2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர், துணிச்சலுடன் மஹிந்தவை எதிர்த்தனர். ராஜபக் ஷ குடும்பத்தின் சர்வாதிகாரத்தனம் குறித்து விமர்சனங்களைச் செய்தனர். அவர்களில் சிலர் பின்னர் மஹிந்தவிடமே போய் சரணடையவும் தவறவில்லை.
அவ்வாறு மஹிந்தவின் பின்னால் இருந்தவர்கள் மத்தியிலிருந்து, இப்போது, மீண்டும் எதிர்க்குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு குமார வெல்கமவைக் குறிப்பிடலாம்.
பொதுஜன முன்னணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது. எனினும், மஹிந்தவின் நிழல் தலைமையின் கீழ் உள்ள, பொதுஜன முன்னணிக்குள்ளேயும், ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் மோதல்கள் நிகழ ஆரம்பித்து விட்டன.
பொதுவாகவே, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற போதும் சரி, பாராளுமன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பின் போதும்சரி கட்சிகளுக்குள் முரண்பாடுகளும் மோதல்களும் நிகழ்வது வழக்கம்.
அதிருப்தி கொண்டவர்கள் தலைமைத்துவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள். அதன்பின்னர் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள். அல்லது வெளியேற்றப்படுவார்கள்.
அவ்வாறு வெளியே செல்பவர்கள் புதிய கட்சியை தொடங்குவார்கள் அல்லது, இதுவரை இருந்த கட்சியின் பிரதான எதிரியுடன் கூட்டு வைத்துக் கொள்வார்கள் அல்லது அதில் இணைந்து கொள்வார்கள். இதுதான் வழக்கம்.
இலங்கை அரசியலில் மாத்திரமன்றி, மூன்றாம் உலக நாடுகளின் அரசியலிலும் இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணமான விடயங்கள். ஜனநாயகம் நன்கு விருத்தியடைந்த, கொள்கை அரசியல் அதிகம் பின்பற்றப்படுகின்ற நாடுகளில், இது அரிது.
2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை மஹிந்த ராஜபக்ஷ வெளியிடும் வரை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அவருக்கு எதிராகப் பேசுகின்ற – செயற்படுகின்ற துணிச்சல் யாருக்குமே இருக்கவில்லை.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் தான், மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன, ஹிருணிகா பிரேமச்சந்திர, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திசாநாயக்க ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியே வந்து, ஐ.தே.க.வுடன் கைகோர்த்தனர்.
ராஜபக் ஷ குடும்பத்தின் ஆதிக்கத்துக்கு எதிரான மனோநிலையில் இருந்த போதும், பெரும்பாலானவர்கள் துணிச்சலின்றி, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கே ஆதரவளித்தனர். ஏனென்றால், மஹிந்தவைத் தோற்கடிக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்களுடன் பகைத்துக் கொள்ள விரும்பாமல் ஒதுங்கியிருந்தனர்.
ஆனால், மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக குரல் கொடுப்பது ஆபத்தானது, அரசியலை சூனியமாக்கி விடும் என்ற அச்சமான நிலை, இந்த ஐந்து ஆண்டுகளில் முற்றாகவே மாறியிருக்கிறது என்பதை இப்போது உணர முடிகிறது.
2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர், துணிச்சலுடன் மஹிந்தவை எதிர்த்தனர். ராஜபக் ஷ குடும்பத்தின் சர்வாதிகாரத்தனம் குறித்து விமர்சனங்களைச் செய்தனர். அவர்களில் சிலர் பின்னர் மஹிந்தவிடமே போய் சரணடையவும் தவறவில்லை.
அவ்வாறு மஹிந்தவின் பின்னால் இருந்தவர்கள் மத்தியிலிருந்து, இப்போது, மீண்டும் எதிர்க்குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு குமார வெல்கமவைக் குறிப்பிடலாம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான அவர், ஆரம்பத்திலிருந்தே மஹிந்தவுக்குப் பின்னால் இருந்தவர். இப்போது மஹிந்த ராஜபக் ஷவின் நம்பகத்துக்குரியவர்களாக இருப்பவர்கள், அவருடன் சேர்ந்து கொள்வதற்கு முன்னரே, மஹிந்தவை வலுவாக ஆதரித்தவர்.
அப்படிப்பட்டவர் இப்போது மஹிந்தவை எதிர்க்காவிடினும், அவரது முடிவையும், அவரது கட்சியின் தீர்மானத்தையும் எதிர்க்கின்ற நிலைக்கு வந்திருக்கிறார்.
2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவைத் தண்டிக்க மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது, அதனை எதிர்க்கும் துணிச்சல் இருக்கவில்லை என்று லங்காதீப பேட்டியில் கூறியிருக்கும் குமார வெல்கமவுக்கு இப்போது அந்த துணிச்சல் வந்திருக்கிறது.
அவருக்கு இப்போது துணிச்சல் வந்திருப்பதற்கு, மஹிந்தவிடம் இப்போது அதிகாரம் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், அவர் மஹிந்தவின் தீர்மானத்தை எதிர்ப்பதற்குக் காரணம் கோத்தாபய ராஜபக் ஷ தான்.
கோத்தாபய ராஜபக் ஷவை வன்மையாக எதிர்க்கின்றவராக குமார வெல்கம மாத்திரமே இருக்கிறார்.
இன்றைய நிலையில் ஐ.தே.க.வினரோ, ஜே.வி.பி.யினரோ கூட, கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிரான பிரசாரங்களை இன்னமும் ஆரம்பிக்கவேயில்லை. ஆனால், குமார வெல்கம அதனை பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டார்.
அவர், கோத்தாபய ராஜபக் ஷவை கொலைப் பின்னணி கொண்டவர் என்றும், ஜனநாயகத்துக்கு பொருத்தமற்றவர் என்றும், போருக்குப் பயந்து ஓடியவர் என்றும் வெளிப்படுத்தி வரும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் கோத்தாபய ராஜபக் ஷவின் அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கலைக் கொடுக்கக் கூடியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மஹிந்தவை மதிப்பவர்கள் கூட, அவரது குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். அதுதான், குமார வெல்கம போன்றவர்களுக்குப் பலத்தைக் கொடுக்கிறது.
குமார வெல்கம இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருப்பதான துணிச்சலில் தான் பொதுஜன முன்னணிக்கு சவால் விடுத்து வருகிறார்.
குமார வெல்கமவின் இந்த போர்க்கொடி பொதுஜன முன்னணிக்குள் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறமுடியாது. ஆனால், தன்னைப் போல குடும்ப ஆதிக்கத்தை எதிர்க்கும் பலர் இருக்கிறார்கள் என்று குமார வெல்கம கூறியிருப்பதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.
பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரிக் கட்சிகள் குறிப்பாக, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் இன்னமும் சமல் ராஜபக் ஷவை வேட்பாளராக நிறுத்துவதற்கே ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
எனினும், வாசுதேவ, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர போன்ற இடதுசாரிகள், இப்போது முன்னைய பலத்துடனோ, கொள்கை ஓர்மத்துடனோ இல்லை. அவர்கள் ஓரிரு பாராளுமன்ற ஆசனங்களுக்காக மஹிந்தவுக்கு வால் பிடிக்கும் அரசியல்வாதிகளாக மாறி விட்டார்கள்.
எனவே, இந்த காகித இடதுசாரிகள் கோத்தாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் எந்தளவுக்கு உறுதியாக இருப்பார்கள் என்று கூறமுடியாது, எனினும், அவர்களை தமது வழிக்குக் கொண்டு வருவது மஹிந்தவுக்கு அவசியமானது.
