பாராளுமன்றத்தில் சஜித் – பவித்ரா கடும் வாய்ச் சண்டை

கொவிட்-19  வைரஸ் பரவல்  நாட்டில் சமூக பரவலாக மாறிவிட்டது. இது மிகவும் மோசமான நிலைமையை உருவாக்கும், எனினும் அரசாங்கம் உண்மைகளை மூடி மறைக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குற்றம் சுமத்திய போதிலும் அதனை முழுமையாக நிராகரி

த்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறவே இல்லை, நிலைமைகள் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என அடித்துக் கூறினார். இதனை அடுத்து சுகாதார அமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சபையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சபை அமர்வுகளின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயகவும் கேள்வி எழுப்பினர். இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில் :- நேற்றைய தினம் பிங்கிரிய, குளியாபிடிட, துமலசூரிய பிரதேசத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. கொத்தனியா இல்லாது இது சமூக பரவலாக மாற்றமடைந்துள்ளது. இந்த நிலைமைகள் ஆரோக்கியமானதள்ள. எனவே பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும். வைரஸ் பரவல் கொத்தனியில் இருந்து விடுபட்டு சமூக பரவலாக மாற்றமடைவது ஆரோக்கியமான விடயமல்ல என சபையில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி :- இது குறித்து தெளிவான விளக்கம் ஒன்றினை நேற்றும் சமையில் முன்வைத்துள்ளேன். எனினும் மீண்டும் கூறுகிறேன், கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றமடையவில்லை. தொற்றுநோய் தடுப்பு பிரிவும் தொடர்ச்சியாக இதே நிலைமைகளை கூறியுள்ளனர். தொற்றுநோய் தடுப்பு பிரிவும், சுகாதார அமைச்சும் மிக திறைமையாகவும் துரிதமாகவும் செயற்பட்டு வருகின்றனர். உதாரணமாக கூறுவதென்றால் எதிர்க்கட்சி தலைவர் யால வனத்தில் விடுதி ஒன்றில் இருந்த வேளையில் அதே விடுதியில் நபர் ஒருவருக்கு கோரினா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட வேளையில் அவருடன் தொடர்புபட்ட இரண்டாம் தரப்பு நபராக எதிர்க்கட்சி தலைவர் அடையாளம் காணப்பட்டார்.  

அவருக்கான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க துரிதமாக எமது சுகாதார அதிகாரிகள் செயற்பட்டனர். எதிர்க்கட்சி தலைவருக்கும் அறிவித்தோம். ஆலோசனைகளை வழங்கினோம். எனவே இதனை விடவும் நல்ல உதாரணம் வேறெதுவும் இருக்க முடியாது. அந்த சம்பவத்தில் இரண்டாம் தரப்பு நபராக எதிர்க்கட்சி தலைவரே அடையாளம் காணப்பட்டார். எவ்வாறு இருப்பினும் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறவில்லை, நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே உண்மையாகும்.

எதிர்க்கட்சி தலைவர் :- சுகாதார அதிகாரிகள் கூறிய அறிவுரைகளை முழுமையான நான் கடைபிடித்தேன், ஆனால்  அதுவல்ல இன்றைய பிரச்சினை. சமூக பரவலாக கொரோனா வைரஸ் பரவுகின்றது, சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக இந்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர். ஆனால் சுகாதார அமைச்சர் அதனை நிராகரிக்கின்றார். இது தான் பிரச்சினையாக உள்ளது.

சுகாதார அமைச்சர் :- மீண்டும் தெளிவாக கூறுகின்றேன், யால விடுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் தொடர்பு பட்ட இரண்டாம் தரப்பு நபராக  எதிர்க்கட்சி தலைவரை அடையாளம் கண்டோம். அவருக்கு வலியுறுத்தினோம். இது தான் எமது துரிதமான வெற்றி என்பதை எதிர்க்கட்சி தலைவரை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எதிர்க்கட்சி தலைவர்:- சமூக பரவல் இருந்தும் அரசாங்கம் அனைத்தையும் மூடி மறைக்கின்றது, நாம் மீண்டும் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம். சமூக பரவல் இருந்தும் சுகாதார அமைச்சர் பொறுப்பில்லாது சபையில் பொய்களை கூறுகின்றார். அரசாங்கம் உண்மையை மறைக்கின்றது. சுகாதார தரப்பினருக்கு தெரிந்த இந்த உண்மை சுகாதார அமைச்சருக்கு தெரியவில்லை.

சுகாதார அமைச்சர் :- ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இப்போதைய எதிர்கட்சிக் தலைவர் ஒரு மருந்தின் பெயரை  கூறி அதனை பயன்படுத்தக் கூறினார். நல்லவேளை சஜித் ஜனாதிபதியாகவில்லை. ஆகியிருந்தால் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் :- நான் ஒரு ஆலோசனையாகவே இதனை கூறினேன். ஆரோக்கியமானது என்றால் பயன்படுத்துங்கள் என்றே கூறினேன். ஆனால் இன்று நிலைமை என்னவாகியுள்ளது. நாடே நாசமாகி வருகின்றது

சுகாதார அமைச்சர் :- தென்னாசியாவில் முதல் தடவையாக பி.சி.ஆர் பரிசோதனைகளை வெற்றிகரமாக செய்த நாடாகும். முதல் அலையில் சிரமங்கள் இருந்தும் இரண்டாம் அலையில் ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பி.சி.ஆர் பரிசோதனை செய்துள்ளோம். எனவே பொய்யான  குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.

எதிர்க்கட்சி தலைவர் :- கொரோனா அச்சுறுத்தல் இல்லை எனவே தேர்தலை நடத்தலாம் என நாம் கூறவில்லை

சுகாதார அமைச்சர் :- தேர்தல் காலத்தில் முகக்கவசம் இல்லாது நீங்கள் சென்றதை மறந்துவிட வேண்டாம். ஏனென்றால் அந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் இருக்கவில்லை என்றார்.

எதிர்க்கட்சி தலைவருக்கும் – சுகாதார அமைச்சருக்குமான வாக்குவாதத்தால் சபையில் ஆளும் எதிர்க்கட்சி  தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபையில் கடுமையான கூச்சலிட்டனர்.  Posted in:

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter