அமெரிக்காவானது படைகளின் நிலைப்பாடு தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கையிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அந்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையில் பேச்சுவார்த்தைகளின் கீழுள்ள படைகளின் நிலைப்பாடு தொடர்பான அந்த உடன்படிக்கை வரைபின் பிரதியொன்றின் மூலமே மேற்படி தகவல் அறியப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகையொன்று தெரிவிக்கிறது.
அந்த உடன்படிக்கையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் பல இலங்கையின் இறையாண்மையைப் பாதிப்பனவாக உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க விமானங்களும் கப்பல்களும் தரித்திருத்தல் மற்றும் பரிசோதனையிலிருந்து விடுவிக்கப்படுவதை அமெரிக்கா நாடுகிறது.
இதன் பிரகாரம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கான இறையாண்மை உரிமையின் கீழ் இந்நாட்டின் கடற்படை, கரையோர காவல் படை, சுங்கப் பிரிவு உள்ளடங்கலான பாதுகாப்பு பிரிவுகள் எதுவும் இலங்கைத் துறைமுகங்களை வந்தடையும் அமெரிக்க இராணுவ கப்பல்கள் மற்றும் இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் அல்லது தரையிலுள்ள அமெரிக்க வாகனங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் என்பனவற்றுக்குள் பிரவேசிக்க முடியாது. அத்துடன் அமெரிக்கா இலங்கைக்குள் அனுமதிப் பத்திரம், சுங்க வரிகள், வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களிலிருந்தும் விதிவிலக்கை நாடுகிறது.
அதுமட்டுமல்லாது அமெரிக்கா தனது படையினர் இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் கடமையிலிருக்கும்போது சீருடைகளை அணிவதற்கும் ஆயுதங்கள் மற்றும் வானொலித் தொடர்பாடல் உபகரணங்களை ஏந்திச் செல்வதற்கும் அங்கீகாரமளிக்கப்பட வேண்டும் என விரும்புகிறது.
இலங்கை அரசியலமைப்பு மற்றும் சாதாரண சட்டங்கள் ஆகிய இரண்டினதும் விதிமுறைகளின் பிரகாரம் ஆயுதப் படையினருக்கும் பொலிஸாருக்கும் மட்டுமே இவற்றை மேற்கொள்ள அதிகாரமுள்ளது. அனுமதிப்பத்திரத்தின் மூலம் அதிகாரத்தைப்பெற்றுள்ள இலங்கையர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக உள்ளனர்.
இதற்கு மேலதிகமாக அமெரிக்கப் படையினரும் ஒப்பந்தக்காரர்களும் தமது அமெரிக்க அடையாளப்படுத்தலை மட்டுமே பயன்படுத்தி தனியாகவோ அன்றி கூட்டமாகவோ இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் கோரிக்கையாகவுள்ளது. இதன் பொருள் அவர்கள் இலங்கை வருவதற்கு கடவுச்சீட்டுகளையோ அன்றி விசாக்களையோ எடுத்துவர மாட்டார்கள் என்பதாகும்.
படைகளின் நிலைப்பாடு தொடர்பான உடன்படிக்கைக்கு முன்னாள் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவாசத்துடன் இணைந்து ஊக்குவித்து வரும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கடந்த புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில், அந்த உடன்படிக்கை தீங்கு விளைவிக்காது எனவும் அது ஆபத்தானதல்ல எனவும் தெரிவித்திருந்தார். அந்த உடன்படிக்கையை இலங்கை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவுக்கான அதன் ஏற்றுமதிகளை மட்டுமல்லாது புதிய வேலை வாய்ப்புக்களையும் இழக்க நேரிடும் என அவர் எச்சரித்திருந்தார்.
அவர்கள் இருவரும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்படிக்கைக்கும் ஆதரவளித்திருந்தனர்.
அமைச்சர் சமரவீர மற்றும் செயலாளர் காரியவசத்தால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தம் காரணமாகவே அந்த உடன்படிக்கை வரைபு அமைச்சரவை அங்கீகாரத் திற்கு அவசர அவசரமாக கொண்டு செல் லப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செய லாளரான பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்திருந்தார்.
அந்த உடன்படிக்கை அனைத்து ஆயுதப் படையினருக்கும் அவர்களது விமர்சனத்துக் காக வழங்கப்பட்டது. இலங்கையில் கால டியெடுத்து வைக்கும் அமெரிக்கப் படையி னர் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்து அலகுகளையும் உள்ளடக்கிய இணைப்பு களின் சிங்களப் பதிப்பு அமைச்சர்களின் முன்பாக வைக்கப்படவில்லை. ஆங்கிலப் பதிப்பு மட்டுமே முன்வைக்கப்பட்டது.