ஏனென்றால், சிறுபான்மையினரின் வாக்குகள் கோத்தாவுக்குக் கிடைப்பது கடினம். ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனியாக போட்டியில் குதிக்கப் போவதாக தெரிகிறது.
இத்தகைய நிலையில், தனியே கோத்தாபய ராஜபக் ஷ சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் நம்பி அரியணை ஏறும் கனவில் இருக்க முடியாது, அதுபற்றி அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தாலும். அது சவாலானது.
கோத்தாபய ராஜபக் ஷ தோல்வியடையும் நிலை ஒன்று ஏற்பட்டால், அவருக்கு அதற்குப் பின்னர் அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய் விடும். ஏனென்றால், அடுத்தமுறை மஹிந்த ராஜபக் ஷ தனது மகன் நாமல் ராஜபக் ஷவை நிறுத்த முனைவாரே தவிர, தோற்றுப்போன தம்பியை மீண்டும் நிறுத்த முயற்சிக்கமாட்டார்.
எனவே. கோத்தாபய ராஜபக் ஷவைப் பொறுத்தவரையில் அரசியலில் தொடர்ந்து ஈடுபடும் முடிவில் இருப்பாரெனில், ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றி மிகவும் அவசியமானது. இல்லையேல் அவரது இருப்பு அரசியலில் கேள்விக்குள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறான நிலையில் தான், குமார வெல்கம போன்ற உள்ளக எதிரிகள் கோத்தாவுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள்.
கோத்தாபய ராஜபக் ஷவை தான் ஆதரிக்கப்போவதில்லை என்றும், அவரை முன்னிறுத்த எடுத்த முடிவு கட்சியின் தலைவர்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்றும் குமார வெல்கம குற்றம்சாட்டியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ தனது கட்சிக்குள் சர்வாதிகாரத்தனத்துடனேயே முடிவுகளை எடுக்கிறார். இன்னமும் அவர் பொதுஜன முன்னணியின் உறுப்பினராக கூட இல்லை. அதன் நிழல் தலைவராக இருந்து கொண்டே, மஹிந்த எடுக்கும் தான்தோன்றித்தனமான முடிவுகள், அவருக்கு எதிரான அலையை உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய நிலையில், குமார வெல்கம பொதுஜன முன்னணிக்குள் இருந்து வெளியேறி சுதந்திரக் கட்சியுடன் மீண்டும் இணைந்து செயற்பட முனைந்தாலோ, அல்லது ஐ.தே.க.வுடன் இணைய முயன்றாலோ, இல்லை தனித்து நின்றே எதிர்த்துக் குரல் எழுப்பினாலோ, கோத்தாபய ராஜபக் ஷவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
ராஜபக் ஷ குடும்ப ஆட்சி தான் 2015 தேர்தலில் மக்களின் வெறுப்பாக வெளிப்பட்டது.
மீண்டும் அத்தகையதொரு ஆட்சிக்குள் செல்வதற்கான முயற்சிகளை ராஜபக் ஷ குடும்பம் மிக கவனமாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், குடும்ப ஆட்சியின் ஆபத்தை மிக கவனமாக மக்கள் முன் கொண்டு செல்லும் போது, அது மஹிந்த தரப்புக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும்.
அத்தகைய சவாலை ஏற்படுத்தும் நிலையில் தான் குமார வெல்கம இருக்கிறார். அவர் மட்டும் தான் இந்த அணியில் இருக்கிறார் என்றில்லை. இன்னும் பலர் குடும்ப ஆட்சிக்கு எதிராக கிளம்பும் நிலை ஏற்படும் போலவே தெரிகிறது.
மஹிளந்த கூட, 2014இல் தேர்தலுக்கு அழைப்பு விடும் வரை தனக்கான சவால் தனது மடிக்குள் தான் இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தார். ஆனால் கோத்தாவுக்கு அப்படியில்லை. அவருக்கான சவால் அவரது அணிக்குள்ளேயே இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தான் களமிறங்கப் போகிறார்.
-சத்ரியன்