அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ
எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளினால் 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்ற ஒரு வழிகாட்டல் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 2020.06.16 ஆம் திகதி “கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலக்கம் 2 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஜுமுஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவ வயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுது கொள்ள வேண்டும். இந்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஆலிம்கள் பல வருடகாலங்களாக இவ்வடிப்படையிலேயே ஜுமுஆவுடைய இந்த அடையாளத்தைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது. நாட்டில் நிலவும் இந்த அசாதாரண நிலைமை எதிர்காலத்தில் நீடிக்காமல் அவசரமாக நீங்கி, நல்ல நிலைமை உண்டாகி, ஜுமுஆவை வழமை போன்று நிறைவேற்ற அல்லாஹூ தஆலா அனுகூலம் புரிய வேண்டும் என்றும்,
அல்லாஹூ தஆலா உங்களது கவலைகளுக்கு பூர்த்தியான கூலிகளைத் தந்தருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் செயலாளர்,
பத்வாக் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா