கொரோனவும் ,நாமும் , இனி நாம் என்ன செய்ய வேண்டும்?

ஊரடங்குச் சட்டம் நாளை முதல் தளர்த்தப்பட்டாலும் கூட அரசு  கொரோனா வைரஸ் பற்றி கருத்தில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துள்ளது.

 மேலும் தற்பொழுது இலங்கையில் உருவாகியுள்ள வைரஸ் தொற்றானது கொரோனாவின் மூன்றாம் கட்ட அலை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

 இது பல இடங்களில்  கொத்தணியாக உருவாகும் என்றும் இதன் நான்காம் கட்டம் எவ்வித தொடர்பும் இன்றி நாட்டின் நாலா புறமும் பரவும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த கொடிய வைரஸில் இருந்து நாம் எவ்வாறு தப்பிப் பிழைப்பது மற்றும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று பார்ப்போம்.

 புதிய நிலைமைகளில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள வழிகாட்டலின் அடிப்படையில் அவசியத்தேவை இருப்பின் மாத்திரமே வீட்டிலிருந்து இருவர் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது .

அதேபோன்று பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், டியூஷன் வகுப்புகள், சினிமாக்கள், பூங்காக்கள், இரவு நேர களியாட்ட விடுதிகள் என்பவை மறு அறிவிப்பு வரை திறக்கப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.

 திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள், களியாட்ட நிகழ்வுகள் யாவும் தடை செய்யப்பட்டுள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகள் திறந்திருக்கும் எனினும் ஒவ்வொருவரும் 1 தசம். 5 மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது அவசியம்.  அத்துடன் 50 க்கும் அதிகமானவர்கள்  ஒரே நேரத்தில் உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோன்று ஷொப்பிங் மோல்களிலும் ஒன்று தொடக்கம் இரண்டு மீற்றர் இடைவெளி  பேணப்பட வேண்டும் என்றும் 50 பேர் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் கார்கள் அல்லது முச்சக்கர வண்டிகளில் இருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுப்போக்குவரத்தில் ஆசன இருக்கைகளுக்கு அமைய 50 தொடக்கம் 75 வீத பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புதிய அறிவுறுத்தல் கூறுகின்றது.

 வேலைத்தளங்களில் குறைந்த எண்ணிக்கையான பணியாளர்களை இனணத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று திருமண வைபவங்களில் 50 பேருக்கு மேற்படக்கூடாது எனவும் மரணச் சடங்குகளில் 25 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகளிலும் இட வசதிக்கேற்ப 50 வீதத்துக்கும் அதிகமாகாமல் அனுமதிக்கலாம் என்றும் புதிய வழிகாட்டலில் கூறப்பட்டுள்ளது.

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  நாட்டில் அன்றாட நடவடிக்கைகள் முடங்கி விடக்கூடாது என்ற நோக்குடனேயே அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி  புதிய அறிவுறுத்தல்கள் அடங்கிய வழிகாட்டல்களுடன்  மக்கள் தமது அன்றாட கருமங்களில் ஈடுபடக் கூடிய வகையில்  நடவடிக்கை எடுத்துள்ளது.

 இதனை முறையாகக் கடைப்பிடிக்கத் தவறினால்  கொரோனா வைரஸ்  நான்காவது அலையில் நாம் சிக்குவதை தவிர்க்க முடியாது போகும் . எனவே நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கூட, இதுவரை நாம் எவ்வாறு நடந்து கொண்டோமோ அதே போன்று தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நடந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

 நாட்டின் பொருளாதாரம் ,வறுமை என்பவற்றை கருத்தில் கொண்டு அரசு இவ்வாறு புதிய வழிகாட்டல்களுடன் ஊரடங்குச் சட்டத்தை நீக்குகிறது.  எனவே அனைவரும்  அரசாங்கத்தின் வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடித்து  நடந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter