கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பயணிகளின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய நிர்வாகம், அனைத்துப் பயணிகளும் சுகாதாரப்பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
நாட்டில் மீண்டும் கொவிட் – 19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், நாளாந்தம் பல பிரதேசங்களில் இருந்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றார்கள்.
இவ்வாறானதொரு அச்சுறுத்தல்மிக்க சூழ்நிலையிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
அதுமாத்திரமன்றி விமானநிலையத்திற்கு வருகைதரக்கூடிய அனைத்துப் பயணிகளும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவும் அனைவரினதும் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் கட்டாயமாக முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் விமானநிலைய நிர்வாகம் வலியுறுத்தியிருக்கிறது.
அதேபோன்று வெளிநாடுகளுக்குச் செல்பவர்களை வழியனுப்பிவைப்பது அவர்களது அன்பிற்குரியவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள முடிவதாகக் குறிப்பிட்டிருக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய நிர்வாகம், எனினும் தற்போது இவையனைத்திற்கும் விதிவிலக்கானதொரு சூழ்நிலையே நிலவுகின்றது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆகவே விமானநிலையத்திற்கு வருகைதரும் பயணிகள் சுகாதாரப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றி நடப்பதுடன் நிச்சயமாக சமூக இடைவெளியைப் பேணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.