கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் ஊடரங்குச் சட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்பட வில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன , நாட்டில் வைரஸ் தொற்றாளர்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்றால் இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக கூறினார்.
வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் , நாடு மீண்டும் முடக்கப்படுமா , ஊரடங்கு அமுல் படுத்தப்படுமா என்ற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ள நிலையில் இது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
நாடுபூராகவும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவல் தலைத்தூக்கியுள்ள பகுதிகளிலும் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதா ? என்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
இதேவேளை தற்போது நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் பகுதிகளிலும் , அந்த நபர்களுடன் தொடர்புக் கொண்ட நபர்களையும் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊரடங்கு தொடர்பில் இன்னமும் அவதானம் செலுத்தப்படவில்லை. இருந்தபோதிலும் வைரஸ் தொற்றளர்கள் மேலும் அதிகமாக கண்டறியப்பட்டால். இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. (வீரகேசரி பத்திரிகை – செ.தேன்மொழி)