(எம்.எப்.எம்.பஸீர்)
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் விவகார பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு குருணாகல் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது.
இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீர பிணைகளிலும் செல்ல அனுமதித்த குருணாகல் பிரதான நீதவான் சம்பத் சேவாவசம் பிணையாளர்களை தமது வதிவிடத்தை உறுதி செய்யவேண்டும் எனவும் ஒவ்வொரு ஞாயிறு தினத்திலும் காலை 9 மணிக்கும் , நண்பகல் 12 மணிக்கும் இடையே குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று குருணாகல் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஷாபி சிறை அதிகாரிகளினால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது குருணாகல் நகர் எங்கும் பொலிஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.முற்பகல் வேளையில் குருணாகல் கண்டி வீதியிலுள்ள சுற்றுவட்டம் அருகே வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றும் இடம் பெற்ற நிலையிலேயே பிற்பகல் 1.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது குருணாகல் நீதிமன்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது முறைப்பாட்டாளர்கள் சார்பில் சி.ஐ.டியின் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க , உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா , பொலிஸ் பரிசோதகர் இலங்க சிங்க, சார்ஜன்ட் ராஜபக்ஷ, கான்ஸ்டபிள் சில்வா உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
அவர்களுக்கு கூடுதல் பலம் சேர்க்க சட்டமா அதிபர் சார்பில் சிசேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித முதலிகே மன்றில் பிரசன்னமானார். வைத்தியர் ஷாபி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டார தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராய்நூர்தீன் , பிரேம ரத்ன தென்னக்கோன் , சப்ரா ஹன்ஸா , பசன் வீரசிங்க , பாய்நாஸ் மொஹமட் , மகேஷ் தேருஐகொட , ஆர். சேனாதீர உள்ளிட்டோர் ஆஜராகினர்.
கருத்தடை செய்ததாக முறைப்பாடு அளித்துள்ள தாய்மார்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரசேகர, இந்திரசிறி சேகாரத்ன , சானக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
வழக்கு விசாரணை ஆரம்பம்முதலே சந்தேக நபரான வைத்தியர் ஷாபியின் சட்டத்தரணி நவரத்ன பண்டாரவுக்கும் முறைப்பாடளித்த தாய்மார் சார்பிலான சட்டத்தரணிகளுக்கும் இடையே கடும் வாதபிரதிவாதங்கள் இடம் பெற்றன. உயர் தொனியில் அவை வாய்த்தர்க்கம் போன்று வழக்கு நெடுகிலும் நீடித்தன.
முதலில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக மன்றில் ஆஜராவதாக காட்டிக்கொண்டு சம்மந்தம் இல்லாத தரப்பினர் இவ்வழக்கில் ஆஜராவதாகவும் அதனால் தனது சேவை பெறுனருக்கு நியாயத்தை நிலைநிறுத்துவதில் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும் ஷாபி தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
அதனால் வழக்குடன் தொடர்புபடாத தரப்பினரை மன்றிலிருந்து வெளியேற்றவும் அவர் கோரினார்.எனினும் சிசேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகேவின் கருத்தையும் பதிவு செய்த நீதிமன்றம் அவ்வாறான உத்தரவொன்றை பிறப்பிக்க மறுத்தது.
அதனையடுத்து சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே விசாரணைகளின் தற்பேதைய நிலைமையை மன்றுக்கு தெரிவித்தார்.
சந்தேக நபருக்கு எதிராக குற்றப்புலனாய்வுப்பிரிவு விசேட விசாரணைகளை நடத்துகிறது. கருத்தடை விவகாரத்தில் 615 முறைப்பாடுகள் சி.ஐ.டிக்கு கிடைத்த நிலையில் அதில் கால எல்லலையை கருத்தில் கொண்டு 147 முறைப்பாடுகள் தொடர்பில் விசேட விசாரணைகள் நடக்கின்றது. குறித்த 147 முறைப்பாடுகளையும் தனித்தனியாக ஆராயும் போது வைத்தியர் ஷாபிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 32 (1)அ அத்தியாயத்தின் கீழ் நியாயமான சந்தேகத்தை தோற்றுவிக்கும் காரணிகள் எவையுமில்லை. எனினும் தண்டனை சட்டக்கோவையின் 311ஆம் அத்தியாயத்தின் கீழ் கடும் காயம் ஏற்படுத்தல் தொடர்பில் நாம் விசாரணைகளை நடத்தகின்றோம்.
