இரண்டாவது கொரோனா பரவலை அடுத்து, நாட்டிலிருந்து கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் (நோயாளிகள்) சமூகத்தில் தீவிரமாகச் செயற்படும் இளம் மற்றும் ஆரோக்கியமான நபர்கள் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டால் அதிக சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களில் கண்டறியப்பட்ட தொற்று நோய்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. இருப்பினும், இது எதிர்வரும் நாட்களில் அதிகமான நோயாளர்களை அடையாளம் காண வாய்ப்பு இருப்பதை நிராகரிக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை,
கொரோனாத் தொற்று, தற்போது சமூகத்தில் வலுவாகப் பரவுகின்ற போது, அது சிறுவர்களைத் தாக்கும் எனவும், இதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும், டொக்டர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு சாதாரணமாக இருமல், தடிமன், ஆஸ்மா போன்ற நோய்கள் இருக்கும் பொழுது, அவர்களுக்கு கொரோனாத் தொற்றோ என்ற பயத்தில் சிகிச்சைக்குச் செல்லாமல் விடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
ஏற்கனவே, ஆஸ்மா நோய் உள்ளவர்களுக்கு உரிய மருந்துகள் கிரமமாகக் கொடுக்கப்பட வேண்டும். அதேபோல, தூசிகளுக்குள் விளையாடும் பொழுது தொண்டை அழற்சி நோய்கள் ஏற்படலாம்.
சிறுவர்களுக்கு அவ்வாறு வரும்போது, அதற்குரிய மருந்து கொடுக்க வேண்டும். அதையடுத்து, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த போசணை மிக்க உணவுகளையும் சிறுவர்களுக்கு வழங்குவதன் மூலம் தொற்று ஏற்படும் காலங்களில் உடல்நிலை பாதிப்பதைத் தவிர்க்கலாம்.
குறிப்பாக, புரதச்சத்து நிறைந்த பால் போன்றவற்றை எடுத்தல் வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் பொழுது காய்ச்சல் இருக்கலாம், தொண்டை நோ இருக்கலாம், இருமல் இருக்கலாம். இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி கலந்தாலோசித்தல் வேண்டும்.
வீட்டில் குழந்தை உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் சென்று விட்டு வந்து கைகளை நன்றாகக் கழுவி விட்டு வீட்டுக்குள் செல்ல வேண்டும். குறிப்பாக, அதிகளவானோர் உள்ள வீடுகளில் சிறுவர்களுடன் பெருமளவில் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுமாயின், பெரியவர்கள் அல்லது அங்கு உள்ள மூத்தவர்கள்தான் காரணமாக இருப்பார்கள். ஆகவே, அதற்குரியவாறு அவதானமாகச் செயற்பட வேண்டும்.
இதேபோல, சிறுவர்களை வெளியிலிருந்து வருபவர்கள் கட்டி அணைத்து முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்தல் வேண்டும். இவ்வாறு செய்வதானால், கைகளை நன்றாகக் கழுவுதல் வேண்டும். கண்டபடி ஆட்கள் வந்து குழந்தைகளைத் தொடுதலும் தொற்றை ஏற்படுத்தும்.
குறிப்பாக, நெருக்கமான இடங்களில் அயலில் உள்ளவர்களுடன் விளையாடும் போதும், தொடுகையின் போதும் தொற்று ஏற்படலாம். தற்போதைய சூழ்நிலையில் சுகாதாரப் பழக்கவழக்கங்களான கைகளைக் கழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுதல் நல்லது.
நோயினால் சிறுவர்கள் அதிகளவில் உடல் ரீதியாகப் பாதிப்படையலாம். விளையாடவிடாது அல்லது தொடர்ச்சியாக வீடுகளில் இருக்கும்போது அல்லது வெளியிடங்களுக்குச் செல்லாமல் இருக்கும்போது, அவர்களது உளநலமும் பாதிக்கலாம். இது தொடர்பிலும் கவனம் செலுத்தல் வேண்டும். அதேபோல், உணவுப் பழக்க வழக்கத்தைப் பொறுத்த வரை பழரசங்களைக் கூடுதலாக எடுப்பது நல்லது. குழந்தைகளுக்கு நெத்தலி, கருவாடு, பால், பெருங்காயம், இஞ்சி, மஞ்சள், மற்றும் பச்சை இலைகளிலான உணவு வகைகள் நல்ல உணவாக அமையும்.
அயடின் கூடிய பழங்கள், எலுமிச்சம்பழம் மற்றும் கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்ற சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள உணவு வகைகளையும் கொடுக்க வேண்டும். சிறுவர்களுக்குப் போதியளவு நீர், சிறந்த ஆகாரமாக அமையும் என்றும் டொக்டர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.