தனக்குக் கீழ் சேவையாற்றும் இளம் பெண் வைத்தியரை ‘ நீ கர்ப்பமடைந்தால் உன்னைப் பலவந்தமாக கருக்கலைப்பு செய்வேன் என அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் வைத்தியர் காலி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடும் செய்துள்ளார்.
பெண் வைத்தியர் வலஸ்முல்லையை சேர்ந்தவர். தற்காலிகமாக தற்போது காலி கராபிட்டியவில் வசிப்பவர். 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் வரை குருணாகல் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராக இருந்த அவர் அதன் பின்னரும் அதே வைத்தியசாலையில் சேவைக்கு அமர்த்தப்பட்டவர்.
சுமார் 6 வருடங்கள் குருணாகல் வைத்தியசாலையின் மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேவையாற்றியுள்ள அவர், கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு, வருடாந்த இடமாற்ற அடிப்படையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு இடமாற்றம்பெற்று சென்ற அவர், அந்த வைத்தியசாலையில் புற்றுநோய் சத்திர சிகிச்சைப் பிரிவில் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
அந்த சிகிச்சைப் பிரிவின் விசேட சத்திர சிகிச்சை நிபுணருக்கு எதிரகவே குற்றச்சாட்டை குறித்த பெண் வைத்தியர் பொலிஸ் நிலையத்திலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திலும் முன்வைத்துள்ளார்.
இதனைவிட அந்த இளம் பெண் வைத்தியர் முதலில் கராப்பிட்டிய வைத்தியசாலை பணிப்பாளரிடம் செய்த முறைப்பாடு, தற்போது சுகாதார அமைச்சின் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் வைத்தியர் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்,
‘மார்ச் 20 ஆம் திகதி நான் காலை 6.30 – 6.45 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் குறித்த சிகிச்சைப் பிரிவுக்கு சென்றேன். அப்போது வைத்தியர் ‘ வோர்ட் ரவுண்ட் ‘ இல் (நோயாளர்களை மேற்பார்வை செய்யும் நடவடிக்கை) இருந்தார். அது முடிவடைந்ததும் நான் விசேட வைத்திய நிபுணரிடம்’ இன்று முதல் இந்த சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு நான் மாற்றப்பட்டுள்ளேன்’ என்பதைக் கூறினேன்.
அப்போது தான், அவர் என்னிடம் முதலில் உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறதல்லவா என கேட்டார். நான் ஆம் என்றேன். சி வோட்டில் நான் 3 வாரங்கள் வரை சேவையாற்றியிருந்த நிலையில், நான் குருணாகலில் இருந்து வந்தமை உள்ளிட்டவற்றை அவர் அறிந்திருந்தார். குழந்தை ஒன்று இருக்கின்றதல்லவா எனக் கூறியவாறே, அப்படியானால் எல்.ஆர்.டி. (கருத்தடை சத்திர சிகிச்சை) செய்துகொள்ளுங்கள் என கூறினார். முதல் நாளில் அவர் அவ்வாறு கூறினார்.
அதற்கு நான் மறுப்புத் தெரிவித்தேன். அது எனது விருப்பம். எனதும் என் கணவரதும் தீர்மானத்தில், சேர்… நீங்கள் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என நான் கூறினேன்.
அதன் பின்னர், குருணாகலிலிருந்து வந்ததால், ‘நீ ஷாபியின் எதிரியா?’ என அவர் கேட்டார்.
அதற்கு நான், ஷாபி வைத்தியரின் விவகாரம் எனக்கு தேவையற்றது எனவும் நான் எனது வாழ்க்கை தொடர்பிலேயே பதிலளித்ததாகவும் அவரிடம் கூறினேன்.
அதன் பின்னர் எனக்கு அந்த சத்திர சிகிச்சைப் பிரிவில் சேவைகளை முன்னெடுக்குமாறு கூறினார்.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் வோர்ட் ரவுண்டின்போது (நோயாளர் மேற்பார்வை) சிறிய அளவில் துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்தேன். அதாவது, காதை திருகுதல், தலையில் கொட்டுதல் போன்ற துன்புறுத்தல்கள் இருந்தன. எனினும் அதனை சகித்துக் கொண்டோம். அங்கு சேவையாற்றிய ஏனையோரும் அவற்றை சகித்துக் கொள்ளுமாறும், அது விசேட வைத்தியரின் குணாதிசயம் எனவும் தெரிவித்தார்கள்.
பின்னர் மே மாதம் ஒரு நாள் எனக்கு அத்தியாவசியமான விடுமுறை தேவைப்பட்டது. நான் அவரிடம் விடுமுறை கேட்டபோது, அதனை அனுமதித்தார். எனினும் பின்னர் மற்றொரு வைத்தியரிடம், விடுமுறை வழங்க முடியாது எனவும், அப்படி விடுமுறை தேவைப்படின் பணிப்பாளரிடம் கூறி வேறு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கூறியிருந்தார்.
