பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் அரசியலமைப்பு என்று சொல்லப்படும் கோட்பாட்டமைப்பு மூலமாக கட்டுப்படுத்தப்படும். அவ்வாறான சங்கங்கள் தங்களது செயற்பாடுகளை குறித்த சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்க வேண்டும். அந்த சட்ட திட்டங்களுக்கு முரணாக செயற்படுமிடத்து அது ஒரு சட்ட மீறலாகவே கருதப்படும். அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே குறிப்பிடுவது சாலப்பொருத்தம் எனக் கருதுகின்றேன்.
1. பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சந்தாச் செலுத்த வேண்டும்.
2. சங்கம் தனது செயற்பாடுகளை சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. சங்கம் வசூலிக்கும் நிதிகளுக்கு மட்டுமே அவர்கள் உரித்துடையவர்கள். பாடசாலைக்கு ஏனையவர்கள் உதவி வழங்குவதை தடுக்க முடியாது.
4. சங்கத்தின் சகல நிதி வசூலிப்புகள் செலவுகள் கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றுக்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும். அக்கணக்கு வருடா வருடம் அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வு நிறுவனத்தினூடே பரிசீலிக்கப்பட்டு கணக்காய்வாளரின் அறிக்கை பெறப்பட்டு அது அங்கத்தவருக்கும் பாடசாலை அறிவித்தல் பலகையிலும் அதிபரின் அனுமதியோடு காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
5. குறிப்பிட்ட சங்க உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு வருடமாகும். அதிபரின் அனுமதியுடன் அந்தப்பதவிக் காலத்தை இரண்டு வருடங்களுக்கு நீடிக்கலாம்.
6. 21 நாள் அவகாசம் வழங்கப்பட்டு வருடாந்த பொதுக் கூட்டம் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
7. பாடசாலை அதிபரே வருடாந்த பொதுக் கூட்டத்துக்கான அழைப்பை விடுவார்.
8. இதற்கான அழைப்பு பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தப்படும். ( தற்போது சமூக மீடியாக்களைப் பயன்படுத்த முடியும்)
9. கூட்டத்துக்கான அழைப்பு பாடசாலை விளம்பரப் பலகையிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதிபரின் கையொப்பம் அவசியம்.
10. பழைய மாணவர் சங்கம் பாடசாலைக்கு வழங்கும் சகல நிதிகளும் பொருட்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். பணக் கொடுப்பனவுகளுக்கு பாடசாலையின் பற்றுச் சீட்டு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். இதனை அதிபர், உப அதிபர் மற்றும் பொருளாளர் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
11. பாடசாலையின் கல்வி அபிவிருத்தியை இலக்காக கொண்டே சங்கம் செயற்பட வேண்டும்.
12. அதிபரினதும் ஆசிரியர்களினதும் செயற்பாடுகளை கல்வித்திணைக்களம் கோட்டக் கல்விஅலுவலகத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் ஊடாக கவனிக்கும்.
13. அதிபரினதும் ஆசிரியர்களினதும் செயற்பாடுகள் கல்வி இலக்கு அடைவுகள் என்பன பெற்றோர் ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், போன்றன கையாளும். இவர்களுக்கு பழைய மாணவர் சங்கம் பரிந்துரைகளை வழங்கலாம். அவற்றில் தேவையானவற்றை தெரிவு செய்யும் அதிகாரம் மேற்படி அமைப்புகளிடமே உள்ளது.
14. பழைய மாணவர் சங்கம் அதன் ஒவ்வொரு வருட நிதியாண்டை அடையும் போது அதன் கணக்கு அறிக்கையை பெற்றுக் கொள்ளும் உரிமை அதிபருக்கு உரியது. அவ்வாறு கணக்கறிக்கை ஒப்படைக்கப்படாவிடில் புதிய சங்கம் அந்த கணக்கறிக்கைகளை கேட்டு கடிதம் அனுப்பும்.
15. வருட முடிவின் போது அல்லது அதிகரிக்கப்பட்ட அடுத்த ஆண்டு முடிவின் போது அதிபர் பழைய மாணவர் சங்கத்தை கலைக்க முடியும்.
16. பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய பதவிகளை வகிப்போர் சிறந்த எழுத்தறிவு கொண்டவராகவும் க.பொ.த (சாதாரண தரம் ) மற்றும் உயர்தரம் சித்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
17. பொருளாளர் கணக்குப் பாடத்தில் சிறப்புச் சித்தி பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்படி இன்னும் பல நிபந்தனைகள் உள்ளன. இவற்றில் முரண்பாடுகள் தோன்றினால் ஊர்த்தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜம் இயதுல் உலமா சபை போன்றவற்றின் சமாதானப்படுத்தலை இரு தரப்பாரும் ஏற்று நடக்க வேண்டும்.
நன்றிமுஹம்மத் அலி