசாங்க வைத்தியர் ஒருவர் ரினோசாவின் பி.சி.ஆர் சோதனை முடிவில் தொற்று இல்லை எனத் தெரிவித்தார். றினோசாவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் அடுத்த நாள் அவர்களுள் எவருக்கும் தொற்று இல்லை என கண்டறியப்பட்டதால் மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.

கடந்த மே மாதம் 5 ஆந் திகதி, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 64 வயதான அப்துல் ஹமீத் ரபீயுதீன் மரணமடைந்தார். வழக்கமான நோய் காரணமாக இறந்துவிட்டதாக அப்பகுதியில் உள்ள தனியார் வைத்தியர் ஒருவர் அறிவித்தார். ஜனாஸாவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு ஒரு பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டபோது அவரது குடும்பத்தினர் அவரை அடக்கம் செய்ய தயாராகி கொண்டிருந்தனர். பி.சி.ஆர் சோதனைக்கு உத்தரவிடப்பட்டது, அவரது ஜனாஸா கொவிட்-19 சந்தேகத்திற்குரியதாக தெரிவிக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவரது மரணம் தேசிய கொவிட் இறப்புகளின் மொத்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவரது ஜனாஸா தவறுதலாக தகனம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை வழக்கை தாக்கல் செய்துள்ளதோடு அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல்வேறு காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 27 ஆந் திகதி, 19 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறப்பிலிருந்து படுத்தபடுக்கையாக பெற்றோரின் பராமரிப்பிலிருந்த  இளைஞர்  தூக்கத்திலிருந்தபோது உயிரிழந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்துவந்த மருத்துவர், அடக்கம் செய்வதற்கான ஆவணங்களை தயார் செய்தார். ஆனால் பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதால் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்ல பொலிஸாரின் அனுமதியைப் பெறுமாறு கிராம சேவை அலுவலர் உயிரிழந்தவரின் சகோதரர்களுள் ஒருவரிடம் கேட்டுக் கொண்டார். பொலிஸார் வீட்டிற்கு வந்து உடலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு கட்டாயப்படுத்தினர். வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உத்தரவிட்டதோடு ஜனாஸா பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அடுத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் குடும்பத்திற்கு கூறப்பட்டது. அவரது மரணம் திடீர் கொவிட் மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கட்டாய இராணுவ தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டனர்.

நவம்பர் 2 ஆந் திகதி, 78 வயதான அகமது ஜமால்தீன் அப்துல் றாஸிக், தலையில் ஏற்பட்ட காயத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதிக இரத்தப்போக்கு காரணமாக அவர் விபத்து விடுதிக்கு மாற்றப்பட்டார். பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட விடுதிக்கு மாற்றப்பட்டார். அடுத்த நாள் அவர் மரணமடைந்ததோடு அவரது ஜனாஸா பிரேத அறையில் வைக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அவரது ஜனாஸாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. பின்னர் பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதால் நவம்பர் 4 ஆம் திகதி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சம்மதம் பெறப்படாமல் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மரணம் திடீர் கொவிட்-19 மரணம் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் அறிவித்தார். எனினும், பின்னர் அவரது பெயர் தேசிய கொவிட் மரணங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்பட்ட மூளை பாதிப்பினால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். ஆனால் இன்றுவரை அவர்கள் எவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

சமூக பரவலை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் கொவிட்-19 தொற்று நாடு முழுவதும் பரவியுள்ளது. எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத்திரமே பல முஸ்லிம்கள் இறந்த பின்னர் கொவிட் -19 தொற்றுக்குள்ளகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, தகனம் செய்யப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்ட அவர்களது மரண அறிவித்தல்களில் ஏனைய நோய்களுடன் கொவிட்-19 தொற்று இருப்பதாகக் கூறுகின்றன. ஜனாஸாக்கள் மீதான இக் கட்டாய பீ.சி.ஆர் பரிசோதனை காரணமாக குறிப்பாக ஏழை முஸ்லிம் குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன, அவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணம் செலுத்த முடியாததால் தேசிய வைத்தியசாலையில் கிடைக்கும் இலவச மருத்துவ சேவைகளையே நம்பியுள்ளனர். பலர் தினமும் கூலிவேலை செய்து உழைப்பவர்களாவர்.  அவர்கள் ஒரு சவப்பெட்டிக்கான பணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

பாரதூரமான நோய்களால் வருந்திக் கொண்டிருக்கும் பல முஸ்லிம் ஏழைகள் தாம் பொய்யான காரணங்களின் அடிப்படையில் எரிக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக மருத்துவ சிகிச்சைகளை பெறாமல் இருக்கின்றனர். இந்த வைத்தியர்கள் எமது சமூகத்திலுள்ள வயதானவர்களையும் கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களையும் மருத்துவ சிகிச்சைகளிலிருந்து விரண்டோடச் செய்கின்றனர். இதனால் எமது சமூகத்திலுள்ள வயதானவர்கள் தமக்கான சவக்குழியை தமது வீட்டுத் தோட்டத்திலேயே தோண்டி அங்கேயே தம்மை அடக்கம் செய்யுமாறு எம்மிடம் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் வைத்தியர்கள் தமது தொழில் மூலம் கற்றுக் கொண்ட நெறிமுறைகள் இதுதானா? எரிப்போம் என அச்சமூட்டுவதன் மூலம் அவர்கள் எமது சமூகத்திலுள்ள ஏழைகளை இலவச மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்வதிலிருந்தும் தடுக்கிறார்கள் அல்லவா?

தகனம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, ஏப்ரல் மாதம் 11 ஆந் திகதி வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதோடு பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்ற வேண்டும். கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அந்த உடல்கள் மூலம் பரவலாம் அல்லது நிலத்தடி நீரை மாசுபடுத்தலாம் என்ற இலங்கை நிபுணர்கள் சிலரின் கூற்றை உறுதிப்படுத்த எந்த விஞ்ஞானபூர்வ ஆதாரமும் முன்வைக்கப்படாத நிலையில் 180 இற்கும் மேற்பட்ட நாடுகள் அடக்கம் செய்ய அனுமதித்துள்ளன.

2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு அடக்கம் செய்யப்பட்டதால் பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆகவே, முஸ்லிம் சமூகத்தையும் ஏனைய சமூகங்களையும் அவர்களின் கலாசார, மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின்படி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பது தர்க்கரீதியானதும் மனிதாபிமான ரீதியானதுமாகும்.

ஆங்கிலத்தில் : ஷிரீன் சரூர் – மனித உரிமை செயற்பாட்டாளர் தமிழில் : எம்.ஐ.அப்துல் நஸார்

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter