பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் என்று அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித மாளிகாவத்தை பகுதியில் பொலிஸாருக்கும் பாதாளகுழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போதே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீட்டுத்திட்டமொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு மாகந்துரே மதுஷ் தகவல் வழங்கிய நிலையில், அவரை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்ற போது பாதாள குழு உறுப்பினர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது மாகந்துரே மதுஷ் உயிரிழந்ததுடன், இரண்டு பொலிஸார் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது மாக்கந்துரே மதூஷ் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து 220 மில்லியன் ரூபா பெறுமதியான 22 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் பாதள உலக குழு உறுப்பினர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதாள உலககுழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான மாக்கந்துரே மதுஷ், கடந்த ஆண்டு பெப்ரவரிமாதம் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.