147 முறைப்பாட்டையும் ஒன்றாக சேர்த்து நோக்குகின்ற பொழுது இவ்வாறு கடும் காயம் ஏற்படுத்துதல் தொடர்பில் நியாயமான சந்தேகமொன்று எழுகின்றது. அதனாலேயே தண்டனைசட்டக்கோவையின் 311ஆவது அத்தியாயத்தின் கீழ் விசாரணை செய்கின்றோம். எனினும் இந்த விசாரணைகள் அறிவியல் ரீதியான சோதனைகளிலேயே தங்கியுள்ளது. எனினும் எச்.எஸ்.ஜி சோதனைகள் உள்ளிட்ட அறிவியல் ரீதியான பரிசோதனைகளை முன்னெடுக்க நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் இந்த விசாரணைகளை முன்னெடுத்து செல்ல முடியாது உள்ளது.
இதேநேரம் சந்தேகநபர் வைத்தியர் ஷாபிக்கு எதிராக சொத்து குவிப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு விவகாரம் தொடர்பில் கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு சொத்து குவிப்பு விவகாரத்தில் விசாரணை செய்ய தேர்ச்சியடைந்த மத்திய வங்கியின் உளவுப்பிரிவுடன் நேரடி தொடர்பு உள்ள சி.ஐ.டி யின் நிதி குற்ற விசாரணை அறையின் மூன்றாம் இலக்க பொறுப்பு அதிகாரியிடம் இந்த பொறுப்பு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மேற்பார்வையில் இனிமேல் இந்த விவகாரம் தனியான விடயமாக விசாரிக்கப்படும். எனினும் இதுவரையிலான விசாரணைகளில் அந்த விடயம் தொடர்பிலும் நியாயமான சந்தேகத்தை தோற்றுவிக்க காரணிகள் எதுவும் வெளிப்பட வில்லை என சுட்டிக்காட்டினார்.
அதனை அடுத்த வைத்தியர் ஷாபியின் ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ண பண்டார பிணை கோரிக்கையை முன்வைத்தார். ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான தடுப்பு காவல் உத்தரவு மீளப்பெறப்பட்டது.
இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கூற்றுப்படி எனது சேவை பெறுநருக்கு எதிராக தண்டனை சட்ட கோவையின் வரைவிலக்கண பிரிவான 311 ஆம் அத்தியாயத்தின் கீழ் விசாரணை இடம்பெறுகிறது. இப்படியான பாரதூரமான காயம் ஏற்ப்பட்டதாக ஒரு வைத்தியர் உறுதி செய்ய வேண்டும். அப்படி அந்த வைத்தியர் அறிக்கை கொடுத்திருக்கிறார். இக்குற்றச்சாட்டின் அடிப்படை என்ன? இது பிணை வழங்க முடியுமான குற்றச்சாட்டு. குற்றச்சாட்டு தொடர்பில் ஒருவரை அதிகப்பட்சம் 14 நாட்கள் மட்டுமே விளக்கமறியலில் வைக்கலாம். எனினும் எனது சேவை பெறுனர் அதனையும் தாண்டி அனுபிவித்து விட்டார். எனவே அவரின் எந்தவொரு நிபந்தனையின் கீழும் பிணையில் விடுவிக்க கோருகிறேன் என்றார்.
அதனை அடுத்து விசாரணைக்கு தேவையான நான்கு உத்தரவுகள் சி.ஐ.டியில் பெறப்பட்டது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரசேகர , இந்திர சிறி சேனாரத்ன , சானக மற்றும் பெனி பெர்ணான்டோ ஆகியோர் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.
அவர்கள் ஷாபிக்கு பிணை வழங்க கூடாது என கோரினர். ஷாபிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும் இச் சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சந்தேகநபருக்கு ஒருவருக்கு பிணையளிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றுக்கு இல்லை எனவும் அவர்கள் வாதித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபருக்கு பிணையளிப்பது குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிவான் சம்பத் கேவாவசம் மன்றில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகேவிடம் வினவினார்.
