கிழக்கு மாகாணத்தில் 200 கோடியை மோசடி செய்து தமிழகத்துக்கு தப்பிய குடும்பம்

வாடிக்கையாளர்களால் வைப்பிலிடப்பட்ட பணத்தை மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் தனியார் நிதி நிறுவன உரிமையாளர், அவரது மனைவி, பிள்ளை ஆகியோரை தமிழகத்துக்கு  படகில் ஏற்றிச் சென்றார் என்று கூறப்படும்  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவேளை, தமிழகப் பொலிஸாரிடம் நிதி நிறுவன உரிமையாளர், வழங்கிய வாக்குமூலம் கிடைத்ததும் படகு உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சட்டத்துக்குப் புறம்பான முறையில் படகு ஒன்றில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை தமிழக கடலோர காவல் படையினரால் தமிழகம் வேதாரண்யம் கோடிக்கரையில் கைது செய்யப்பட்டனர்.

முகமது அன்சாரி (45) அவரது மனைவி சல்மா பேகம் (35) இவர்களது 10 வயது மகன் ஆகியோரே கோடியக்கரை சவுக்கு காட்டில் கரையேறியபோது கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் தமது உண்மையான விபரங்களை மறைத்து ஆரம்பத்தில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அவர் இலங்கையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மூவரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் தமிழகப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பிரதானமாக செயற்பட்ட நிதி நிறுவனம் ஒன்று கோடிக்கணக்கான ரூபா வைப்புக்களை மோசடி செய்தமை தொடர்பில் பல்வேறு பிரதேச நீதிமன்றங்களில் பிரதான நபருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 6 வருடங்களாக கிழக்கு மாகாணம் உட்பட சில பகுதிகளில் இயங்கி வந்த குறித்த நிதி நிறுவனம், கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கியதுடன் கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் சுமார் 200 கோடி ரூபாவையையும் நாடு முழுவதிலும் சுமார் 1,200 கோடி ரூபாவையும் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே நிதி நிறுவன உரிமையாளரை யாழ்ப்பாணத்திலிருந்து படகில் அழைத்துச் சென்று இறக்கினார் என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரது வீட்டில் பொலிஸ் காவலில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், தமிழகப் பொலிஸாரிடம் நிதி நிறுவன உரிமையாளர் வழங்கிய வாக்குமூலம் கிடைத்ததும் படகு உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter