றிசாத்தை காட்டிக்கொடுத்தது யார்..? கைது செய்யப்பட்டது எப்படி..? (புதிய தகவல்கள் இதோ)

நேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார்.

அதுவரை அந்த ஆறு நாட்களாக அவர் எங்கிருக்கின்றார், யாருடன் தொடர்பைப் பேணுகின்றார், அவருடன் யார் யார் உள்ளனர்? அவர் எங்கு மறைந்திருக்கின்றார் என்ற விடயங்கள் எவருக்கும் தெரியாதவையாக காணப்பட்டன.

இந்தக் கள்ளன்- பொலிஸ் விளையாட்டிற்குக் காரணம் ரிசாத் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதேயாகும்.

ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெயர்ந்து வாழும் மக்களை வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பேருந்தில் அழைத்துச் செல்வதற்கு 233 பேருந்துகளிற்கு ரூ.9.5 மில்லியன் செலவிட்டதன் மூலம் அரசநிதியை தவறாக பயன்படுத்தினார் என்பதே அவருக்கு எதிரான குற்றச்சாட்டு.

இது தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளின் பின் தகவல்கள் உறுதியான பின்னர் சட்டமா அதிபரும் சிஐடியினரும் முன்னாள் அமைச்சரை கைதுசெய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க வேண்டும் என கோட்டை நீதவானை கேட்டுக்கொண்டனர். எனினும் அவ்வாறான குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்வதற்கு பிடியாணை அவசியமில்லை, உரிய சட்ட கட்டமைப்புகளுக்குள் அவரை பிடியாணையின்றி கைது செய்யலாம் என நீதவான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்றவேளை ரிசாத் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார், அவர் மாதம்பைக்கு அருகில் வந்துகொண்டிருந்தவேளை தனியார் வானொலியொன்றில் சிஐடியினர் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.

நடக்கப்போவது நல்ல விடயமில்லை என்பதை ரிசாத் உணர்ந்ததும் அவர் மாதம்பையில் வாழும் தனது கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை அழைத்து மாதம்பைக்கு வாகனமொன்றை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வாகனம் வந்ததும் திட்டமிட்டபடி தனது வாகனத்திலிருந்து இறங்கி அந்த வாகனத்தில் ஏறி ரிசாத் தலைமறைவாகியுள்ளார்.

அவர் தனது கையடக்க தொலைபேசி இணைப்பையும் துண்டித்துள்ளார்.

ரிசாத் பதியுதீன் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார் என்பதை ஏற்கனவே அறிந்த சிஐடியினர் அவரது வாகனத்தைப் பின்தொடர தீர்மானித்துள்ளனா்,அவர்கள் ரிசாத்தின் வாகனத்தைப் பின்தொடர்ந்த போதிலும் கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கு அவரது வாகனம் வந்தவேளை முன்னாள் அமைச்சர் அந்த வாகனத்திலிருந்து இறங்கவில்லை என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இதன் காரணமாக சிஐடியினரின் முயற்சி வெற்றி பெறவில்லை.

இதன் பின்னர் சிஐடிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க ரிசாத்தினை கைதுசெய்வதற்காக ஆறு குழுக்களை ஈடுபடுத்தியுள்ளார்.

இவை அனைத்தும் சிஐடியின் இயக்குநரின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றுள்ளன.

முதல் மூன்று நாட்களும் பல சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு கட்டத்தில் ரிசாத் பதியுதீன் எங்கிருக்கின்றார் என்பதை சிஐடியினரால் கண்டுபிடிக்கவே முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

17ம் திகதி ரிசாத் பதியுதீனின் நெருங்கிய சகாவொருவர் குறித்து சிஐடியினருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அந்த நபரே ரிசாத் தொடர்பான சட்ட விடயங்களைக் கையாள்வதில் முக்கியமானவராக காணப்பட்டவர்.

அவரது தொலைபேசி உரையாடல்களை சிஐடியினர் ஆராய்ந்தவேளை சந்தேகத்திற்கு இடமான தொலைபேசி அழைப்புகள் அந்த நபரின் தொலைபேசிக்கு வந்துள்ளதை சிஐடியினர் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தத் தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சிஐடியினர் அது வெல்லம்பிட்டி வெனவத்தையில் வசிக்கும் ஒருவருடையது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த நபரை 17ம் திகதி மாலை சிஐடியினர் கைது செய்துள்ளனர், அவர் முன்னாள் அமைச்சரின் நெருங்கிய சகா என்பதால் அவரை தொடர்ச்சியாக விசாரித்தவேளை சிஐடியினருக்கு முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து ரிசாத் பதியுதீன் மறைந்திருக்ககூடிய இடங்கள் சில சிஐடியினருக்கு தெரியவந்துள்ளன.

