கொரோனா வைரசின் “மூன்றாம் அலையே” இலங்கையில் – பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாதுகாப்பு செயலாளரிடம் கொவிட் -19 பரவல் நிலைமைகளை கையாள முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார். 

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் கட்ட பரவலாகவே நாம் இதனை பார்க்கின்றோம். 

முதல் முதலில் இலங்கையில் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோதும், பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் அலையொன்று பரவ ஆரம்பித்த போதும் துரிதமாக நாம் செயற்பட்டோம். இராணுவமும் புலனாய்வுத்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து துரிதமாக செயற்பட்டு பரவலை கட்டுப்படுத்தினோம். ஏனைய நாடுகளை போல் சமூக பரவலை இலங்கையில் ஏற்படுத்த இடமளிக்கவில்லை.

எதிர்பாராத விதமாக இப்போதும் மூன்றாம் அலையொன்று உருவாகியுள்ளது என்றே நாம் கருதுகின்றோம். 

கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இராணுவமும், புலனாய்வுத்துறையும், சுகாதார அதிகாரிகளும் எவ்வாறு செயற்பட்டனரோ அதேபோல் இந்த அலையையும் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter