பொதுமக்களிற்கு இலங்கை மருந்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் விடுக்கும் முக்கிய எச்சரிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், எதிர்வரும் வாரங்களில் மக்கள் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கும் இலங்கை மருந்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணருமான பிரசன்ன குணசேன, மக்கள் தமது செயற்பாடுகளை முறையாகக்  கட்டுப்படுத்திக்கொண்டால், கொரோனா வைரஸ் பரவல் பேரழிவிலிருந்து மீளமுடியும் என்றும், அன்றேல் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

நாட்டில் கடந்த மார்ச்  மாதமளவில்  கொரோனா  வைரஸ் பரவல் தீவிரமடையத் தொடங்கியதை அடுத்து, நாடு முற்றாக முடக்கப்பட்டு தொற்றுப் பரவல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் மீண்டும் இம்மாத ஆரம்பத்தில் வெலிக்கடை  சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையம், இராஜாங்கனைப்பகுதி ஆகியவற்றில் பெருமளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் நிலை தோன்றியிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் காணொளியொன்றை வெளியிட்டிருக்கும் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன, அதில் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பொன்று ஏற்பட்டது. இதனையறிந்துகொண்ட மக்கள் பொருட்களை வாங்குவதற்காகப் பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்று முட்டிமோதுகிறார்கள்.  நீங்கள் செயற்பட வேண்டிய முறை இதுவல்ல. எதிர்வரும் வாரங்களில் நீங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதென்றால், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்.

உங்களுக்கு அல்லது உங்களது உறவினர்களுக்கு வாழ்க்கையை நடத்திச்செல்வதற்கு மிகவும் அத்தியாவசியமான தேவைப்பாடுகள் காணப்படுமாயின், அவற்றுக்காக மாத்திரம் வெளியே செல்லுங்கள். மாறாக திருமண நிகழ்வுகள், மரணச்சடங்குகள், நண்பர்களைச் சந்தித்தல், பிரத்யேக வகுப்புகள் போன்றவற்றுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

நாட்டுமக்கள் அனைவரும் தத்தமது செயற்பாடுகளை சரியாகக் கட்டுப்படுத்திக்கொண்டால் எமது நாடு இந்தப் பேரழிவிற்குள் சிக்குவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும். அவ்வாறல்லாவிடின், தற்போதுள்ள நிலைமை மேலும் மோசமடைவதற்கும் இடமிருக்கிறது என்பதை மனதிலிருத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

வீரகேசரி பத்திரிகை (நா.தனுஜா)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter