CTJ யின் கடிதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையா?

சட்டப்படி, ஆதாரங்களுடன் எதிர்கொள்ளத் தயார் – CTJ அறிவிப்பு

கடந்த 09.11.2020 அன்று கொரோனா தொற்றில் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைத்து விட்டதாக வெளியான செய்தியை நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுடன் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ துணை தலைவர் சகோதரர் ரஸ்மின் MISc அவர்கள் பேசி உறுதிப்படுத்திய பின்னர் ஜமாஅத் சார்பில் உத்தியோகபூர்வமாக நாம் அறிவிப்பு வெளியிட்டதுடன், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு நன்றிக் கடிதமும் அனுப்பி வைத்திருந்தோம்.

இந்நிலையில் குறித்த கடிதத்திற்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சில செய்திகள் பரவி வருகின்றன.

கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.

கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வது என்பது அடிப்படை மனித உரிமை என்ற வகையில் அடக்கம் செய்வதற்கு அனுமதி தந்தே ஆக வேண்டும். அது முஸ்லிம்களின் ஜனநாயக உரிமையாகும். அதனை அடைந்து கொள்ளும் ஜனநாயக ரீதியான போராட்டத்தின் அங்கமாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தது.

மாளிகாவத்தை உள்ளிட்ட கொழும்பின் பகுதிகளுக்கு போடப்பட்ட லொக்டவுன் காரணமான குறித்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தான் கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக தன்னிடம் நீதி அமைச்சர் சற்றுமுன் தெரிவித்தார் எனக் கூறி உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களின் ஆடியோ ஒன்று வைரலாக பரவிய நேரத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் துணை தலைவர் சகோதரர் ரஸ்மின் MISc அவர்கள் தொடர்பு கொண்டு கேட்ட நேரத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக நீதி அமைச்சர் கூறிய காரணத்தினால் குறித்த செய்தியை ஜமாஅத் சார்பில் நாமும் அறிவிப்பாக விடுத்ததுடன், முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அனுமதி வழங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் நன்றிக் கடிதம் அனுப்பி வைத்துள்ளோம்.

குறித்த கடிதம் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேம்நாத் தொலவத்தவை ஆதாரம் காட்டி சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாம் விடுத்த குறித்த அறிவிப்பு நீதி அமைச்சருடன் நேரடியாக உறுதிப்படுத்திய பின்னர் வெளியிட்ட அறிவிப்பாகும். இதனை நமக்கு முன்னால் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களும் அறிவித்து விட்டார்.
ஊடகங்கள் பலவும் இந்தச் செய்தியை தெளிவாக வெளியிட்டிருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.

இந்நிலையில் குறித்த கடிதம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டால் ஆதாரங்களுடன் சட்ட ரீதியாக அதனை எதிர்கொள்வதற்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் எந்நேரத்திலும் தயாராகவே இருக்கின்றது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிங்களத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது தான் பிரச்சினையா?

ஜனாஸாக்கள் தீயில் எரிக்கப்படும் போதெல்லாம் வாய் திறக்காமல் சமூக வலைதளங்களில் கருத்துப் பதிந்து கொண்டு இருந்தவர்கள் பலர் ஜனாஸா அடக்க அனுமதி கிடைத்து விட்டது என்ற செய்தி பரவ ஆரம்பித்தவுடன் தம்மால் தான் ஜனாஸா அடக்கும் உரிமை கிடைத்ததாக ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நன்றி கூற ஆரம்பித்தனர்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளம் போன்றவை சார்பில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் ஜனாதிபதிக்கு நன்றிக் கடிதம் அனுப்பப்பட்டது.

அனுமதி கிடைத்ததாக தகவல் வந்தவுடன் வாழ்த்து சொன்னவர்கள் எல்லாம் CTJ சிங்களத்தில் கடிதம் அனுப்பியது மட்டும் பிழையென்று வாதிட ஆரம்பித்துள்ளார்கள்.

தமிழில் வாழ்த்துச் சொன்னால் பிரச்சினையில்லையாம், சிங்களத்தில் வாழ்த்துச் சொன்னால் தான் பிழையாம். இவர்களின் வாதத்தில் என்ன தர்க்கம் இருக்கிறது?

அரசு ஜனாஸா அடக்கம் செய்வதற்கு அனுமதி தந்தால் அதனை பாராட்டுவதில் என்ன பிழை கண்டார்கள். தமிழில் பாராட்டினால் நல்லது சிங்களத்தில் பாராட்டினால் பிழையென்றால் இவர்களின் திட்டம் என்ன?

அனுமதி கிடைத்த செய்தி வரும் வரை நாம் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதை விமர்சித்தார்கள். அனுமதி கிடைத்ததாக செய்தி வந்ததும் நாம் சிங்களத்தில் கடிதம் அனுப்பியதை விமர்சிக்கிறார்கள்.

மொத்தத்தில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கமே தவிர வேறில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜனாஸா அடக்க அனுமதி கிடைத்தால் அது எங்களால் தான் கிடைத்தது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இவர்கள், கிடைக்காவிட்டால் அது தவ்ஹீத் ஜமாஅத்தினால் தான் கிடைக்கவில்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.

நம்மை பொறுத்த வரை ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றோம். இப்போது அனுமதி கிடைத்ததாக சொல்லப்படுகின்றது. கெஸட் அறிவிப்பு வரும் வரை சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதியை முறையாக அரசு தராத பட்சத்தில் அனுமதி வேண்டி மீண்டும் பாதையில் இறங்கி போராடுவதற்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ தயங்காது என்பதையும் இங்கு பொறுப்புணர்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

R. அப்துர் ராசிக் B.COM
பொதுச் செயலாளர்,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ
12.11.2020

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter