கொரோனா பரவலை தடுப்பதற்கு அக்குறணை பிரதேச சபையின் முன் ஏற்பாடுகள்…
அக்குறணை மற்றும் அலவதுகொட ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள உணவகங்களுக்கு சுகாதார வழிகாட்டல்களை வழங்கி முறைப்படுத்தும் நோக்கில் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் உட்பட அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையில் சுகாதார குழு என்பன இணைந்து உணவகங்களின் உரிமையாளர்களுக்கான விஷேட விழிப்புணர்வு நிகழ்வு இரண்டு கட்டங்களாக பிரதேச சபையிலும், பின்னர் அக்குறணை பிரதேச செயலக கேட்போர்கூடத்திலும் இடம்பெற்றது.
அத்துடன் கடந்த காலங்களில் அக்குறணை நகரம் கொரோனா தொற்று காரணமாக இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதை அனைவரும் அறிவோம், அவ்வாறான சூழ்நிலையினை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எதிர்கொண்டு கட்ந்து வந்த நிலையில் தற்போது நாட்டில் கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி அவருவதை அறிவோம்.
கொரோனா தொற்று மீண்டும் அக்குறணை நகரில் பரவுவதை தடுப்பதற்கு உணவகங்களால் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும், சுகாதார வழிகாட்டல்களை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பிலும் கடை உரிமையாளர்களுக்கு தெளிவு வழங்குவது இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது. மேற்படி கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட முக்கிய விடயங்களாக,
•உணவகங்களில் நுகர்வோருக்கு தரமான பொருட்களை வழங்குவதுடன், சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற பட வேண்டும். •உணவகங்களில் உணவு தயாரிக்கும் போது சுவையூட்டிகளை பயன்படுத்துவதை முற்றாக தவிர்த்துக் கொள்வது.
•உணவகங்களின் சமயலறையினை சுத்தமாக வைத்துக் கொள்ளல்.
•உணவகங்களில் துர்நாற்றம் ஏற்படாத வண்ணம் தினமும் முழுமையாக சுத்தம் செய்து கொள்ளல்.
•உணவகங்களின் கழிவு நீரினை முறையாக அகற்றுவது மற்றும் திண்மக்கழிவுகளை பிரதேச சபையின் ஊழியர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க முறையாக அகற்றுவது.
•ஹோட்டல் மற்றும் பேக்கரி போன்ற கடைகளில் நுகர்வோருக்கு பொருட்களை வழங்கும் வேலையாட்கள் கட்டாயமாக கையுறை மற்றும் முகக்கவசத்தினையும் அணிந்து கொள்வது.
அரச சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் அனைத்து அறிவுறுத்தல்களையும் முழுமையாக பின்பற்றப்படல் வேண்டும்! ,போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச சபை கெளரவ தவிசாளர் உட்பட கெளரவ உறுப்பினர்கள், அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சன்ஜீவ குருந்துகஹமட அவர்கள், அலவதுகொட பொலிஸ் அதிகாரி திரு ஏக்கநாயக்க அவர்கள், சுகாதார உப பொலிஸ் அதிகாரி திரு சமரகோன் அவர்கள், அக்குறணை பிரதேச சபை செயலாளர் திருமதி சாமிந்தி அவர்கள், உட்பட அரச அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், அக்குறணை வர்த்தக சங்க தலைவர் ரியாஸ் அவர்கள் மற்றும் அலவதுகொட வர்த்தக சங்க தலைவர் திரு செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.