அக்குறணை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

அக்குறணை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பிரதேச சபை தலைவர் இமாதுதீன் இஸ்திகாரினால் சபையில் முன்வைக்கப்பட்ட போது அதிகப்படியான வாக்குகளினால் மேற்படி வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

30 உறுப்பினர்களைக்கொண்ட மேற்படி சபையில் ஆதரவாக 22 உறுப்பினர்களும் எதிராக 8 உறுப்பினர்களும் வாக்களித்தனர். எதிராக வாக்களித்த 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய சபை தவிசாளர் இஸ்திகார் இமாதுதீன்,

நாட்டில் ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷவின் துரித அபிவிருத்திகளை முன்னோடியாக வைத்து நாட்டில் நாலாதிசைகளிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதே அபிவிருத்திப் பணிகள் எமது பிரதேச பகுதிகளிலும் துரிதமாக இடம்பெற்றுவரும் நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக எமது பிரதேசம் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டதும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியதும் நாம் கண்ட கவலையான காட்சிகளாகும். இதுபோன்ற ஒருநிலை மீளவும் எமது பிரதேசத்திலும் முழு நாட்டிலும் ஏற்படக்கூடாதென்று இறைவனை துதித்தவனாக 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கின்றேன்.

கடந்த காலங்களில் நாம் திட்டமிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் கொவிட்-19 காரணமாக நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. கடந்த காலங்களில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட குப்பைக் கழிவுகளின் மீள்சுழற்சி பசளை தயாரிக்கும் திட்டமானது அக்குறணை பிரதேச மக்களுக்கு மட்டுமல்லாது ஏனைய உள்ளூராட்சி மன்ற பிரிவுகளுக்கும் பிரயோசனமான திட்டமாக அமைந்திருந்தது.

கடந்த கொரோனா வைரஸின் கெடுபிடி காரணமாக பின்தள்ளப்பட்ட இத்திட்டத்தை மீள உயிரோட்டத்தில் கொண்டுவருவது எனது திட்டமாகும்.

அக்குறணை பிரதேச சபையின் எதிர்காலம் சிறுவர்களின் தலைமுறையிலேயே அமைந்துள்ளது. எனவே, ஆரம்பக்கல்வி அனுகூலங்களுக்கமைய தீகல பாலர் பாடசாலையை அபிவிருத்திசெய்து நாளைய எதிர்கால சமுதாயத்தின் கையில் கையளிக்க காத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் திப்பிடிய பாலர் பாடசாலை உட்பட ஏனைய பாலர் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்கின்றோம்.

சொத்து உரிமையாளர்களின் சொத்து உரிமைகளை பாதுகாத்து உறுதிப்படுத்திட ஒழுங்கமைப்பு கோவை திட்டமொன்றை ஏற்படுத்த எண்ணியுள்ளோம். பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றிட பிரதேச சபைக்கும் பொதுமக்களுக்கான தொடர்பை பலப்படுத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்த சபை தலைவர் இமாதுதீன் இஸ்திகார் இப்பணிகளை முழுமையாக நிறைவேற்றிட சபை உறுப்பினர்களின் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பை தாம் எதிர்பார்ப்பதாகவும் மேலும் கூறினார்.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter