நாட்டிலே கொரோனா பீதி உருவானதை அடுத்து மக்கள் முண்டியடித்துக் கொண்டு முதலில் சென்றது வர்த்தக நிலையங்களுக்குத்தான்.
அரசாங்கம் எங்கே ஊரடங்கு சட்டம் அல்லது ஊர் முடக்கத்தை அறிவித்து விடுமோ? என்று அஞ்சிய மக்கள் கடைகளுக்குச் சென்று தமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொள்வனவு செய்தனர்.
ஒரு சிலர் இரண்டு மாதங்களுக்குத் தேவையான பொருட்களைக் கூட வாங்கி களஞ்சியப் படுத்தியுள்ளனர். அனேகமாக பலசரக்குக் கடைகள், சில்லறைக் கடைகளில் பொருட்கள் அனைத்தும் காலியான நிலையில் எதுவும் இன்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.
கொரோனா தொடர்பான பேச்சு அடிபட்ட உடனேயே பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. தவிச்ச முயல் அடிப்பது போன்று சில வர்த்தகர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவதாக மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் தேங்காயின் விலை அதிகரித்ததை அடுத்து 65 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டது. இதனைக் கடைப்பிடிக்கத் தவறும் வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யலாம் என்றும் அறிவித்தது.
இதனால் தேங்காய் விற்பனையில் ஈடுபட்ட பலரும் தயங்கியதை அடுத்து தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் நூறு ரூபாய்க்கு கூட ஒரு தேங்காயை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் அடிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
கொரோனாவால் மக்கள் தவித்துக் கொண்டிருக்க, மக்களின் பணத்தை சுரண்டும் வகையில் பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் பன்மடங்கு உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இன்றைய சூழலில் மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வேலைகள் இழந்த நிலையிலும் பலர் வருமானம் அற்ற நிலையிலும் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று ஏங்கிக் கொண்டிருக்கையில், பொருட்களின் விலையும் அதிகரித்து செல்லுமானால், எவ்வாறு மக்கள் மூன்று வேளை உணவை பெற்றுக் கொள்வது என்று சிந்திப்பது அவசியம்.
மேலும் பெரும்பாலான மக்கள் கையில் பணமில்லாத நிலையில், வங்கிக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தியே பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.
இறுதியில் வருமானமின்றி எவ்வாறு தமது கடனை அடைப்பது என்ற இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்படலாம்.
தற்போதைய சூழலில் வறிய குடும்பங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தை சேர்ந்ததாகும்.
பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், அத்தியாவசிய பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி உணவுப் பொருட்களின் விலைவாசிகளை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக, அரசாங்கம் எந்தவிதமான தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதும் இன்றியமையாதது.
குறைந்தபட்சம் அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பதுடன் பொருட்களை பதுக்குவோர் மற்றும் அதிக விலைக்கு விற்போரை கண்டுபிடித்து சட்டத்தின் பிடியில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
இதனிடையே உணவுப் பொருட்களின் கலப்படங்கள் அதிகரித்துள்ளதாகவும் எந்த ஒரு இடத்திலும் நம்பி பொருட்களை வாங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் நுகர்வோர் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சில வர்த்தகர்களின் நடவடிக்கைகளால் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியே ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான வரையறையும் இன்றி மனம்போன போக்கில் பலரும் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.
எனவே இந்த நிலையை தடுத்து நிறுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறோம்.