சந்தேகநபருக்கு எதிராக தற்போது தண்டனை சட்டக் கோவையின் 311 ஆவது அத்தியாயத்தின் கீழ் விசாரணை நடக்கிறது. இது பிணைவழங்க முடியுமான குற்றச்சாட்டு. இது தொடர்பிலான விசாரணைகளுக்கு அறிவியல் ரீதியில் சாட்சிகள் அவசியம். அதனூடாக காயம் ஏற்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்படல் வேண்டும். எனினும் இதுவரை அவ்வாறான சாட்சியங்கள் இல்லை. அத்துடன் புள்ளிவிபரங்களை மையப்படுத்திய விசாரணையொன்றும் அதில் அவசியம். அதற்காக சுகாதார அமைச்சிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைக்கும் வரை மேலதிக விசாரணைகளை செய்ய முடியாது. இவ்வாறான பின்னணியில் சந்தேகநபருக்குபிணை அளிக்க எமக்கோ, சி.ஐ.டி. பிரிவினருக்கோ எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றார்.
இந்த வாத பிரதிவாதங்கள் மாலை 4. 30 மணியளவில் நிறைவடைந்த நிலையில் வைத்தியர் ஷாபிக்கு பிணை வழங்குதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்க மாலை 5. 45 மணிவரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும் தீர்ப்பிற்கான வழக்கானது மாலை 6.48 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது தனது தீர்மானத்தை நீதவான் சம்பத் ஹேவாவசம் நீதிமன்ற சேவகர் ஊடாக அறிவித்தார்.
வைத்தியர் ஷாபி முதலில் கடந்த மே மாதம் 24ஆம் திகதி குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக அச்சட்டத்தின் கீழ் முதலில் குருநாகல் பொலிஸ் அத்தியட்சரின் அதிகாரத்தில் 72 மணி நேர தடுப்பு காவல் பெறப்பட்டது.பின்னர் அவரை சி.ஐ.டி பொறுப்பேற்ற நிலையில் அச்சட்டத்தின் 9(1) பிரிவின் கீழ் மூன்று மாத தடுப்பு காவல் பெறப்பட்டது. அந்த உத்தரவானது பாதுகாப்பு அமைச்சினால் சி.ஐ.டி.யின் கோரிக்கைக்கு அமைய கடந்த 10ம் திகதி மீளப்பெறப்பட்டுள்ளது.
அதன் படியே கடந்த 11ஆம் திகதி சந்தேக நபர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்றைய தினம் மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக சி.ஐ.டி.யால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் குற்றச்சாட்டுக்கள் மீளப்பெறப்பட்டன . எனவே அச்சட்டத்தின் கீழ் மீள சந்தேக நபரை இவ்வழக்கில் தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே தற்போது சந்தேக நபருக்கு எதிராக தண்டணை சட்ட கோவையின் 311வது அத்தியாயத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகவும் பிணைவழங்க எதிர்ப்பு இல்லை எனவும் தெரிவித்து இருக்கின்றார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பு கூறுவதை போன்று முறைப்பாட்டாளர்களால் குற்றம் சுமத்தப்படாத 2007ஆம் ஆண்டில் 57 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் மற்றும் , பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் பிணை வழங்க மறுக்க எந்த அடிப்படை காரணிகளும் இல்லை.
கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் தனியான விசாரணைகள் நடக்கின்றன. சந்தேக நபர் சாட்சியாளர்களுக்கோ, விசாரணையாளர்களுக்கோ இடையூறு ஏற்படுத்துவார் என கருதும் சூழல் இல்லை. சட்டமா அதிபரும் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவே சந்தேக நபரான வைத்தியர் ஷாபிக்கு பிணை வழங்க தீர்மானிக்கின்றேன். என நீதவான் தனது தீர்மானத்தை அறிவித்தார்.
இதனை அடுத்து 2 இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும், 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீர பிணைகளிலும் செல்ல வைத்தியர் ஷாபிக்கு அனுமதி வழங்கி நீதவான் வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.