இந்த இடங்களில் சோதனையிடுமாறு சிஐடியினருக்கு தலைமை அதிகாரிகள் உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலையளவில் ரிசாத் மறைந்திருக்ககூடிய இடங்கள் என சில பகுதிகளை துல்லியமாக சிஐடியினரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. அந்தப் பகுதிகளில் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரிசாத்தின் நெருங்கிய சகாவொருவர் வழங்கிய தகவலைத் தொடர்ந்து ரிசாத் இறுதியாக கொழும்பு கொகுவலையில் மறைந்திருந்ததை சிஐடியினர் அறிந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்துஅவர்கள் களுபோவிலையை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர்.

அந்த வீட்டிற்குள் நுழைந்த சிஐடியினர் முதலில் டியுசன் ஆசிரியரான வீட்டின் உரிமையாளரையும் மருத்துவரான அவரது மனைவியையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் அவர்கள் இருவரையும் தனித்தனியாக விசாரணை செய்துகொண்டிருந்த அதேவேளை சிஐடியின் மற்றொரு குழுவினர் அந்த தொடர் மாடியை சோதனையிடும் நடவடிக்கையைஆரம்பித்துள்ளனர். அவ்வேளை சிசிடிவி கமராவில் தகவல்களை சேமிக்கும் டிஆர்வி முறை அகற்றப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.

சிஐடியினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டவேளை பதிலளிக்க முடியாத நிலைக்கு வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் தப்ப முடியாது என்பதை உணர்ந்த அந்த வீட்டின் உரிமையாளர் உண்மையைத் தெரிவித்துள்ளார்.

ரிசாத் 13.14 15ம் திகதிகளில் எங்களுடன் இருந்தார், எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் சிசிடிவி கமராவை செயல் இழக்கச் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆபத்து வந்தால் தான் தப்பிப்பதற்காக அந்த வீட்டின் உரிமையார், ரிசாத் தனது வீட்டிற்கு வந்தததை அருகில் உள்ள வீட்டின் சிசிடிவிகள் பதிவு செய்ததை அகற்றாமல் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

ரிசாத் பதியுதீன் தங்களுடன் மூன்று நாட்கள் இருந்தார். பின்னர் அவர் அட்டாளச்சேனை சென்றுவிட்டார். அக்கறைப்பற்றைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரே ரிசாத்தினை அழைத்துச் சென்றுள்ளார் எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நபருக்கு தெகிவளையில் ஆடம்பர தொடர்மாடியொன்று உள்ளது. அவர் ரிசாத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிஐடியினர் அந்தத் தொடர்மாடியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அந்த வேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தும் நபரின் மூன்று பெண்பிள்ளைகள் அந்த வீட்டில் காணப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டவேளை தங்கள் தந்தை அட்டாளைச்சேனைக்கு சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அட்டாளச்சேனைக்கு சிஐடியினர் குழுவொன்று விரைந்துள்ளது.

அவர்கள் அட்டாளச்சேனையில் உள்ள அந்த வீட்டை சுற்றிவளைத்துள்ளதுடன் ரிசாத்தின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். முதலில் உண்மைகளை வெளிப்படுத்த தயங்கிய அவர் பின்னர் ரிசாத் எங்கிருக்கின்றார் என்பதை தெரிவித்துள்ளார்.

ரிசாத் தெகிவளை எபனேசர் பிளேசில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரிசாத்தினை கைதுசெய்வதற்கான இறுதி நடவடிக்கைகளை சிஐடியின் தலைமை அதிகாரிகள் உட்பட அனைவரும் ஆரம்பித்துள்ளனர்.

ஹக்கீம் என்ற நபரின் இல்லத்தில் ரிசாத் பதியுதீன் மறைந்திருக்கின்றார் என்ற தகவல் சிஐடியினருக்கு கிடைத்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு எபனேசர் பிளேசில் உள்ள வீட்டிற்கு சிஐடியினர் சென்றுள்ளனர்.

அவர்கள் சிறிது நேரத்திலேயே ஹக்கீமின் வீட்டை கண்டுபிடித்துள்ளனர், 3.15அளவில் சிஐடியினர் அந்த வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர்.

ஆனால் உள்ளே எவரும் இருப்பதற்கான அறிகுறிகள் முதலில் தென்படவில்லை என தெரிவித்துள்ள சிஐடியினர் 20 நிமிடங்களுக்குப் பின்னர் எவரும் கதவை திறக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த பின்னர் கதவை உடைத்து உள்ளே வரப்போகின்றோம் என அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 3.35 அளவில் ரிசாத் பதியுதீனின் தனிப்பட்ட உதவியாளர் தமீஜ் கதவைத் திறந்துள்ளார், அவ்வேளை உள்ளே அறையிலிருந்து ரிசாத்தும் வெளியே வந்துள்ளார்.

நீங்கள் என்னை தேடுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும் ஆனால் நீங்கள் என்னை இப்படி கண்டுபிடிப்பீர்கள் என நினைக்கவில்லை என ரிசாத் தெரிவித்துள்ளார். -சிலோன் டுடே-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter