மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து வந்த ஒருவரால் அல்லது இந்தியர் ஒருவரால் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவுகின்றது.
ஆடை தொழிற்சாலை தரப்பிலும், கொவிட் 19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான தேசி நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா சார்பிலும், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினரும், தொற்று நோய் தடுப்புப் பிரிவினரும் இந்த பரவல் மூலம் தொடர்பில் கூறும் விடயங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ள நிலையிலேயே, இச்சந்தேகம் தொடர்ந்து நீடிக்கின்றது.
இந்தியாவின் விசாகபட்டிணத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து மூன்று கட்டங்களாக அங்குள்ள இலங்கையர்கள் 341 பேர் இலங்கைக்கு கடந்த ஜூன் 25 முதல் அழைத்து வரப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் 28 நாட்கள் உரிய முறையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பிரென்டிக்ஸ் நிறுவனம் விஷேட ஊடக அறிக்கை ஒன்றினுடாக அறிவித்திருந்தது.
குறித்த ஆடை தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து வந்தோரால் குறித்த கொரோனா வைரஸ் பரவியதாக பரவலாக தகவல்கள் பேசப்பட்ட நிலையிலேயே அந்த நிறுவனம் குறித்த ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இந் நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த, கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதர்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா,
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலைக்கு எவ்வாறு கொவிட் பரவியது என்பது தொடர்பில் இன்னும் மர்மம் நீடிப்பதாக தெரிவித்தார். எனினும் கண்டிப்பாக அது வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்தோ அல்லது ஒரு குழுவினரிடம் இருந்தோ பரவியிருக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக இதன்போது இராணுவதளபதி லெப்டினன் கொமாண்டர் சவேந்ர சில்வா சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் அந்த ஆடை தொழிற்சாலைக்கு இந்தியர்கள் சென்றதாக கூறப்படுவதை அவர் நிராகரித்தார். அதற்கான ஆதாரங்கள் இல்லை என அவர் தெரிவித்திருந்ததுடன், குறித்த ஆடை தொழிற்சாலை இந்தியாவிலிருந்து அழைத்து வந்த பணியாளர்கள் அனைவரும் உரிய முறையில் தனிமைபப்டுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்ப்ட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் விடயங்களில் நேரடியாக பங்கேற்கும், அல்லது சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நேரடியாக மேற்பார்வை செய்யும் சுகாதார பரிசோதகர்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட குறித்த நிறுவனத்தின் எந்தவொரு ஊழியரும் தமது மேற்பார்வையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம். பாலசூரிய, குறித்த ஆடை தொழிற்சலை வெளியிட்டுள்ள அறிக்கை பிரகாரம் உரிய முறையில் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், தமது சங்கத்தின் பரிசோதகர்கள் எவரும் அத்தகைய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் ஆடை தொழிற்சாலைக்கு எந்தவொரு இந்தியவரும் வரவில்லை என அந்த நிறுவனம் தெரிவிக்கும் நிலையில், அந் நிறுவனத்தின் மூலம் ஒன்றினை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ள பிரபல தேசிய ஆங்கில நாழிதழ் ஒன்று, அங்கு இந்தியர்கள் சேவையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த செய்திப் பத்திரிகைக்கு அந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ள ஆஎடை தொழிற்சாலை தரப்பை சேர்ந்த அந்த செய்தி மூலம், குறித்த நிறுவனம் அதனை நிராகரிக்குமானால் மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் சேவையாற்றிய அனைத்து ஊழியர்களினதும் சம்பள அறிக்கை உள்ளிட்ட விபரங்களை வெளிப்படுத்துமாறு சவால் விடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்தியாவிலிருந்து எடுத்து வரப்பட்ட மூலப் பொருட்களை அந்த தொழிற்சாலை பயன்படுத்தியதா என்பது தெரியாது என அந்த செய்தி மூலம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகள் பிரகாரம், மினுவாங்கொடை கொத்தணியில் கண்டரியப்பட்டுள்ள கொரோனா வைரஸானது, ஏற்கனவே கடந்த மார்ச் , ஏப்ரல் மாதங்களில் இலங்கையில் கண்டறியப்ப்ட்ட வைரஸை விட வீரியம் கூடியது என தெரியவந்துள்ளது. அதன்பிரகாரமே, உள்நாட்டில் ஏற்கனவே இருந்த வைரஸை விட, வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் ஊடாக மினுவாங்கொடை கொரோனா கொத்தணி பரவல் ஆரம்பித்திருக்கலாம் என்ற சந்தேகம் மேலெழுந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில், மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் நிறுவனம், இந்தியாவிலிருந்து கடந்த ஜூன் 25 ஆம் திகதி தனி விமானத்தில் 168 பேரையும், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி 125 பேரையும், செப்டம்பர் 22 ஆம் திகதி 48 பேரையும் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது. இதில் இந்தியர்கள் எவரும் உள்ளனரா என்பதை உறுதி செய்துகொள்ள, குறித்த விமாங்களில் வந்த பயணிகளின் பெயர் பட்டியலை பெற்றுக்கொள்ள ஊடகங்கள் முயற்சித்துள்ள போதும், ஸ்ரீ லங்கன் விமான சேவை அதனை வழங்குவதை நிராகரித்துள்ளது.
தமது விமானங்களில் பயனித்த பயணிகளின் பெயர் பட்டியலானது இரகசிய ஆவணம் என தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் ஊடகப் பெச்ச்சாளர் தீபால் பெரேரா, நீதிமன்ற உத்தரவு அல்லது உரிய அதிகாரத் தரப்பின் உத்த்ரவின்றி அதனை மூன்றாம் தரப்பொன்றுக்கு வழங்க முடியாது என மறுத்துள்ளார்.
மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் நிறுவன கொரோனா கொத்தனி காரணமாக, இன்று நண்பகல் வரை 1083 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். எனினும் அந்த கொத்தணியின் பரவல் மூலத்தை எந்த அதிகாரம் வாய்ந்த தரப்பும் இதுவரை வெளியிடவில்லை என்பதுடன், பரவல் மூலம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை இடம்பெறுவதாக தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியிலேயே, வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் பிரகாரம் மினுவாங்கொடை ஆடி தொழிற்சாலைக்குள் கொரோனா வைரஸ், இந்தியாவிலிருந்து வந்த அல்லது இந்தியர் ஒருவரால் பரவியதா எனும் சந்தேகம் வழுக்கிறது.