19 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு ஆளும்கட்சி கூறுகின்ற முக்கியமான காரணம், இது ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்காகவும், ராஜபக்ஷ குடும்பத்துக்கு தடைகளைப் போடுவதற்காகவும் உருவாக்கிக் கொள்ளப்பட்டது என்பது தான்.
19 ஆவது திருத்தச்சட்டம், பிரதமரின் அதிகாரங்களை வலுப்படுத்தியது என்பது உண்மை. அதேவேளை, நாடாளுமன்றத்துக்கும் அதிகாரங்களைக் கொடுத்தது.
அதற்காக ஜனாதிபதியின் அதிகாரங்கள் முழுமையாகப் பறிக்கப்பட்டன என்பதோ, ரணில் விக்ரமசிங்க பிரதமருக்கான அதிகாரங்களை வைத்துக் கொண்டு தன் விருப்பப்படி ஆட்சியை நடத்தினார் என்பதோ மிகையான கருத்து.
பிரதமருக்கு வரையறையற்ற அதிகாரங்கள் இருந்திருந்தால், அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் மிதிபட்டுக் கொண்டிருந்திருக்கமாட்டார்.
எனவே, பிரதமருக்கு வரையறையற்ற அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதால் தான், 20 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பது தவறான கருத்து.
ஜனாதிபதியின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் நோக்கில், இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.
அண்மையில், யாழ்ப்பாண வணிகர் கழகம், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.
அந்தக் கடிதத்தில், உளுந்து இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளதால், தமிழரின் பாரம்பரிய உணவுகளான வடை, தோசையை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், சாதாரண மனிதர்கள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
உளுந்து இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்பதைக் கோருவதே, அந்தக் கடிதத்தின் நோக்கம்.
அந்தக் கடிதம் கிடைத்ததும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உடனடியாக ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜயசுந்தரவிடம், உளுந்து இறக்குமதி தடையை மீளாய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகின.
இறக்குமதி தடையை விதிக்க வேண்டியது நிதியமைச்சு தான். அது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கையில் தான் உள்ளது.
ஆனால், அந்த தடையை விதித்தது, ஜனாதிபதி. அதனால் தான், ஜனாதிபதியின் செயலாளரிடம், தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கோர வேண்டிய நிலை பிரதமருக்கு ஏற்பட்டது.
பிரதமரே இந்த தடையை நீக்கும் விவகாரத்தை நேரடியாக கையாண்டிருக்கலாம். பிரதமர் அதிகாரம் மிக்கவராக இருந்திருந்தால், அவர் அந்த முடிவை எடுத்திருப்பார்
ஆனால், அவர் ஜனாதிபதியின் செயலாளரிடம், தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
இதிலிருந்து, இரண்டு விடயங்கள் வெளிப்படுகின்றன.
ஒன்று, 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழேயும் கூட, ஜனாதிபதி அதிகாரம் மிக்கவராகத் தான் இருக்கிறார்.
இரண்டு, அதிகாரம் பெற்றவராக கூறப்படும் பிரதமர் இப்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியவராக இல்லை.
இப்போதைய ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை விட, கூடிய அதிகாரங்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இருந்தது.
அவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரங்களைப் பலப்படுத்திக் கொள்ளவே, 19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார் என்பது முற்றிலும், தவறானது.
அவ்வாறு பிரதமருக்கு அதிகாரங்கள் இருந்தாலும், அதனை அவர் முழுமையாக அனுபவிக்கக் கூடிய நிலை இருக்கவில்லை.
தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்குத் தான் அந்த அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும், வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
ஆனால், அவர் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறாரா – அல்லது பயன்படுத்திக் கொள்ளக் கூடிய நிலையில் இருக்கிறாரா என்பதே இப்போதுள்ள கேள்வி.
உளுந்து இறக்குமதி தடையினால், தோசை, வடை போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, இது சிறுதொழில் முயற்சியாளர்கள், பொதுமக்களைப் பாதிக்கிறது என்றும் தடையை நீக்கக் கோரி பிரதமரிடம் முறையிடப்பட்டது, இது தான் முதல் முறையல்ல.
இந்த தடை விதிக்கப்பட்ட கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே பிரதமரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதும் கூட தடையை விதித்தது ஜனாதிபதி தான் என்றும், அவருடன் இதுபற்றிக் கலந்துரையாடுவதாகவும் கூறியிருந்தார் பிரதமர்.
அப்போது, உளுந்து விலை, 425 ரூபாவாக இருந்தது. இப்போது இறக்குமதி செய்யப்பட்ட உழுந்தின் விலை 1300 ரூபாவாக அதிகரித்திருக்கிறது.
ஆறு மாதங்களாகியும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்கு பிரதமரால் தீர்வு காண முடியவில்லை. மைத்திரியும், ரணிலும் கூட இந்தளவுக்கு விலகியிருக்கவில்லை.
ஒருவரின் அதிகாரத்தில் மற்றவர் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கின்றரா அல்லது, ஜனாதிபதி மேலான அதிகாரம் செலுத்துபவராக மாறியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
19 ஆவது திருத்தத்தின்படி, பிரதமர் அதிகாரம் படைத்தவராக இருந்தால், ஜனாதிபதி எவ்வாறு மேலான அதிகாரத்தை பயன்படுத்த முடியும்?
அதேவேளை, தற்போதைய நிலையில், பிரதமரை விட கூடுதலான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு இருக்கின்ற போதும், நாடாளுமன்றத்துக்குப் பகிரப்பட்ட அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் பலம், ஆளும்கட்சிக்கு இருக்கின்ற போதும், எதற்காக 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதில் அவசரம் காட்டப்படுகிறது?
அவ்வாறாயின் இப்போதுள்ள அதிகாரங்களை விட மிகப்பெரிய பலம் படைத்தவராக மாறுவதற்கு ஜனாதிபதி எத்தனிக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது.
ஜனாதிபதியே 20 ஆவது திருத்த வரைவை தயாரித்திருக்கிறார். அமைச்சரவைக் கூட்டத்தில் திருத்தங்கள் முன்வைப்பதற்கும் அவரே தடையாக இருந்திருக்கிறார்.
அவற்றில் இருந்து, பிரதமர் இப்போது அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடிய நிலையில் இல்லையா என்ற வலுவான சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
ஜனாதிபதியும் பிரதமரும் சகோதரர்களாக இருந்த போதும், அதிகாரப் போட்டி அவர்களுக்கிடையில் இல்லை என்றோ- அவ்வாறான போட்டி ஏற்படாது என்றோ கருத முடியாது.
ஒரு காலத்தில் மகிந்த ராஜபக்ஷ வல்லமைமிக்க ஒரு தலைவாகவே பார்க்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒரு தலைவராக இருந்தாலும், அவரது காலடியில் இருந்தவர்கள் எல்லோரும் இப்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை.
மகிந்த ராஜபக்ஷ ஒரு ஜனவசியமிக்க தலைவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் அவர் பலமிழக்கத் தொடங்கியிருக்கிறார்.
உச்சநிலையில் இருந்தாலும், அதிகாரம் கொண்டவராக இருக்க முடியாதிருப்பது தான், அவருக்கு வந்திருக்கும் சோதனை.