நான் நேரடியாக விசேட வைத்தியரிடம் சென்று அது குறித்து வினவினேன். அப்போது அவர் ‘எனது யுனிட்டில் இருந்தால் விடுமுறை எடுக்க முடியாது. உங்களுக்கு விடுமுறை வேண்டுமென்றால் பணிப்பாளரிடம் கூறி வேறு சிகிச்சைப் பிரிவுக்கு மாறிக்கொள்ளுங்கள் என்றார். நான் உடனே பணிப்பாளருக்கு இது குறித்து அறிவித்து பிரச்சினை ஒன்று உள்ளதையும் அதனை தீர்க்குமாறும் கோரினேன்.
அதன் பின்னர் ஒரு நாள் சத்திர சிகிச்சை கூடத்துக்குள் வைத்து விசேட வைத்தியர் என்னைத் தாக்கினார். அது செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் என நினைக்கிறேன். தாறுமாறாக தாக்கினார். அப்போதே எனக்கு, குறித்த பிரிவில் இதற்கு பிறகும் இருக்க முடியாது என்ற எண்ணம் தோன்றியது. அடி வாங்கிக்கொண்டு வேலை செய்ய முடியாது என தீர்மானித்த நான், ஏதாவது சிக்கல் வந்தால், முன்னிலையாவது என முடிவெடுத்தேன்.
என்னை தாக்கும்போது பலர் சத்திர சிகிச்சை கூடத்தில் இருந்தாலும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. அவர்கள் விசேட வைத்தியர் செய்வதெல்லாம் சரியானவையே எனும் கோணத்தில் பார்ப்பவர்களும், அவருக்கு அடிபணிந்து போவோருமாவர்.
அன்றைய தினம் நான் சத்திர சிகிச்சை கூடத்தில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு சேவை செய்தேன். மீள அப்படியொரு சம்பவம் நடந்தால் எழுத்துமூல முறைப்பாடு வழங்குவது என முடிவெடுத்துக் கொண்டேன்.
அதன் பின்னரான ஒரு நாளில், ‘நீ கர்ப்பிணியானால் உனக்கு கருக்கலைப்புச் செய்வேன்.’ என அவர் தெரிவித்தார். நான் அப்போதும் கர்ப்பம் தரித்திருந்தேன். அதனால் எனக்கு அந்த வார்த்தை அச்சத்தை ஏற்படுத்தியது. சத்திர சிகிச்சை கூடத்தின் ஓ.எம்.ஓ., எம்.ஓ வைத்தியர்களிடம் அதனை கூறிய போதும் அவர்களும், ‘ அது சேரின் குணம், அவற்றை பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம்.’ என தெரிவித்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே இறுதியான சம்பவம் நடந்தது. அது கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி ஞாயிறு காலை வேளையிலாகும்.
அன்றைய தினம் நோயாளர் மேற்பார்வையின்போது (வோர்ட் ரவுண்ட்), நோயாளர் தொடர்பில் நான் விடயங்களை கூறிக்கொண்டிருக்கையில், விசேட வைத்தியர் எனது தலையின் இடது புறத்தை தாக்கினார். என்னைத் தாக்க எந்த காரணியும் அங்கு இருக்கவில்லை. எனினும் அவர் பலமாக என்னை தாக்கினார்.
எதற்காக அடிக்கிறீர்கள் எனக் கேட்டபோது அதற்கான சரியான காரணம் எனக்கு கூறப்படவில்லை. இந்நிலையில் தான் இதற்கு மேலும் அங்கு சேவை செய்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நான் அனைத்தையும் எழுத்துமூலம் கையளித்தேன்.
அவர் அந்த முறைப்பாட்டை சுகாதார அமைச்சின் செயலருக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் எனக்கு வேறு சிகிச்சைப் பிரிவுக்கு தற்காலிக மாற்றம் வழங்கினார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் நான் இலங்கை மருத்துவ சங்கத்துக்கு சத்தியக் கடதாசி ஒன்றையும் வழங்கியுள்ளேன். அன்றைய தினமே காலி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாட்டையும் செய்தேன். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையில் அங்கும் முறையிட்டுள்ளேன்.
இந்தச் சம்பவத்துக்கு எனக்கு நியாயம் வேண்டும். பெண் ஒருவர் அவர் விரும்பும், நேசிக்கும் தொழிலை எந்த சிக்கலும் இன்றி முன்னெடுக்க வழி செய்யும் வகையில், இந்த நியாயம் அமைய வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு.’ என பாதிக்கப்பட்ட வைத்தியர் தெரிவித்தார்.
இது தொடர்பில் காலி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.