தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடையும் அபாயம்

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட முடியாமல் போவதுடன் எதிர்வரும் காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடைவதற்கான அபாய நிலைமை உருவாகும் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கலாநிதி என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

“கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் என தங்களை அடையாளப்படுத்தியுள்ள போலி கும்பலொன்றின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு இறக்குமதி செய்யும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் திங்கட்கிழமையன்று வெளியிடவுள்ளார்.

உண்மையில், இது எந்த விதத்திலும் நாட்டுக்கு நன்மை பயக்காத ஒரு விடயமாகும். ஏனெனில்,  இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பின் பின்னணியில் மறைமுகமாக பாரிய  குளறுபடிகள் உள்ளன.

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என கூறிக்கொண்டுள்ள இந்த கும்பல் பாம் எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து சந்தைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது.

‘பொல் குருட்ட’  என்ற தேங்காயின்ஒரு பகுதியை பயன்படுத்தி அதனுடன் எண்ணெய்த்தன்மையான பதார்த்தமொன்றை கலந்து பாம் எண்ணெய்யுடன்  கலவை செய்து விற்பனை செய்வதே இந்த மோசடிக் கும்பலின்  கள்ளத்தனமாகும். 

இதனால் பாவனையாளர்களுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்காது போகும்” என்றார்.

இந்த நடவடிக்கையினால் சந்தையில் தேங்காய்  ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை அதிகரிக்கும் அபாய நிலை உருவாகும் என நுகர்வோர்  உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter